“வசீகரா முன்னால வா
ஹே புதுப் பையா நீயும் தான் முன்னால வா" அடக் கடவுளே! போயும் போயும் இந்த சுரேஷுக்கு பகிடிவதை செய்ய இவளா தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்? இனித் துவங்கும் இவர்களின் சமாச்சாரம்.. இருவரும் முன்னால் வருகின்றனர்.
"வசீகரா நீ இந்தப் பக்கம் வா,
இங்கப்பாரு இவ என்ன சொல்றாவோ அத அப்படியே செய்யனும் சரியா?
சுரேஷ் தலையாட்ட, வசீகராவும் ஆயத்தமானாள்.
"உன் பெயர் என்ன?
சுரேஷ்
ஓஹ் சுரேஷ் எங்க எனக்கு சலூட் அடி பார்க்க" திமிறாக சொல்லிவிட்டு நின்று கொண்டிருந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுரேஷ்.
"இப்படியொரு அழகியா?"
ஓய் உன்னத்தான் என்ன பார்வ?
ஆஹ் ஒன்னுமில்ல, கம்பீரமாய் சலூட் அடித்தான்.
"ஹ்ம்ம் என் பெயர் என்ன தெரியுமா?
தெரியல்ல
இப்படியா சொல்லுவது? போ போய் அவங்ககிட்ட என் பெயர் என்னான்டு கேட்டுட்டு வா." அவள் நண்பியை காட்டி அனுப்ப,
"முதல்ல என் பெயர சொல்லு
தெரியல்லயே..
என் பெயர் என்னான்டு சொல்லு அவ பெயர சொல்றன்" அவளுக்கு பக்கமிருந்த நண்பியை பார்த்த சுரேஷ் இவள் பெயர் என்னா?
அவளும் விட்டுக் கொடுக்காமல் தன் நாமத்தை கேட்க வகுப்பறையே கலகலவெனச் சிரித்தது. இதுவரை இப்படியொரு சோதனையை எதிர்கொள்ளா சுரேஷுக்கு ஏதோ என்றாகி விட்டது. அவன் புருவம் சுருங்க திடீரென இனம்புரியாத பரிதாபம் உண்டாகிற்று வசீகராவுக்கு.
சரி சரி என் பெயர் வசீகரா. போ போய் உன் ஆசனத்துல அமர்ந்துக்க.
மெதுவாக சென்று தன் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டவனுக்கு, அவன் சகபாடிகள் தன்னை ஏளனப்படுத்தி விட்டதான நினைப்பு வருத்தத்தைத் தந்தது. எல்லோரும் பகிடிக்காய் தன்னைப் பார்த்து சிரித்த விதம் பெரும் வீக்கமாய்த் தோன்ற யாருடனும் கதைக்காமல், குனித்த தலையை நிமிர்த்தாமல் கீழே பார்த்துக் கொண்டிருந்தான்.
"இதுவர தனக்கு இப்புடி நேர்ந்தில்லயே! அதுவும் பொம்புள புள்ளகள வெச்சி பகிடி பண்ணிட்டானுகள்" அழுகையே வந்துவிட்டதவனுக்கு.
வசீகரா ஏதோ நெருடலாய் உணர, திரும்பித் திரும்பி சுரேஷினை நோட்டமிட்டாள். அவனின் வாடிய வதனம் அவளையும் தான் சங்கடப்படுத்தியது.
கதை தொடரும்… Ruwaiza Razik வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
கருத்துகள்
கருத்துரையிடுக