அஹதிய்யாவின் வளர்ச்சியில் இலங்கை வானொலி, முஸ்லிம் சேவையின் பங்களிப்பு

அஹதிய்யாவின் வளர்ச்சியில் இலங்கை வானொலி, முஸ்லிம் சேவையின் பங்களிப்பு, Youth Ceylon


இஸ்பஹான் சாப்தீன்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சன்மார்க்க மற்றும் கல்வி வரலாற்றில், ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க முடியாத இரண்டு நிறுவனங்கள் உள்ளன. ஒன்று, முஸ்லிம் சிறுவர்களின் ஒழுக்கம், இறையச்சம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான அஹதிய்யா இயக்கம். மற்றொன்று, அந்த இயக்கத்தின் குரலாகவும், அதன் வளர்ச்சியின் துணையாகவும், அதன் வரலாற்றின் நினைவகமாகவும் திகழ்ந்து வரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலி முஸ்லிம் சேவையாகும்.

அஹதிய்யா இன்று இலங்கையின் 23 மாவட்டங்களில் 650 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுடன் இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்லாமியக் கல்வியைப் பெற்று வருகின்றனர். ஆனால், இந்த வளர்ச்சி தற்செயலாக உருவானதல்ல. இது பல தலைமுறைகளின் அர்ப்பணிப்பு, சமூகப் பற்றுணர்வு மற்றும் ஒரு தேசிய ஊடகத்தின் இடையறாத ஆதரவின் விளைவாகும்.

அஹதிய்யா சன்மார்க்கப் பாடசாலை இயக்கம், 1951 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்டது. சமூக ஒழுக்கம் தொடர்பான ஒரு துயரமான சம்பவம், இவ்வியக்கத்தின் தோற்றத்திற்கு உந்துசக்தியாக அமைந்தது. மர்ஹூம் எம்.எச். அப்துல் அஸீஸ், மாவட்ட நீதிபதி மர்ஹூம் ஏ.எம். அமீன், சட்டத்தரணி அல் ஹாஜ் ஏ.எச்.எல்.ஏ. ஸலீம் மற்றும் மௌலவி எம்.ஏ.சி.ஏ. லாபீர் ஆகியோர் இணைந்து இந்த உயரிய இயக்கத்தின் அடித்தளத்தை அமைத்தனர்.

1954 ஆம் ஆண்டு எம்.எச்.ஏ. அஸீஸ் அவர்கள் வபாத்தாகும் போது, நாட்டில் 17 அஹதிய்யாப் பாடசாலைகள் மாத்திரமே காணப்பட்டன. பின்னர் 1954 ஒக்டோபர் 30 ஆம் திகதி எஸ்.எல்.எம். சரீபு ஹாஜியார் தலைவராகப் பொறுப்பேற்றார். 1956 மார்ச் 31 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமையைக் குறிக்கும் "யவ்முல் அஹத்" என்ற அரபுச் சொல்லின் அடிப்படையில் "அஹதிய்யா" என்ற பெயர் உத்தியோகபூர்வமாகச் சூட்டப்பட்டது. இதனை மர்ஹூம் மௌலவி எம்.ஏ.சி.ஏ. லாபீர் அவர்கள் முன்மொழிந்தார்.

ஆனால், ஒரு கல்வி இயக்கம் வளர்வதற்கு அமைப்பும் ஆசிரியர்களும் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. அதன் இலட்சியங்களை சமூகத்தின் ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு செல்லும் ஊடகமும் அவசியமாகும். அந்தப் பொறுப்பை இலங்கையில் மிகச் சிறப்பாக நிறைவேற்றிய நிறுவனம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையாகும்.

1960 களில், இலங்கை வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளராக இருந்த மர்ஹூம் மௌலவி இஸட். எல். எம். முஹம்மத் ஹாஜியார் அவர்கள், அஹதிய்யாவின் சமூகப் பெறுமதியை ஆழமாக உணர்ந்திருந்தார். அஹதிய்யாவின் வளர்ச்சி என்பது, எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் ஒழுக்க மற்றும் கல்வி வளர்ச்சியோடு நேரடியாகப் பிணைக்கப்பட்டிருப்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார்.

