நாட்டின் பல பகுதிகளில் பொங்கியெழுந்த வெள்ளநீர், பலரது வாழ்க்கைப் பக்கங்களை ஒரு கணத்தில் புரட்டிப் போட்டது.
சிறு குழந்தைகளின் சிரிப்பு, முதியோரின் அமைதி, குடும்பங்களின் நம்பிக்கை இவை அனைத்தும் ஒரே நொடியில் நீரோட்டத்தோடு சென்று கரைந்த தருணம் அது.
வீடுகள் இடிந்தன, சொத்துகள் சிதைந்தன பலரின் வாழ்க்கை தடம் புரண்ட போது, எம் உறவுகளுக்காக முன்வந்த நம்மூரின் உதவிக்கைகள் ஒரு உயிர்காக்கும் கரமாக மாறின.
அது அபுக்காகம மற்றும் கனுகெடிய முஸ்லிம் சமூகத்தின் தன்னலமற்ற அன்புக்கரம். அல்ஹம்துலில்லாஹ்!
துயரத்தைத் தாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு தோளாக நின்ற எமது சமூகத்தினர், தங்கள் சொந்த துயரத்தை மறந்து, பிறரின் பசியையும் பயத்தையும் தங்களுடையதாக உணர்ந்தவர்கள்.
அவர்கள் கொண்டு சென்ற ஒவ்வொரு உணவுப் பொதியும், தண்ணீர் பாட்டலும், மருந்துப் பொருளும் வெறும் பொருட்கள் அல்ல, அவை துயரத்தில் நடுங்கிய உயிர்களுக்கு ஊக்கமாகிய உரங்கள்.
அந்த இளம் வாலிப சிங்கங்கள் பாராட்டால் மட்டுமே நிறைவடையாதவர்கள்; அவர்கள் காட்டிய முன்மாதிரி முயற்சிகள் எமது ஊரின் வரலாற்று ஏடுகளில் பொற்குறிகளாக பதிய வேண்டியவை.
தங்கள் செல்வம் கருணையாக மாறியது. தங்கள் நேரம் சேவையாக மாறியது. தங்கள் இதயம் அறியாத மக்களுக்கே ஒரு குடும்பமாக மாறியது.
இதுவே மனிதநேயத்தின் உண்மையான வடிவம், இஸ்லாம் போதிக்கும் பரிவு செயலில் மலர்ந்த தருணம்.
நபி (ஸல்) அவர்கள் கூறிய நற்சொற்கள் இந்நேரத்தில் உயிர்ப்பெற்றன:
“சிரமமுற்றவரின் சிரமத்தை நீக்குபவருக்கு மறுமை நாளில் அல்லாஹ்வின் நிழல் கிடைக்கும்.”
“ஒருவர் தனது சகோதரனுக்கு உதவியிருப்பின், அல்லாஹ் அவனுக்கு உதவுவான்.”
இந்த ஹதீஸ்கள் புத்தகப் பக்கங்களில் மட்டும் இல்லாமல், இதயங்களிலும் செயல்களிலும் மலர்ந்த அரிய தருணம் அது.
எமது ஊரின் எதிர்காலம் இந்த இளம் சமூகத்தின் வழியே மேலோங்க வேண்டும். அவர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும், கருணையின் ஒளி, சகோதரத்துவத்தின் வெப்பம், மனிதநேசத்தின் மணம் பரவியது.
“முஃமின்கள் ஒருவருக்கொருவர் கட்டிடத்தைப் போல.”
இந்த உவமை, அபுக்காகம–கனுகெடிய மக்களின் செயல்களில் முழுமையாக வெளிப்பட்டது.
ஒரு வீடு சரிந்த இடத்தில், அவர்கள் ஒரு இதயத்தை தாங்கினர். ஒரு குடும்பம் அழுத இடத்தில், அவர்கள் நம்பிக்கையை எழுப்பினர். இழந்த பொருளுக்கு மாற்றாக, அவர்கள் "ஒற்றுமை" எனும் பொக்கிஷத்தை வழங்கினர்.
அத்துடன், எமது ஊரின் வாலிப நண்பர்கள் தொழுகை விடயத்திலும் ஒருவரை ஒருவர் நினைவூட்ட வேண்டும். மதப் பண்பாட்டில் வலிமை ஏற்படுத்துதல் என்பது சமூகத்தின் ஒருமைப்பாட்டின் அடித்தளம்.
யா அல்லாஹ்! வெள்ளத்தால் துன்புறும் மக்களுக்கு ஆறுதலும் பாதுகாப்பும் அருளி, அவர்களின் வீடுகளும் வாழ்வாதாரமும் மீண்டும் செழித்து வளரச் செய். உதவி செய்த எமது ஊர் மக்களுக்கு நன்மையும் நலனும் பெருகச் செய். அவர்களின் குடும்பங்களுக்கு அமைதி, ஆரோக்கியம், வளம் அருள்வாயாக! இன்று நடந்த இந்த கருணைச் செயல், நாளைய நல்லெண்ணத்தின் விதையாக இருக்கட்டும். மனிதன் மறந்தாலும் வல்ல நாயன் அல்லாஹ் மறக்கமாட்டான். அவை மறுமையில் மீசான் தட்டில் நன்மைகளாக கணக்கிடப்படட்டும்.
இன்று ஒற்றுமை காட்டிய இந்த சமூகம், நாளை நம் நாட்டின் சகோதரத்துவத்தை ஒளிரச்செய்யும் மனிதநேயப் பாலமாக மாறட்டும்.
அபுக்காகம – கனுகெடிய மக்களின் இந்த கருணைச் செயல் வெள்ளத்தை விட வலிமையானது. அது மனிதநேயம், ஒற்றுமை, பரிவு ஆகியவற்றின் வெற்றியை உலகுக்கு நினைவூட்டியது. இன்று அவர்கள் நீட்டிய உதவி, மறுமையில் நற்பலன்களாகவும், சமூகத்தில் நம்பிக்கையின் ஒளியாகவும் நிரந்தரமாக இருக்கும்.
அறிவின் ஒளி, ஞானத்தின் ஆழ், பண்பாட்டின் நயம், ஆன்மீகத்தின் அமைதி, பொருளாதாரத்தின் வளம் இவைகள் ஓடையென ஓடி எமது ஊரை வளரும் விளையும் நிலமாக மாற்றட்டும். மனிதப்பண்பும் உயரிய விழுமியங்களும் தழைத்து, மாறாத மகிழ்ச்சி தங்கும் ஊராக எமது ஊர் மிளிரட்டும்.
IYYOOB ABDUL WAJID (IN'AAMI)

கருத்துகள்
கருத்துரையிடுக