கடந்த வருடம் இடம்பெற்ற தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், அதிக சித்திவீதத்தைப் பெற்றுள்ள தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி இலங்கையின் தேசிய கல்வியியற் கல்லூரிகளுள் முன்னணி வகிக்கின்றது.
தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி, இலங்கையில் பெண்களுக்கு மட்டுமான ஒரேயொரு தேசிய கல்வியியற் கல்லூரியாகும். இது 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இக்கல்லூரியின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது அளுத்கம அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையாகும். இது 1941ல் தர்காநகரில் ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரிக்காக நிலத்தை மனமுவந்து வழங்கிய தர்காநகர் ஐ.எல்.எம். மஹ்மூத், அதற்காக முன்னின்று செயற்பட்ட அல்ஹாஜ் ஏ.எல்.எம்.பி. முஹம்மத் மற்றும் கலாசாலையின் முதல் அதிபராகப் பொறுப்பேற்ற ஐ.எல்.எம். மஷ்ஹூர் ஆகியோரின் பணிகள் இங்கு முக்கியமானவை.
1954ல் இது முஸ்லிம் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையாக மாற்றங் கண்டது. பெண்கள் மட்டும் இங்கு கற்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
40 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக இயங்கி வந்த அளுத்கம முஸ்லிம் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை தேசிய கல்வியியற் கல்லூரியாக தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை 2000ம் ஆண்டுக் காலப்பகுதியில் கல்விச் சமூகத்தினால் பரவலாக முன்வைக்கப்பட்டது.
தர்காநகர் ஜமாஅத் கவுன்சில், களுத்துறை முஸ்லிம் கல்விச் சங்கம், அப்போதைய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரின் அயராத முயற்சியில், அப்போதைய கல்வி அமைச்சர் திரு. ரிச்சட் பத்திரன அவர்களின் அனுமதியுடன், இலங்கையின் 17 ஆவது தேசிய கல்வியியற் கல்லூரியாக தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி, 2001ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் முதல் பீடாதிபதியாக திருமதி நூருல் ஹாரிஜா அவர்களும் விரிவுரையாளர்களாக ஆறு கல்வியியலாளர்களும் நியமிக்கப்பட்டதுடன், 70 ஆசிரியப் பயிலுநர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் ஆரம்பக் கல்வி, முதன்மொழி, உடற்கல்வி, மனைப்பொருளியல், சமூகக் கல்வி ஆகிய 5 பயிற்சி நெறிகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியப் பயிலுநர்களின் எணணிக்கை படிப்படியாக அதிகரித்துச் சென்றது.
ஆரம்பத்தில், கட்டிட வசதிகள் பற்றாக்குறையாக இருந்த போதிலும், தொடர்ந்து வந்த காலங்களில் அவை படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டன.
2002ல் ஆசிரிய பயிலுநர்களுக்கான விடுதிக் கட்டடம், விளையாட்டு மைதானம் என்பவற்றுக்கான அடிக்கல் நாட்டுவிழா அப்போதைய கல்வி அமைச்சர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு மற்றும் அப்போதைய தபாற்தொலைத் தொடர்புகள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. 2004ல் அவை பூர்த்தி செய்யப்பட்டன. விரிவுரையாளர்களுக்கான 3 விடுதிகளும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து பீடாதிபதி இல்லம், கேட்போர் கூடம், புதிய விடுதி வசதிகள் என படிப்படியாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
வருடாந்தம் சுமார் 200 ஆசிரியப் பயிலுநர்கள் இக்கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இறுக்கமான நேர்முகத் தேர்வுகள், திறன் பரிசீலிப்புகள் என்பவற்றின் பின் பதிவுகள் இடம்பெறும். அதன் பின் 10 நாட்களுக்கு திசைமுகப்படுத்தல் அமர்வுகள் ஒழுங்கு செய்யப்படும்.
பிறந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து வரும் ஆசிரியப் பயிலுநர்கள், கவலைகளை மறக்கவும், கற்றலில் கவனத்தைக் குவிக்கவும் தேவையான ஆரம்பப் பயிற்சியை வழங்குவதே இந்த திசைமுகப்படுத்தல் அமர்வுகளின் நோக்கமாகும்.
இலங்கையின் கல்வி அமைப்பில் ஆசிரியர் கல்வி மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அதனை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய கல்வியியற் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.
இங்கு இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரியப் பயிலுநர்கள் இரண்டு வருடங்கள் கல்லூரியில் தங்கியிருந்து உள்ளகப் பயிற்சி பெறுவர். அதன் பின் அண்மையிலுள்ள பாடசாலையொன்றுக்கு இணைப்பு செய்யப்பட்டு, ஒரு வருடம் முழுவதும் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு கட்டுறுப் பயிற்சி பெறுவர்.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இறுதிப் பரீட்சை நடத்தப்படும். இவற்றைப் பூர்த்தி செய்யும் ஆசிரியப் பயிலுநர்களுக்கு கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படுவதுடன், அவர்கள் அரசாங்கப் பாடசாலையொன்றில் நிரந்தர ஆசிரியராக நியமனமும் பெறுவர்.
தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிற்சி பெற்ற சுமார் 3200 ஆசிரியைகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுள் சிலர் அதிபர்களாக, கல்வியியலாளர்களாக மற்றும் கல்வி நிருவாகிகளாக பதவி உயர்வும் பெற்றிருக்கின்றனர்.
கடந்த வருடம் 2023-2025ம் ஆண்டுக்கான ஆசிரியப் பயிலுநர்களுக்கான இறுதிப் பரீட்சை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்டது. அதில் முழுமையாக சித்தி பெற்ற ஆசிரியப் பயிலுநர்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதம் என்பவற்றின் அடிப்படையில், தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி முன்னணி வகிக்கிறது.
கல்லூரியின் வெற்றிப் பயணத்துக்கு சிறப்பாகத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் அதன் பீடாதிபதி திரு B. ரிஸ்வீ அவர்களுக்கும், அவருக்குப் பக்கபலமாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் கல்லூரியின் உப பீடாதிபதிகளான திருமதி MHAF. ரைஹானா ஷாபி, திரு V. கணேஸ்வரன் மற்றும் திரு T. தனேந்திரன் அவர்களுக்கும், விரிவுரை இணப்பாளர்களான திருமதி HIF. ஷிஹ்னாஸ், திரு B. ரில்ஸாத், திரு MM. ஹாரிஸ் மரிக்கார் ஆகியோருக்கும் அத்தோடு சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளையும், பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்ட 2023-2025ம் ஆண்டுக்கான ஆசிரியப் பயிலுநர்களுக்கு வாழ்த்துக்களையும் கல்விச் சமூகம் தெரிவித்து வருகின்றது.

கருத்துகள்
கருத்துரையிடுக