அதனால்தான், அவர் வானொலி முஸ்லிம் சேவையில் அஹதிய்யாவுக்கு விசேட முன்னுரிமையை வழங்கினார். அல் ஹாஜ் எம்.ஏ.சையது முஹமத் போன்ற ஆளுமைகளுக்கு வாராந்திர அஹதிய்யா நிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இது, அஹதிய்யாவுக்கும் வானொலி முஸ்லிம் சேவைக்கும் இடையிலான நீண்டகால உறவின் ஆரம்பமாக அமைந்தது.

இதனாலேயே "வாழ்வோரை வாழ்த்துவோம்" தொடரில் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஏ. சையது முஹமத் அவர்களுக்கு "காதிமுல் அஹதிய்யா (அஹதிய்யாவின் தொண்டன்)" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதேபோன்று "பாரம்பரியம்" நிகழ்ச்சியும் இவரது வானொலிப் பங்களிப்பைப் பேசியமை இங்கு நினைவு கூற வேண்டும்.

மர்ஹூம் மௌலவி இஸட். எல். எம். முஹம்மத் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மரபு, அவரோடு முடிவடையவில்லை. அவருக்குப் பின்னர் முஸ்லிம் சேவைக்கு வந்த பணிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் அஹதிய்யாவை முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால முதலீடாகக் கருதி அதற்கு முன்னுரிமை அளித்தே வந்துள்ளனர். இதுவே, அரை நூற்றாண்டைக் கடந்தும் அஹதிய்யா நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஒலிபரப்பப்படுவதற்கான மிக முக்கிய காரணமாகும்.

1972 ஆம் ஆண்டு, அஹதிய்யா கல்விச் சேவையை நாடளாவிய ரீதியில் ஒன்றிணைக்கும் நோக்கில், வானொலி முஸ்லிம் சேவையில் மாதம் ஒருமுறை அஹதிய்யா நிகழ்ச்சி நிரந்தர நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த முயற்சியின் பின்னணியில், சட்டத்தரணி அல் ஹாஜ் ஏ.எச்.எல்.ஏ. ஸலீம் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் குறிப்பிடத்தக்கதாகும். சட்டத்தரணி அல் ஹாஜ் ஏ.எச்.எல்.ஏ. ஸலீம் அவர்களுக்கும் முஸ்லிம் சேவைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. அவர், அஹதிய்யாவை நாடெங்கும் கொண்டு செல்ல வானொலியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

1972 ஆம் ஆண்டின் இந்த முடிவு, அஹதிய்யாவின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வானொலியில் அஹதிய்யா நிகழ்ச்சி ஒலிபரப்பாகத் தொடங்கிய பின்னர், நாட்டின் பல பகுதிகளில் அஹதிய்யாப் பாடசாலைகள் உருவாகத் தொடங்கின.

மல்வானை, மூதூர், கண்டி, உலப்பனை, அட்டுலுகம, பேருவளை, அளுத்கம உள்ளிட்ட பல பகுதிகளில் அஹதிய்யா கல்விச் சேவை புதிய உயிர்ப்பைப் பெற்றது. ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய அஹதிய்யா பாடசாலையின் பெயர், தேசிய வானொலியில் ஒலிக்கத் தொடங்கியபோது, அது அந்தப் பகுதி மக்களுக்குப் பெருமையையும் ஊக்கத்தையும் அளித்தது.

