குரங்கு மனசு பாகம் 40

உம்மா நாநா.. நம்மா நாநா இங்க," அவனால் பேச முடியவில்லை.

"நாநா க்கு என்னடா? என்னசரி பிரப்லமா? சொல்லு ஆதில், பயமா இருக்குடா.. என்ன நடந்திச்சு.. சொல்லுடா, ஆதில் சொல்லு..."

"அவன் நமக்கு எல்லாம் துரோகம் செஞ்சிட்டான் மா,"

"ஆதில்..." வாஹிதாவுக்கு இன்னும் இரண்டாமவன் என்ன சொல்ல வருகின்றான் என்பதனை ஊகிக்க முடியாமல் இருந்தது.

"ஆமாம்மா அந்த மாசுபட்டவள மனைவியாக்கிட்டான்மா"

நாற்திக்கும் கேட்க, ஆவேச உச்சத்தில், கதறி அழுதவனாய் தாயிடம் முறையிட்டான். மறுமுனையில் ஆதிலின் இவ் வார்த்தைகளை கனவிலும் எதிர்பார்க்கா வாஹிதா, பேச்சு மூச்சற்று அப்படியே சாய்ந்தாள். சுற்றியுள்ள எல்லாமே அவளுக்கு இருளாகத் தோன்றியது. "அந்த மாசுபட்டவள நாநா மனைவியாக்கிட்டான்மா" என்ற வார்த்தை மட்டும் அவள் செவியோறம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்க தொப்பென்று நிலத்தில் சாய்ந்தாள்

"உம்மா உம்மா.. உம்மா நீங்க லய்ன்ல இருக்கீங்களா?"

தாயுக்கு ஏதோ விபரீதம் என்பதை மட்டும் ஊகித்துக் கொண்ட ஆதில், இவர்களுக்காக தாமதியாது தன்னை சுதாகரித்துக் கொண்டு ஆட்டோவைத் திருப்பி மின்னல் வேகத்தில் வீடு நோக்கி விரைந்தான். இங்கு தான் உளப்பூர்வமாய் விரும்பியவளை மனைவியாக்கிக் கொண்ட களிப்பில், ரெஜிஸ்டார் ஆபிஸ் விட்டு வெளியே வந்த அதீக் சுற்றிலும் தம்பியைத் தேட, அங்கு எங்கும் அவனைக் காணாததால் சிறிது பதற்றமாகவே உணர்ந்தான்.

"சர்மி.."

மனைவியின் கையை ஆசையோடு பற்றிக் கொள்ள, ஒருகணம் அப்படியே மெய்மறந்து போனாள் சர்மி.

"சர்மி வா நாங்க நம்ம வீட்டுக்கு போய் உம்மாவ சமாதானப் படுத்தலாம்.. ஆதில் நம்மள விட்டுட்டு போயிட்டான் போல, உம்மாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நொந்து போயிடுவா, நாம போய் பேசினா நம்மல ஏத்துக் கொள்வாங்க, நாம போவோம் சர்மி"

அவள் உண்மையில் இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. வாஹிதாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் உள்ளத்தை வெகுவாக பாதித்திருக்க, மீண்டும் அதனை எதிர் கொள்வதென்பது அவளைப் பொருத்தவரை மிகவும் சிரமம் தான்.

"சர்மி.. என்னடா? என்ன யோசன? இப்போ நான் இருக்கன்ல, உன்னோட புருஷன் உன் பக்கத்துல இருக்குறப்போ என்ன மீறி எதுவும் சொல்ல மாட்டாங்க, என் கூட வருவியா?"

"அது ஒன்னுமில்ல அதீக்.. என் புருஷன் உங்க வார்த்தைய மீறி வராம இருப்பனா? நாம போய் பேசலாம். எனக்கும் என் மாமி வேணும். அவங்க கூட சந்தோஷமா நான் இருக்கனும்.."

தன்னவனை இறுகப் பற்றி, கண்ணால் காதல் செய்ய அப்படியே அவளை அணைத்து, அக் குட்டி இதழ்களைக் கவ்விக் கொள்ளத் தோன்றினாலும் பொது இடம் என்பதால் பொறுமை காத்தான் அதீக்.

"சரிம்மா நாம கிளம்பலாம், ஆன்ட்டி நீங்க வீடு போங்க, நான் வாகனம் பேசி தாரன். உம்மாவுக்கு உங்க மேல கோவம் இருக்கு, ஒருவேள உங்களக் கண்டா அவ ஜீரணிக்க மாட்டாங்க."

"எனக்கும் அது சரியாத் தான் தோணுது மகன். நான் வீடு போறன். என் புள்ளய கவனமா கூட்டிட்டு போய் வாங்க"

அதீகோடு ஒட்டியிருந்தவளைக் காண அப் பெற்ற உள்ளம் சந்தோஷத்தில் திளைத்தாலும், அதீகை ஈன்றவளின் நிலை உண்மையில் பாவம் தான்.

கதை தொடரும் Aathifa Ashraf

[products]

கருத்துகள்