காதலர் தினம் எனும் கற்பு கொள்ளையர் தினம்...

இந்த கட்டுரை எழுதப்படுவதற்கான பிரதான நோக்கம் எதிர் வரும் 14ம் திகதி நம் முஸ்லிம் சமூக இளசுகள் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு விபச்சார, அனாச்சார நாள் ஆகும். பெப்ரவரி 14 எனும் திகதி காதலர் தினம் எனும் பெயரில் ஏராளமான பெண்களின் கற்பு பறிபோகும் ஒரு தினமாக இருக்கின்றது என்பது கண்ணீர் வடிக்க வேண்டிய விடயம். உலகம் போற்றும் இந்த காதலர் தினம் எவ்வாறான வரலாற்று பின்னனியை கொண்டுள்ளது என்பதை எம்மில் பலர் அறியாமலே இந்த தினத்தை கொண்டாடி வருகின்றோம்.

கிறிஸ்தவ பாதிரி ஒருவர் நினைவாக ரோம பாரம்பரியத்தின் மூலம் முளைத்த விஷச் செடியே இந்த காதலர் தினம். இத்தினத்திற்கு பெப்ரவரி 14 எனத் தெரிவு செய்யப்பட்ட காரணம் பற்றிய எந்த வித வரலாற்று பின்னனியும் இது வரையில் குறிப்பிடப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இது வரை கோடிக்கணக்கான யுவதிகளின் கற்பு சூறையாடப்படுவதற்கான தெளிவான வரலாற்றுப் பதிவுகள் மலிந்து கிடக்கின்றன.

இந்த காதலர் தினத்தை நவீன மீடியாக்கள் தமது வர்ணனைகள் மூலம் இரு பாலரதும் காம உணர்வை துண்டி நம் இளசுகளது வாழ்வை பாலாக்கிக் கொண்டிருக்கிறது. காதலி இல்லாதவன் ஆண்மை இல்லாதவன் என பறையடித்துக் கெண்டிருக்கிறது இந்த மீடியாக்கள். ஆனால் அன்றைய தினம் எத்தனை பெண்களின் கன்னித் தன்மை அடியோடு அழிக்கப்படுகிறது என்பது மறைக்கப்படுகிறது.

"இன்றைய தினம் உங்களது தினம்" "உங்கள் காதலிக்கு, காதலனுக்கு வாழ்த்து பறிமாற ஒரு SMS க்கு 4ரூபாய்" என இளம் தலைமுறையினரின் உணர்வைத் தூண்ட, உணர்வுகளை பணமாக்கி இந்த அனாச்சாரத்தில் மூழ்கி இருக்கின்றது நம் முஸ்லிம் சமூகமும் கூட... இந்த காதல் மூலம் நடைபெற்ற எத்துனை திருமண தம்பதிகள் இன்று கவுன்சிலிங்க்காக நடமாடித்திரிகின்றனர்.

தன் இஷ்டப்படி ஒருவனை காதலித்து ,அவனது சுயரூபம் தெரிய வர பெரியவரிடம் முறையிட முடியாது, சிக்கித்தவித்து தற்கொலை செய்து கொள்ளும் எத்தனை யுவதிகளை கண்டுவிட்டோம். இந்த காதலுக்கு இன்றைய சினிமாவும் வழிகாட்டி வருகின்றது. எனினும் சினிமாக்களில் உள்ளது போல அல்ல. இந்த காதலின் முடிவு ஒரு பெண்ணின் கற்பு சூறையாடப்படுவதுடன் தான் முடிகிறது. கணவனாக போகிறவன் என்ற நப்பாசையில் நம் யுவதிகளும் கற்பை ஒருவனிடம் பறி கொடுக்க, தன் ஆசை நிறைவேறியதும் திருமணத்திற்கு பின்னர் நடக்க எதுவும் இல்லாததால் அவளை கைகழுவி விடுகிறான் அந்த ஆண்மகன். நாம் இந்த காதலுக்காக நம் செலவு செய்யும் நேரத்தை கல்வியில் செலவு செய்வோமேயானால் இன்று எம் சமூகம் கல்வியில் வீழ்ச்சி கண்ட சமூகமாக இருக்காது.. எம்மை நம்பி படிக்க வைக்கும்,கஷ்டப்படும் பெற்றோரை ஏமாற்றி அவர்களுக்கு பெரும் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும். காதல் என்பது எவ்வாறு விபச்சாரம் என்று கூறுவீர்கள்? என்று கேட்பீர்கள். நியாயம் தான். "விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான்.கண் செய்யும் விபச்சாரம் ஹராமான பார்வை .நாவு செய்யும் விபச்சாரம் ஹராமான பேச்சு உள்ளம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. பிறப்புறுப்பு அதை உண்மைப்படுத்துகிறது."(புகாரி :6243)