இதன் விளைவாக, அஹதிய்யா பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் அஹதியாக்களுக்கு சேரும் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவற்றின் கல்விச் செயற்பாடுகளும் வலுப்பெற்றன. வருடாந்த பரீட்சைகள், பரிசளிப்பு விழாக்கள், கருத்தரங்குகள், கலாசாரப் போட்டிகள் மற்றும் மாணவர்களுக்கான ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

குறிப்பாக, மாணவர்களின் இஸ்லாமிய அறிவு மட்டுமன்றி, அவர்களது ஒழுக்கம், நடை, உடை, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் கலாசார விழுமியங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக, அஹதிய்யா கல்விச் சேவை முஸ்லிம் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அஹதிய்யாவை மக்கள் மயப்படுத்துவதில் வானொலி முஸ்லிம் சேவை மேற்கொண்ட பணிகள் எண்ணிலடங்காதவை. சவ்துல் அவ்ளாத், மாணவர் மன்றம், அஹதிய்யா பாடசாலை போன்ற பெயர்களில் அஹதிய்யாக்களின், அஹதிய்யா மாணவர்களின் நிகழ்ச்சிகள், அஹதிய்யா பாடத்திட்ட விளக்கங்கள், அஹதிய்யாவை மையப்படுத்திய கலந்துரையாடல்கள், தேசிய நிகழ்வுகளை மையப்படுத்திய விசேட ஒலிபரப்புகள், அஹதிய்யாவுக்கான தேவைகளை சுட்டிக்காட்டும் உரைகள் மற்றும் அஹதிய்யா தொடர்பான செய்திகள் ஆகியன, அஹதிய்யாவை வீடுவீடாகக் கொண்டு சென்றன.

ஆரம்பகாலப் பிரச்சாரப் பணிகளில் மர்ஹூம் மணிமொழி எம்.ஜே. கலீலுர் ரஹ்மான், மர்ஹூம் தூத்துக்குடி சொற்கொண்டல் செய்யது இப்ராஹீம் போன்ற பலர் முக்கிய பங்காற்றினர். அதேபோன்று, மர்ஹூம் அல் ஹாஜ் எம்.ஏ. சையது முஹமத் அவர்கள் நடாத்திய அஹதிய்யா நிகழ்ச்சி, மர்ஹூம் அல் ஹாஜ் எம்.ஹெச்.எம். பஹாவுதீன் அவர்களின் எழுத்துப்பணிகள் (குறிப்பாக, அவர் "அஹதிய்யா மலர்", "அஹதிய்யா மணிமாலை" போன்றவற்றை வெளியிட்டார். அதேபோன்று, 1962/63 காலப்பகுதியில் அஹதிய்யா மாத வெளியீட்டின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.) இவர் 1948 முதல் இலங்கை வானொலியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவரும் 1992 ஆம் "காதிமுல் அஹதிய்யா" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும்,சட்டத்தரணி அல் ஹாஜ் ஏ.எச்.எல்.ஏ. ஸலீம் அவர்களின் நிர்வாகப் பங்களிப்புகளும் முஸ்லிம் சேவையுடனான அவரது நெருக்கமும் அஹதிய்யாவின் வளர்ச்சிப் பயணத்தில் அழியாத தடங்களைப் பதித்துள்ளன.

அதேபோன்று, பிற்பட்ட காலத்தில் பல வருடங்கள் அஹதிய்யா நிகழ்ச்சியை மாதம் இரண்டு நிகழ்ச்சிகள் என்ற அடிப்படையில் அல்ஹாஜ் ஏ.எல்.எம் அஸ்வர் அவர்கள் நடத்தினார். இந்தக் காலப் பகுதியில் வானொலி நிகழ்ச்சிகளைச் குறிப்பிட்டு சொல்லியே மாணவர்கள் அஹதிய்யாக்களுக்கு சேர்க்கப்பட்டனர்.

அஹதிய்யாப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகளைத் தன்னிச்சையாக ஆரம்பித்த பெருமையும் முஸ்லிம் சேவையையே சாரும். அஹதிய்யா ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தையும் அதன் சமூகப் பற்றையும் உணர்ந்த முஸ்லிம் சேவை, மாணவர்களின் அறிவு, திறமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் வினா-விடைப் போட்டிகள் மற்றும் அறிவுப் போட்டிகளை அறிமுகப்படுத்தியது.

