ஒவ்வொரு வரும் தமது இலக்கை அடைவதற்கு பல சவால்களை எதிர்நோக்குகின்றனர். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. பலரின் அர்ப்பணிப்பணிப்புக்களோடும் ஆலோசனைகளோடும் மாறை/ ஸாதாத் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் வரை கல்வி கற்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் சந்தர்பத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் பரீட்சைக்கு முகம்கொடுக்க முடியாததால் அடுத்த வருடம் பரீட்சைக்கு முகம் கொடுக்க எண்ணினேன். இது சகஜம் தானே இதில் என்ன கதை உள்ளது என நீங்கள் எண்ணலாம். ஆனால் இதற்குப் பின் தான் அந்தக் கதையே ஆரம்பிக்கின்றது.
நான் பல்கலைக் கழக கல்வியை முழுமையாக நிறைவு செய்யாது வீட்டிலிருந்த காலப்பகுதி அது. எனது தந்தை கடுமையான நோய்க்குட்பட்டார். சிகிச்சையும் பரிசோதனையுமாகவும் வைத்தியசாலையும் வீடுமாகவும் தந்தையின் நாட்கள் கடந்து சென்றன. இந்நிலையில் தென்மாகாண ஆசிரியர் தேர்விற்கான விண்ணப்பம் கோரப்பட்டது. பல்கலைக்கழகக் கல்வியை பூர்த்தி செய்யாத நானும் இதற்காக விண்ணப்பித்து நேர்முகத் தேர்விற்காகவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தேன். எனினும் அடிப்படைத் தகுதி இல்லாததால் புறக்கணிக்கப்படும் என அறிந்தும் நேர்முகப்பரீட்சை க்காக சென்றேன். எனது பட்டப்படிப்புச் சான்றிதழ் இல்லாமையால் நான் பிரயோகப்பரீட்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. நான் வெகு விரைவில் சான்றிதழை சமர்ப்பிக்கின்றேன் என்று கூறியும் அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் அடிப்படைத் தகைமைமை பூர்த்தி செய்யாது தொழில் வழங்குவது அநீதி தான். என்றாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டே இன்னும் 5 வருடங்களின் பின்னர் தானே பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என வினவினேன். அதைப் பற்றி உறுதியாக கூறமுடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ற பதிலே கிடைத்தது. மனக்கவலை இருந்த போதும் இதற்குள்ளும் நாம் அறியாத ஒரு நன்மை மறைந்திருக்கலாம் மறைவான விடயங்களைப் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே உரியது என எண்ணியவளாக மனதை தேற்றிக்கொண்டேன்.
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
பொருள்: நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக!
மறுபுறம் கடுமையான நோய்க்குள்ளான எனது தந்தை மிகவும் பலவீனமடைந்தார். கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த தந்தைக்கு அருகில் சென்ற நான் , வாப்பாவிடம் உடல் நிலை பற்றி வினவினேன். தனது வலியை மறைத்துக் கொண்டு இறைவனின் அருளால் நான் நலம் பெற்றுவிட்டேன். என புன்னகையை வரழழைத்துக் கொண்டு பதிலளித்தார். பின்னர் மகள் உன்னைப் பற்றித் தான் எனக்கு கவலையாக உள்ளது. இன்னும் பல்கலைக்கழக படிப்பை நிறைவு செய்யவில்லையே என ஏக்கத்தோடு கூறினார். நானும் எனது கவலையை மறைத்துக் கொண்டே வாப்பா இதற்குள்ளும் ஒரு நலவு மறைந்திருக்கலாம். இறைவனின் நாட்டம் அது. பெண்கள் தொழில் செய்ய வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. நீங்கள் எனக்காக உங்களால் முடிந்தளவு அர்ப்பணித்தீர்கள். மேலும் எனக்காக சிறந்த துணையை தெரிவு செய்து தந்தீர்கள். நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். நீங்கள் எனக்காக பிரார்த்தியுங்கள். பெற்றோரின் துஆவையும் நோயாளியின் துஆவையும் இறைவன் எந்தத் திரையுமின்றி ஏற்றுக் கொள்கிறான் எனக் கூறினேன். நிச்சயம் உங்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் எனவும் கூறினேன். உடனே எனது தந்தை எமக்காக பிரார்த்தித்தது இன்னும் கண்முன்னே நிழலாடுகின்றது.
