புர்கா தடை பற்றி மனவேதனையுடன்.

புர்கா, நிகாப் அவசர கால சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுகின்றது. நமது முஸ்லிம்களில் சிலர் பெரு மகிழ்வுடன் வரவேற்றார்கள். ஏன்?​

அடுத்த பெண் அணிவதில் பொறாமையா? அந்தப் பெண்ணை திறந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையா? வெறும் காழ்ப்புணர்ச்சியா?

சிலர் முந்தியடித்துக் கொண்டு அவசர கால சட்டத்தின் கீழ் மாத்திரமல்ல அது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்று வீர வசனம் பேசினார்கள். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறேன் என்று கூறும் ஆளுநர் ஒருவரும் பாய்ந்து கருத்து தெரிவித்தார். உடனே ரஞ்சன் ராமநாயக்க புர்கா, நிகாப் தடை செய்யப்பட்டதனால் எங்களை விட முஸ்லிம்கள்தான் சந்தோஷமடைகிறார்கள் என்று அறிக்கை விட்டார்.

சிறு வயதிலே இருந்து நபியவர்களின் வழிமுறை என்ற உறுதியுடன் தன்னழகை மறைத்து வாழ்ந்த பெண்கள் வீடுகளில் முடங்கினார்கள். தொழுகைக்காக அல்லது ஏதாவது அவசிய தேவைக்காக அந்தப் பெண்கள் புர்காவுடன் வெளியே வந்த போது நமது முஸ்லிம்களில் சிலர்

உங்களுக்கு நாட்டு சட்டம் தெரியாதா? உங்களை பார்த்தால் பயமாக உள்ளது முகத்தை திறங்கள் இல்லையென்றால் பொலிஸுக்கு கோல் எடுப்போம்.

நாட்டு சட்டத்தை மதிக்கிறார்களாம். பைக்ல ஹெல்மட் போடாம போவாங்க. அப்ப நாட்டு சட்டம் தெரியாது. பஸ்ஸில் புர்கா தடை செய்ய வேண்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுவும் ஒரு வகையான காழ்ப்புணர்ச்சிதான்.

அபாயா தடை செய்யப்பட்டவுடன் முஸ்லிம்களின் ஆடை உரிமையில் கை வைக்க வேண்டாம் என்று குரல் கொடுப்பவர்களுக்கு புர்கா, நிகாப் தடை செய்யப்பட்ட போது அதுவும் ஒரு பெண்ணின் உரிமைதான் என்று விளங்காமல் போனதேன்?

தருணம் காத்து பழி தீர்க்கும் இனவாதிகள். தனக்கு வந்தால் இரத்தம் ஏனையவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்று உரிமை பேசும் உரிமைப் போராளிகள். ஒன்று மட்டும் தெளிவானது. ஒவ்வொன்றும் தடை செய்யப்படும் போது ஆமாம் போட்டோம் என்றால் நாளை இஸ்லாமிய பெயர் சூட்டுவதும் தடை செய்யப்படும்.

மனவேதனையுடன். ஏ. எல். ஸாஜித் ஹூஸைன்

கருத்துகள்