ஹராமான பார்வை,சிந்தனை, பாலியல் தொடர்பான பேச்சு, இவை மூன்றும் காதலில் இல்லாமல் இல்லை. இவைகாதலில் இருந்தால் உள்ளத்தில் ஆசை ஏற்பட்டு காதல் காமமாக மாறி கற்பை பறிகொடுக்கும் அளவிற்கு வித்திடுகிறது. இது விபச்சாரமில்லையா?

ஒருவர் ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பினால் அந்த பெண்ணின் பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று மணமுடிக்குமாறு இஸ்லாம் வழிகாட்டிக் கொண்டிருக்க நாம் மாற்றமாக ஹராமான காம விளையாட்டில் அல்லவா ஈடுபடுகிறோம்?

காதலை விபச்சாரமாக மாற்றும் ஒரு சாதனம் செல்பேசி எனும் செக்ஸ் பேசி இது இருபாலரிடையே உள்ள வெட்க உணர்வை இல்லாமல் செய்து எந்த வித தடையின்றி உறவாட வழிவகுக்கிறது. அன்புப் பெற்றோர் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். இன்று வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த காதலர் தினத்தினால் தான் டிசம்பர் 01 உலக எய்ட்ஸ் தினம் உருவாக்கப்பட்டது.

சென்ற 2016ஆம் வருடம் பெப்ரவரி 14 அன்று மாத்திரம் 10,000 இற்கும் அதிகமான அறைகள் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் அதிகமானவர்கள் இளைஞர், யுவதிகள் எனவும் அறிக்கைகள் குறிப்பிடுவது ஒரு புறமிருக்க அன்றைய தினம் இலங்கையில் மாத்திரம் 7,000 இற்கு மேற்பட்ட யுவதிகள் தம் கன்னித்தன்மை இழப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலை காரணமாக தான் ஆண் சமூகம் தற்போது கன்னிப்பரிசோதனை (vergin test) நடாத்தி திருமணம் முடிக்கின்றனர். இது தெரியாது இவர்களது காமப்பசிக்கு இரையாகின்றனர் நம் சகோதரிகள்.

என் இஸ்லாமிய நெஞ்சங்களே! எதிர்வரும் பெப்ரவரி 14 உங்கள் கற்பு சூறையாடப்படும் தினமாக, உங்களது தங்கை, சகோதரி, மகள், இவர்களின் கற்பு சூறையாடப்படும் தினமாகவும் இருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. அன்றைய தினம் நம் உம்மத்தின் பெண்களும் சரி, ஆண்களும் சரி அல்லாஹ்வைப்பயந்து முடிந்தவரை வீட்டில் இருக்க பெற்றோர் வழிவகுத்தால் இந்த வருடம் முதல் நம் சமூகத்தின் அவலங்கள் குறைக்கப்படும்.

எனவே விபச்சாரம் செய்த கூட்டம் என்ற பெயருடன் நாளை மறுமையில் அல்லாஹ்வின் முகத்தை பார்க்க முடியாது. எனவே சிந்திப்போம். திருந்துவோம். அன்பு சகோதரர்களே உங்கள் அன்பு தங்கைகளின், சகோதரியின் கற்புகளை பாதுகாக்க இந்த நொடியிலிருந்து முயற்சிப்போம்.

-பஸீம் இப்னு ரஸுல் ( ஜாமீஆ நளீமிய்யா - 3ஆம் வருடம்) வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்