அல்ஹம்துலில்லாஹ் அன்று அவர் வேண்டிய பிரார்த்தனையின் பலனோ தெரியவில்லை மீண்டுமொருமுறை தென் மாகாணத்தில் ஆசிரியர் நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதுவரை ஆசிரியர் சேவை என்றாலே விருப்பமின்றி இருந்த எனது சகோதரனும் இதற்காக விண்ணப்பித்தார். அல்ஹம்துலில்லாஹ் இன்று நானும் எனது சகோதரனும் தென்மாகாண ஆசியர் நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளோம்.
ஆனாலும் அதைப் பார்த்து மகிழ எனது தந்தை உயிரோடு இல்லை. ஏனெனில் பூமியில் பிறந்த யாவரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும் என்ற இறைநியதிக்கேற்ப எனது தந்தையையும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் இறைவன் தன் பக்கம் அழைத்துக் கொண்டான்.
اَللّهُمَّ اغْفِرْ لِ..وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
என் தந்தையின் ஜனாஸா நிகழ்வின் இறுதி வைபவத்தில் மௌலவி ஒருவர் எனது தந்தையின் தொழில் வழங்குனர் கூறியதாக ஒரு சம்பவத்தை நினைவூட்டினார்.
அது எனது தந்தை வலஸ்முல்லையில் பணிபுரிந்த காலப்பகுதி. தனது சொந்த ஊரான மீயல்லையிலிருந்து பணிக்காக பேரூந்திலே பயணம் செய்து வந்தார். ஒவ்வொரு நாளுக்குமான பிரயாணச் செலவு அன்றன்று வழங்கப்பட்டது. அன்றும் அப்படித்தான் எனது தந்தைக்கான பிரயாணச் செலவு வழங்கப்பட்டது. மறுநாள் தொழிலுக்கு சென்ற எனது தந்தை பிரயாணத்திற்காக வழங்கப்பட்ட பணத்தை தான் பேரூந்தில் செல்லவில்லை என்றும் வேறொரு வாகனத்தில் பணம் செலுத்தாது சென்றதாகவும் கூறி பணத்தை திருப்பிக் கொடுத்தார். இச் சம்பவத்தை நான் கூட அன்று தான் செவிமடுத்தேன். தனது குடும்பத்திற்கு ஹலாலானவற்றை வழங்குவதற்காக இவ்வளவு நேர்மையாக நடந்து கொண்டுள்ளதை நினைக்கும் போது மனம் குளிர்ச்சியடைகின்றது.
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்காக அதிகமதிகம் பிரார்த்தியுங்கள். அவர்கள் செய்யும் சிறிய தவறுக்காக கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வீணாக கெடுதியை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். பெற்றோர்களின் துஆ நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக (25:74)குழந்தைகளே! உங்கள் பெற்றோர்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தியுங்கள். ஏனெனில் அவர்களின் வாழ்க்கையை உங்களுக்காகவே அர்ப்பணித்தவர்கள் அவர்கள்.
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
"என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" (17:24)
தனக்கு மட்டுமா சோதனை என நினைப்பவர்களே! மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மனந்தளர்ந்து விடாதீர்கள். இறை நம்பிக்கையுடன் முயற்சியுங்கள். உங்கள் தேவைகளை இறைவனிடமே முறையிடுங்கள்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர். ( 2:155-157)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். நூல்:அபூதாவூத், திர்மிதி)
முறையான பிரார்த்தனை ஒருபோதும் வீண்போகாது!
நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கோடையாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். நூல்: அபூதாவூத், திர்மிதி)
இறைவன் தன்னிடம் கையேந்திக் கேட்பவர்களுக்கு மூன்று விதத்தில் பதிலளிக்கிறான்.
- அவன் கேட்டதை கொடுத்து விடுகிறான்.
- மறுமைக்காக அதன் நன்மையை சேர்த்து வைக்கிறான்.
- பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கை போக்கிவிடுகிறான்.
உங்கள் பிரார்த்தனைகளில் மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் விடயத்தில் அப்பிரார்த்தனை நிறைவேறும்.
ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார்.
அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், 'இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (2:201)
என் கல்விப் பயணத்திற்கு உரமிட்ட அனைவருக்கும் அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களையும் வழங்குவானாக! ஆமீன்
கருத்துகள்
கருத்துரையிடுக