ஏதோ ஓர் இலக்கை நோக்கியதாய் ஒவ்வொருவர் வாழ்க்கை! ஏனோ பலவித குணங்கள் கலந்ததாய் ஓவ்வொருவர் இயல்பு! அல்லோலகல்லோலப்பட்டு பழகிப்போன உலகின்மத்தியில் மௌனத்தின் நேசகர்களாய் ஓர் சிலர்!
அம்மௌனத்தை திமிரெனவே தூற்றுவோர்பலர்! ஆர்ப்பரிப்பின்றி அமைதியாய் மறைந்திருக்க நாடியே ஓர்சிலர்!
அவர்களை அறிவிலிகளென்றே பலிப்போர் பலர்! எனினும் மறைந்திருப்பதால் மகிமை ஒன்றும் மக்கிப்போவதில்லை!
மௌனித்திருப்பதால் மேன்மை ஒன்றும் மங்கிவிடப்போவதுமில்லை! மௌனமும் மிக அழகிய மொழியே! யாருக்கும் தொல்லை தராது! யாரையும் காயப்படுத்தாது! ஆரவாரத்தை விடவும் அடக்கத்தை அரவணைத்துக் கொள்ளவே அறிவு ஏனோ வெகுவாய் பக்குவப்பட்டுவிட்டது!
உலகத்தின் முன்னால் முகமூடி அணிந்தே தன்சுயரூபமல்லாத மாயவிம்பத்தை பிரதிபலிக்கும் மனிதரின் நாடகங்களுக்கு மத்தியில்; வேடம் தரிக்காமல், மாயைகள் செய்யாமல், முகமூடிகளில் மறைந்திராமல் தன் சொந்த கதாபாத்திரத்தின் இயல்பை அப்படியே அரங்கேற்றவே ஆன்மா ஏனோ ஆசைகொள்கிறது!
அன்பினால் மட்டுமே ஆன்மா அழகு பெறுகிறது! மௌனத்தினால் மட்டுமே அமைதியின் அர்த்தம் புரிகிறது! ஆர்ப்பரிக்கும் ஆழியாயிருப்பதை விடவும் அமைதியாய் ஓடும் நதியாயிருந்திடவே மனம் ஏனோ வெகுவாய் விரும்புகிறது!
பொய்ப்பித்தலாட்டங்கள் எதற்கு? பிறருக்காக போலியான பிரதிபலிப்புகள் எதற்கு? நகலான நடிப்புகள் எதற்கு? நாம் நாமாக இருந்துவிட்டுச்செல்வோம்! நமக்கான வாழ்க்கையிது!
கருத்துகள்
கருத்துரையிடுக