பிரிவின் ஏக்கம்




சங்கை மாதம் ஷஃபான் 
ஈவிரண்டில் பிறந்த முத்து நீ

இரு தசாப்தங்கள் இணைந்திருந்தே
இறை அற்புதங்களை உணர்த்திட
இறைவன் அளித்த இறை அருள் நீ

என்னிலும் இளையவனாயினும்
எனக்கே ஆசான் நீ தான்

பொறுமையின் சிகரமாய்
பொறுப்புடன் கண்முண்ணே வழி காட்டிய
பொக்கிச உடன் பிறப்பே

பள்ளிக்கூடங்கள் புகட்டிடா
பல நல் அற்புதங்களை
வீட்டினுள்ளே தனி ஆசானாய் இருந்து
வீரதீரமாய் உணர்த்திய உறவும் நீயே

நீ பட்ட வேதனைகள் கொஞ்சமா?
இறை சோதனைகளை
இறுதி வரை பொருந்திக்கொண்டாய்
இது தான் வேண்டும் என்ற அடம்பிடிப்பில்லை

உன் அழுகையும் சிரிப்பும்
உணர முடிந்திடா மழலைப் பேச்சு
கண்ணீருடன் கலந்திட்ட மொழிகள்
கலங்கமில்லாப் பார்வை யாவும்
உணர்த்துவது என்ன என்று
அறிந்திட உள்ளம் ஏங்குதே நிதமும்

அருளாளன் ஏகோன் அளித்த
அருள் பொக்கிசம் நீ
அனுதினம் வீட்டினுள்ளே இருந்த
அருள் சுவன பாக்கியவான் நீ

குடும்பமாய் அமர்ந்து உணவருந்த
குதூகலத்துடன் காத்திருப்பாய்
இப்தாருடைய வேளைதனை ஆவலுடன்
இளையவன் நீ எதிர்பார்த்திருப்பாய்

ஏழைகளின் பசியுணர்ந்திட
ஏகன் உன் மீது கடமையாக்கிடா
நோன்பினையும் வாழ்நாளில் - ஒருமுறை
நோற்று மனமகிழ்தாய்

உன் விளிகள் தீயதை பார்த்ததில்லை
உன் நாவு தீயதை மொழிந்ததில்லை
உன் பாதங்கள் தீயதை நோக்கி சென்றதில்லை
உன் செவிகள் தீயதை கேட்டிறுக்காதே
உனை போல் பாக்கியம் - யான் இவ்
உலகில் பெறவில்லை - நீ

இறை கேள்வி கணக்கின்றே
இறுதியில் சுவனம் நுழையும்
இறை பாக்கியம் பெற்றவனே

ஷங்கை மாதம் ரமழான்
சரிதம் கூறிடும் பத்ர்
ஸஹாபாக்கள் நினைவு நாள்
சலசலப்பின்றி இறை அழைப்பேற்றாயே

வீட்டிற்குள் சுவனத்தை மிக
விருப்புடன் தந்த இறைவன்
விரைவில் தன் பக்கம் அதை
விரும்பி மீட்டுக் கொண்டது ஏனோ?

தாய் மாமன் என உரிமையுடன் 
தமக்கைப் பிள்ளையின்
அன்புத் தொல்லைகளை ஏற்று
உன் மழலை மொழி பேசி
நிதமும் மனமகிழ்தாயே

தந்தை நிலையறிந்து
உள்ளம் வருந்தினாயோ
உடன் பிறப்புகளின் பிரிவுகளை
எண்ணி அகம் கலங்கினாயோ

விடுமுறைக்காய் வீடு வந்த முதல் நாளே
வீட்டில் பல நாள் உன்னுடன்
விருப்புடன் தங்கியிருக்க வந்தேன் என
வாஞ்சையுடன் கூற உன்
வதனம் எங்கும் மகிழ்ச்சி பொங்க
வடிவாய் புன்னகை பூந்த உந்தன் வடிவழகு முகம் கண்முன்ணே நிலழாடுதே

பாதி விடுமுறை கழிய முன்னே - எனை
பரிதவிக்க விட்டு இறை அழைப்பை ஏற்று
பறந்திட்டாயே மீழாப் பயணம்

பிரிவின் ஏக்கம் உடன்
பிறப்புக்களான எமை வாட்ட
கருவிலே சுமந்து பாலூட்டி சீராட்டி
கருனையுடன் அரவணைத்த
தாயும் விளித்திருந்து பசித்திருந்து
வியர்வை சிந்தி காத்த தந்தையும்
எங்கணம் தாங்குவது?
எப்படிச் சொல்வது?

கபன் ஆடையுடன் உன் வதனமதை
கடைசியில் நோக்கிய பலர்
பலஸ்தீனத்து தியாகிச் சீரார் என
பலமாய் வாயார மொழிந்தனர்

தினம் தினம் உன் பணிகளை செய்திட
நிதம் நிதம் உனை தேடி உள்ளம் ஏங்குதே
இனி இல்லை நீ என்றே எதிரொலிக்குதே மனக்கண்ணே நிழலாடுதே

உன்னோடு கதை பேசிய தருணங்கள்
மடி தாங்கி உன்னோடு பல
கதை பேசிட உள்ளம் ஏங்குதே

இறுதி தருனம் என இறைவன் எமக்கு
இதை உணர்த்தாமலே - உன்
இதயத்துடிப்பை நிறுத்திட்டான்

இனியவனே உன் உணவிற்கான
இறுதி ரிஸ்கை ஸகர் வேளையுடன்
இறைவன் நிறுத்திவிட்டான் என்பதை
இவள் அறியாமலே அன்று - உன்
இடம் தேடி உணவூட்ட வந்தேனே

 வழமைக்கு மாறாய் மறுப்பின்றி
வடிவாய் நீரை அருந்தினாய் எனினும்
உணவுக் கவளத்தை
உள்ளெடுக்க மறுத்தாயே

என் மடியில் உனை தாங்கிய
இறுதித் தருனமும் அதுவே
என் மடி மீதே உன் இறுதி மூச்சு
உள்ளம் ஏங்குதே

கங்குல் மாலை வேளை
கடமை தொழுகை அஸர் வேளை
புனித ஸம் ஸம் நீரை
இறுதிப் பானமாய் அருந்தி
இவ்வுலகிற்கு பிரியாவிடை கூறி
ஈடில்லா மண்ணறைப் பயணத்தில்
இணைந்திட்டாயே

மரணம் என்பது நிச்சயமே
எனினும் உன் பிரிவை ஏனோ
இதயம் ஏற்க மறுக்குதே

எங்கு சென்றிடினும்
எது செய்யினும்
உன் நினைவுடனே இருந்தோம்
அன்று போல் இன்றும்
உன் நினைப்பிலே அழைகிறோம்

இறைவா அழகான பொறுமையை
எனக்கும் குடும்பத்தவர்க்கும் தந்திடு

மஸிய்யா பின்தி அஸாத்

கருத்துகள்