வீரச்சாவடைந்தாரா ? எங்கு உள்ளார்? எவ்வாறு மரனித்தார்?
இன்றைய நாளான 18 மே 2009 முள்ளியவாய்க்காலில் போர் முடிவுற்ற தினமாகும். இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் உள்ளார்களா ? இல்லையா ? என்ற சர்ச்சை தொடர்கிறது.
புலிகளின் தலைவரும், அவரது குடும்பமும் வீரச்சாவடைந்ததாக பெரும்பாலான தமிழர்கள் நம்புகின்ற நிலையில், சிலர் மாத்திரம் அதனை மறுப்பதுடன் தலைவர் உயிருடன் உள்ளதாக வாதிடுவதுடன் தலைவரின் புதல்வி துவாரகா என்ற பெண்ணின் திடீர் வெளிப்பாடு பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தும் விதத்தில் டென்மார்க்கில் வசிக்கின்ற புலிகள் இயக்க தலைவரின் மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன், அவரது புதல்வரான கார்த்திக் மனோகரன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து புலிகளின் தலைவர் மற்றும் அவரது மனைவி பிள்ளைகள் அனைவருக்கும் வீர அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று 18.05.2024 இல் டென்மார்க்கில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாரா என்று ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
இறுதி யுத்ததித்தில் புலிகளின் தலைவரது உடலை கண்டுபிடித்த 58 வது படைப்பிரிவின் தளபதி சவேந்திர சில்வா அவர்கள் அன்று பின்வருமாறு கூறியிருந்தார்
"சிவில் உடையில் புலிகளின் தலைவர் போன்ற உடலை தனது அணியில் உள்ள இராணுவ வீரர் கண்டுபிடித்ததாக எனக்கு தகவல் வந்தது. உடனே அதனை கொண்டுவருமாறு கட்டளையிட்டேன். கத்தையான தாடி வளர்ந்த நிலையில் காணப்பட்ட அந்த உடலின் முகத்தில் இருந்த தாடியை வழித்தோம். அது புலிகளின் தலைவரது உடல் என்பதை உறுதிப்படுத்தியதும் கொழும்புக்கு தகவல் அனுப்பினோம் பின்பு மக்களை நம்பச் செய்யும் விதத்தில் அந்த உடலுக்கு புலிகள் இயக்க சீருடையை அணிவித்தோம்" என்று சவேந்திர சில்வாவின் பேட்டி பத்திரிகையில் வெளிவந்தது.
புலிகளின் தலைவரது உடல் மறுநாள் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஆனால் இதனை நம்ப மறுத்த சிலர் இது தலைவரது உடல் இல்லையென்றும் ஆள்மாராட்டம் செய்யப்பட்டது என்றும் முகத்தில் சில வேறுபாடுகள் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
நாங்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும் அதாவது அன்றைய போர்க்களம் எவ்வாறு இருந்தது என்ற யதார்த்தத்தை அறிந்தவர்கள் இவ்வாறு கூறமாட்டார்கள்.
புலிகளுடானான போரில் இராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கள் களத்தில் இருந்த பதட்டமான நிலையில் ஆள் மாறாட்டம் செய்வதென்பது கற்பனையில் வடிக்கின்ற சினிமா படத்துக்கு பொருந்துமே தவிர நிஜத்தில் சாத்தியமில்லை.
புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கேபி யிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் வழங்கும்போது "தலைவர் மரணித்தால் அவரது உடல் எதிரிக்கு கிடைக்காமல் இருப்பதற்கு பெற்றோல் கலனுடன் ஒரு மெய்க்காப்பாளர் ஒருவர் இருப்பார். ஆனால் அன்றைய சூழ்நிலையில் தலைவருக்கு முன்பே அந்த மெய்க்காப்பாளர் வீரச்சாவடைந்துவிட்டார்" என்று கூறியிருந்தார்.
சிவில் ஆடை அணிந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் கொண்டுவரப்படுகின்ற ஒளிப்பதிவை அன்று காணக்கிடைத்தது. அதில் அந்த உடலிலோ அல்லது தலையிலோ எந்தவித காயங்களும் காணப்படவில்லை.
அதேநேரம் புலிகள் இயக்க சீருடை அணிந்த நிலையில் அவரது மண்டையை வெட்டுகின்ற இன்னுமொரு வீடியோ காட்சியும் வலைத்தளங்களில் பிரபலமானது.
எது எப்படி இருப்பினும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரத்தம் வெளியாகிய சடலத்தில் பாரிய மாற்றம் காணப்படுவதுடன், சடலத்தின் முகம் முற்றாக மாற்றமடைந்து கறுப்படைந்த நிலை காணப்படும். ஆனால் புலிகள் இயக்க தலைவரின் முகம் அவ்வாறு காணப்படவில்லை.
அதாவது உயிருடன் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற தோற்றம் அவரது முகத்தில் காணப்பட்டது. உடலிலிருந்து இரத்தம் வெளியேறாத சந்தர்ப்பத்தில் மட்டுமே முகம் அழகாகவும், ப்ரஸ்சாகவும் காணப்படும். அவ்வாறென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகாமல் சயனைட் அருந்தியிருக்கலாம் என்பதுதான் எனது கருத்தாகும்.
எது எப்படியோ புலிகளின் தலைவரோ அவரது குடும்பத்தினரோ எவரும் உயிருடன் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட விடையமாகும். இதற்கு ஆதாரம்தான் அவரது சகோதரரான வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பத்தினரின் இன்றைய வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
கருத்துகள்
கருத்துரையிடுக