இன்றும் கூட, அஹதிய்யாப் பாடசாலைகளை மையப்படுத்திய வினா-விடைப் போட்டிகள் வானொலியில் ஒலிபரப்பாகி வருகின்றன. இது, அஹதிய்யாவுடனான முஸ்லிம் சேவையின் உறவு ஒரு வரலாற்றுத் தொடர்பாக மட்டுமன்றி, தொடர்ச்சியான கல்விப் பங்காளராக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

அஹதிய்யாவின் முக்கிய மைல்கற்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முஸ்லிம் சேவை அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. 1976 டிசம்பர் 5 ஆம் திகதி காலியில் நடைபெற்ற வெள்ளி விழாவும், 1992 செப்டம்பர் 27 ஆம் திகதி கொழும்பு ரன்முது ஹோட்டலில் நடைபெற்ற 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தும்மளசூரிய அஹதிய்யா கலாபீடத்தில் அகில இலங்கை அஹதிய்யா ஆசிரியர்களுக்கான இரண்டுநாள் செயலமர்வும் முஸ்லிம் சேவையின் செய்திகளிலும் விசேட நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம்பிடித்தன.

இந்த ஒலிபரப்புகள், நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை வழங்கியதோடு மட்டுமல்லாது, அஹதிய்யாவின் வரலாற்றை தலைமுறைகளுக்காகப் பதிவு செய்து பாதுகாத்தன.

இன்று, அஹதிய்யா மத்திய சம்மேளன பதவி தாங்குனர்கள் கூட அறியாத பல வரலாற்றுத் தகவல்கள், அரிய ஒலிப்பதிவுகள், முன்னோடிகளின் குரல்கள் மற்றும் மறக்கப்பட்ட நினைவுகள், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும்.

கடந்த பல தசாப்தங்களாக ஒலிபரப்பப்பட்ட ஒவ்வொரு அஹதிய்யா நிகழ்ச்சியும், ஒரு காலத்தின் சாட்சியாகவும், ஒரு சமூகத்தின் நினைவுப் பதிவாகவும் மாறியுள்ளது. ஒவ்வொரு அஹதிய்யாப் பாடசாலையின் வரலாறும், அதன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், மாணவர்களின் சாதனைகளும், தேசிய நிகழ்வுகளும் முஸ்லிம் சேவையின் ஒலிப்பதிவுகளில் பதியப்பட்டுள்ளன.

காலப்போக்கில், சிலர் இந்த வரலாற்றுப் பங்களிப்புகளை மறந்திருக்கலாம். சிலர் அவற்றைப் பதிவு செய்யத் தவறியிருக்கலாம். ஆனால், வரலாறு மௌனமாக இருந்தாலும் உண்மைகளை மறைப்பதில்லை. அஹதிய்யாவின் வளர்ச்சிப் பயணத்தில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை ஆற்றிய பங்களிப்பு, அதன் ஒலிப்பதிவுகளிலும், அதன் நிகழ்ச்சிகளிலும், அதன் காப்பகங்களிலும் இன்று வரை உயிரோடு வாழ்கிறது.

அஹதிய்யா சிறுவர்களின் உள்ளங்களில் சன்மார்க்க விதைகளை விதைத்திருந்தால், அந்த விதைகள் நாடெங்கும் பரவி ஒரு தேசிய இயக்கமாக மலர்வதற்கு ஊடகச் சிறகுகளை வழங்கியது இலங்கை வானொலி முஸ்லிம் சேவையாகும். மேலும், அந்த வளர்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் காலத்திற்காகப் பாதுகாத்த அமைதியான வரலாற்றுக் காவலனாகவும் அது திகழ்கிறது.

எனவே, அஹதிய்யாவின் வளர்ச்சி என்பது ஒரு கல்வி இயக்கத்தின் வெற்றிக் கதை மட்டுமல்ல; அது தொண்டர்களின் அர்ப்பணிப்பு, சமூகத்தின் ஒத்துழைப்பு மற்றும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் அரை நூற்றாண்டு கால இடையறாத பணியின் கூட்டு வரலாறாகும். அந்த வரலாறு, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரிய மரபுச் சொத்தாக என்றும் நினைவுகூறப்படும்.

இஸ்பஹான் சாப்தீன்

ஊடகப் பயிற்றுவிப்பாளர், தயாரிப்பாளர்,

முஸ்லிம் சேவை,

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.

கருத்துகள்