குருநாகலை ஆட்சி செய்த முஸ்லிம் அரசன் குரஷான் செய்யது இஸ்மாயில்

வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில் தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரானான்.

இரண்டாம் புவனேகபாகு குருநாகலையில் ஆட்சி செய்தான். (1293-1302) இம்மன்னனுக்கு பல மனைவியர் இருந்தும் வாரிசு இல்லாதிருந்தது. மாற்றுமதப் பெண்ணை மணந்தால் ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஜோதிடர்களின் கூற்றுக்கு ஏற்ப அஸ்வதும என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணை மணந்தான். அவனுக்குக் கிடைத்த மகன்தான் வத்ஹிமி என்றும் கலேபண்டார என்றும் அழைக்கப் படுகின்றான்.

அப்போது இந்தியா முஸ்லிம் ஆட்சியின் கீழ் இருந்ததால் இரண்டாம் புவனேகபாகுவின் செய்கை இலங்கையையும் முஸ்லிம் நாடாக்கிவிடும் என சிங்கள மக்கள் அஞ்சினர். இதனால் அரச வாரிசுரிமையை சிங்கள மனைவியின் மகனுக்கே பெற்றுக்கொடுக்க நாட்டு மக்கள் அணி திரண்டனர்.

இதனால் மூத்த மனைவியின் குடும்பத்தினர் இரண்டாம் புவனேகபாகுவையும் முஸ்லிம் மனைவி உட்பட அவரது குடும்பத்தினரையும் கொலை செய்தனர்.

முடிக்குரிய பிள்ளை என்பதால் ஒரு சலவைப் பெண் பாதுகாத்து 5 வருடங்கள் பேருவளையில் வளர்க்கப் பட்டு 1325 ஆம் ஆண்டு குருநாகலைக்குப் படையோடு வந்து நான்காம் பராக்கிரம பாகுவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியபோது அவருக்கு 15 வயது. அவர் படுகொலை செய் யப்பட்டபோது 18 வயது. ஆக மூன்று வருட கால ஆட்சி புரிந்த வஸ்து ஹிமி ராஜா கலே பண்டார ஒரு முஸ்லிம் அரசராவார்.

வஸ்து ஹிமி அரசவையின் வெறுப்புக்கு உள்ளாகியதால் அன்றைய சிங்களவர்கள் அவரைக் கொல்ல அவர்கள் சதியை தந்திரமாகச் செய்தனர். குராஷான் செய்யிது இஸ்மாயீல் கலே பண்டார வஸ்து ஹிமி ராஜ படுகொலை செய்யப்பட்ட விதம் பற்றி குருநாகல விஸ்தரய பின் வருமாறு குறிப்பிடுகிறது.

அதன்படி எத்தாகல உச்சியில் பிரீத் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் விசேட மண்டபத்தையும் கட்டி மன்னனுக்கு ஆசனமும் வைக்கப்பட்டது. பிரித் வைபவம் உச்சநிலை அடைகையில் சதிகார நம்பிக்கை துரோகிகள் ஆசனத்தின் கால்களை அகற்றியதால் மன்னன் பள்ளத்தில் வீழ்ந்து பரிதாபமாக இறந்தான் .

கொல்லப்பட்ட மன்னன் பேருவளையில் இருக்கும் போது இஸ்லாத்தை கற்று இஸ்லாமிய மார்க்த்தின் படி வாழ்ந்ததாக சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக குருநாகல் கச்சேரி வீதியில் அடக்கம் செய்யப்பட்டான். மார்க்க அறிவற்ற முஸ்லிம்கள் கலே பண்டார அவ்லியா என்ற நம்பிக்கையில் இங்கு சென்று பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர்.

அதிகமான சிங்கள மக்கள் இவரை கலேபண்டார தெய்யோ என அழைத்து வழிபட்டு வருகின்றனர். மன்னராக ஏற்க மறுத்தவர்கள் அவரைக் கடவுளாக வழிபடுகின்றார்கள். சிங்கள மக்கள் கலேபண்டார தேவாலய எனும் பெயரில் தனி ஆலயம் அமைத்து விழாக்களையும் இவர் பெயரில் நடத்தி வருகின்றனர்.

இவரைப் பற்றி மகாவம்சம் குறிப்பிடுகையில் வஸ்து ஹிமி அறஞ் செய்து நன்மை பெற முயன்ற அரசனாவார். இவர் இஸ்லாத்தை தழுவியவராக இருப்பினும் தினந் தோறும் 1000 பிக் குகளுக்கு தானம் வழங்குவதை கடமையாகக் கொண்டிருந்தார், வருடா வருடம் மதச் சடங்கையும் தனது முடிசூட்டு விழாவையும் அரச கெளரவப்படி கொண்டாடி ஆரவாரமாகவும் வெற்றிவீரன கவும் ஊரறியச் செய்தார் என்கிறது.

தேடல் : ஏக்கூப் பைஸல்

கருத்துகள்