அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.. (உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..)
அன்று ஜூன் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை. ரமலான் பிறை 27, நள்ளிரவு 2.00 மணிக்கு இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக பிரதான நுழைவாயிலில் இருந்து 5km தூரத்திலுள்ள ஏறாவூருக்குச் செல்வதற்காக தன்னந்தனியே பாதையோரமாக காத்துக் கொண்டிருந்தேன்.
பொதுவாக ஏறாவூருக்குச் செல்வதாயின் யாழ்ப்பாணம் - கல்முனை அல்லது கொழும்பு - காத்தான்குடி அல்லது திருகோணமலை - மட்டக்களப்பு பஸ்ஸில் தான் செல்ல வேண்டும். நேரம் 2.30 தாண்டியும் எந்த பஸ்ஸையும் காணவில்லை.
ஏதாவது வரும் லொரிகளுக்கு கையை போட்டு பாப்போமே.. என நினைத்தாலும் சென்ற இரண்டு லொறியும் கண்டும் காணாதது போல கடந்து சென்றது. சிறிது நேரம் செல்லவில்லை. கனரக பெரிய லொரி ஒன்று வேகமாக வந்து நின்றது. 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்னைக் கண்டதும், "நகிண்ண மல்லி" (ஏறுங்கள் தம்பி) என்றார். நானும் எறிக்கொண்டேன். எனக்கும் அவருக்குமிடையே உரையாடல் தொடர்ந்தது.
"கோஹெத மல்லி யன்னே?" (எங்கே போறீங்க தம்பி?)
"ஏறாவூர்"
"Sinhala போட்டக் ஹரி கதாகரன்ன புழுவந்த?" (sinhala கொஞ்சமாவது பேச தெரியுமா?"
"ஹோந்தடம புழுவன்" (நன்றாகவே தெரியும்)
"கோஹெத கம?" (எங்கே ஊர்?)
"மாத்தறை, வெலிகம"
"Sinhala த.?" (சிங்களவரா?)
"நேஹே uncle.. மம முஸ்லீம்" (இல்லை uncle, நான் முஸ்லீம்)
ஏண்டா இவன எத்திட்டோம் னு மிக வித்தியாசமான ஒரு பார்வையில் என்னை பார்த்தார்.. 1 நிமிடம் அளவில் என்னுடன் எதுவுமே பேசவில்லை.. பின்னர் நானே பேசினேன்..
"எங்கே போறீங்க uncle.?"
"கல்முனை"
"எங்கிருந்து வாறீங்க?"
"Kurunegala, Pannala சுமார் 305 km தூரம்."
அந்த லாரி 40kmph வேகத்தை தாண்டி ஓடவே இல்லை.. காரணம் சாரதியின் முதுமை. பின்னர் அவர் சொன்னார்..
"முன்ன போல easy ஆ வர ஏலாது தம்பி.. எல்லா இடத்திலும் நிறுத்தி நிறுத்தி check பன்றான்.. சரியான கஷ்டம்.."
"என்ன செய்ய.. இலங்கையில் இருந்த சில மனித மிருகங்கள் செய்த வேலை.. அநியாயமாக மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவி மனிதர்களை கொன்று குவித்த இந்த நாசகாரர்கள் நிச்சயமாக இந்த மதத்தையோ இனத்தையோ சேர்ந்தவர்களல்ல.. ஏனெனில் எந்த மதவும் இவ்வாறான கெட்ட விடயங்களை வலியுறுத்தவில்லையே.. ஆனால் இங்கு இந்த வேலையை செய்தவர்கள் முஸ்லீம் பெயர் தாங்கி அல்குர்ஆனில் உள்ளதாக பிழையாக புரிந்துகொண்டு செய்துவிட்டார்கள்.. அதனால் தற்போது நாங்கள் படும் கஷ்டமும் வேதனையும் மிக அதிகம்.. அவ்வாறு அல்குர்ஆன் சொல்லியிருந்தால் நாங்கள் இவ்வளவு காலமும் அல்குர்ஆனை பின்பற்றாதவர்களாகவே வாழ்ந்துள்ளோம். அப்படியானால் நாங்கள் முஸ்லிம்களே இல்லையே."
"ஆமாம் தம்பி, நீங்கள் சொல்வது உண்மை.."
"இப்ப கூட நான் முஸ்லீம் னு தெரிஞ்சதும் இதை தானே நீங்க பேசுறீங்க, நீங்க மட்டுமில்ல.. யாரும் இதை தான் பேசுவாங்க.. எனக்கும் நிறையவே சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள்.. அதில் அதிகமானவர்கள் முன்னர் போல எங்களுடன் பழகுவதில்லை.. சற்று தயங்கியவர்களாகவே.. வித்தியாசமாகவே பார்க்கிறார்கள். அது எங்களுக்கு மிக வேதனையாக இருக்கிறது.. அந்த பழைய காலம் மீண்டும் எப்போ கிடைக்குமோன்னு தெரியல.."
"மன்னித்துக்கொள்ளுங்கள் தம்பி.. நான் இந்த வயதிலும் தனிமையில் இரவோடு இரவாக இவ்வளவு தூரம் nestle பால்மா load உடன் பயணம் செய்கிறேன்.. தினமும் இது தான் தொழில்.. என்னை போல தான் இலங்கையில் 95% ஆன மக்கள் இருக்கிறார்கள்.. இதற்கு இன மத வேறுபாடு இல்லை.. எல்லோரும் மனிதர்கள்.. உழைத்து சாப்பிடுகிறோம்.. இதனை எல்லோரும் சரியாக புரிந்து கொண்டால் ஏன் இந்த குண்டுவெடிப்பு, ஏன் இந்த மதக்கலவரங்கள்.."
சாதி, மத, இன வேறுபாடு கடந்த மனிதாபிமான (Humanity) அந்த வார்த்தைகளை அவரிடமிருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருகணம் உள்ளம் குளிர்ந்து போனது.. மேலும் தொடர்ந்தார்..
"ஆனால் அதிகமானோர் உண்மையைப் புரிந்திருக்கிறார்கள்.. அரசியல்வாதிகள் தங்களின் நிலைத்திருப்புக்கு செய்யும் காரியங்கள் தான் இவையெல்லாம்.. அந்த அரசியல்வாதிகளும் அதற்கு துணை போகும் யோசிக்காத மடையர் கூட்டமும் தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையானவர்கள்.. 30 வருட யுத்தத்தின் பின்னர் 10 வருடத்தில் எவ்வளவு பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கலாம். ஆனால் தற்போது எமது பிள்ளைகளுக்கும் நாங்கள் கடந்த அதே இருளான காலங்கள் தான் கிடைக்குமோ என பயமாக இருக்கிறது.."
"ஆமாம் uncle.. உண்மை.. இதன் உண்மையை அறிந்த நானும் நீங்களும் பேசி எந்த பயனுமில்லை.. மடையர்கள் உண்மையை விளங்கி எல்லோரும் ஒரே இலங்கையராக ஒற்றுமையாக வாழ எப்போ தான் நினைப்பார்களோ..?"
"பேசி வேலை இல்லை தம்பி.."
நான் இறங்க வேண்டிய இடம் நெருங்கவே, "ஏறாவூர் வந்து விட்டது.. என்னை இங்கே இறக்கி விடுங்க.. என்று கூறி நன்றியுணர்வுடன் நான் போய் வருகிறேன், நீங்கள் பாதுகாப்பாக போய் சேருங்க uncle" என விடைபெற்றுச் சென்றேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக