இலங்கை வரலாற்றில் 1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் தொடக்கம் பல இனரீதியான முரண்பாடுகள் மற்றும் உள்ளக கலவரங்கள் நிகழ்ந்து வருவதுடன் விடுதலைப்புலிகளின் யுத்த நடவடிக்கைகள் மற்றும் அன்மைகாலமான ஐ.எஸ் தீவிர வாதிகளின் குண்டு வெடிப்பு சம்பவங்கள் மற்றும் அதனை தொடர்ந்த உள்ளக முரண்பாடுகள் அனைத்தும் அதீதமான சமாதானத்தை நாட்டில் நாடிநிற்கின்றன. இது தொடர்பில் அரசியல் நிறுவனங்கள், பொருளாதார மையங்கள், சமூக மேம்பாட்டு கழகங்கள் என பலசாராரும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் அடைகிறது. அதிலும் குறிப்பாக கலாச்சார விழுமியங்கள் அடிப்படையிலான வாழ்வியல் கட்டமைப்பையுடைய மக்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்ற வகையில் சமயங்களும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமடைகின்றது.
சமயங்கள் என்பது மனித சமூகத்தின் வாழ்வியலை ஒழுங்குபடுத்துவதை இலக்காக உருவமைந்தவை. அது எந்த மதமாயினும் மதத்தின் பெயரில் வன்முறையும், மோதல்களையும் தோற்றிவிக்க முடியாது. மாற்றமாக அமைதியையும் சமாதானத்தையும் தோற்றிவிப்பதே அதன் நோக்கத்திற்கு ஏற்ற செயல்பாடுகளும். அதன் பிரகாரம் இலங்கை குடிகள் பின்பற்றும் பெளத்தம், இஸ்லாம், இந்து, கிருஸ்தவ மதங்களாகிய அனைத்தும் தற்கால சூழ்நிலைகமைய இச்செயல்பாடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
பொதுவாக இம்மதங்கள் அனைத்தும் சமாதானத்தை அதிகம் ஆதரிக்கும் கொள்கைகளாகும். புத்த சமயத்துக்கு அடிகோலிய கவுதம புத்தர் "அமைதி உள்ளத்திலிருந்து பிறக்கிறது. அதை வெளியில் தேடாதே" என்று போதித்தார். அதாவது அவர் தனி மனித சாந்தியில் இருந்து உலக அமைதிக்காக போதனை செய்தார்.
அதற்கொப்பவே கிருஸ்தவ மதத்தின் இயேசு அன்புக் கட்டளையை மிகவும் வலியுறுத்தினார். குறிப்பாக, பகைவர்களை மன்னித்து, அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள இயேசு போதித்தார் (மத்தேயு 5:43-48).
மேலும் பல்லாயிரமாண்டு வரலாற்றைத் தன்னுள் அடக்கி, பல பிரிவுகளாக விளங்கும் சமய மரபாகிய இந்து மதம் உலக அமைதி பற்றிக் கூறுவதைச் சுருக்கிக் கூறுவது கடினம். வேத கால சிந்தனைப்படி, எங்கும் பரவி நிற்கும் பிரமமும் மனிதரின் அகம் உறையும் ஆன்மாவும் ஒன்றே. உயிர்கள் தமக்குள் பிரிந்து நிற்பது போல் தோன்றினாலும், அடிப்படையாக உள்ள ஒன்றிப்பை உணர்வுகடந்த நிலையில் அனுபவிப்பதே விடுதலை ஆகும் என்று அது போதிக்கின்றது.
மேலும் "அமைதி" என்ற கருத்தடிப்படையிலான பெயரை உடைய மதமாகிய இஸ்லாமும் "மனித வர்க்கம் அனைவரையும் இறைவன் ஆதாம் ஹவ்வா என்னும் முதல் பெற்றோரிடமிருந்து தோன்றச் செய்தான். இவ்வாறு மனிதர்கள் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் ஆகின்றனர்" என்று போதித்து முரண்பாடுகள் அற்ற தூய சாந்திய சகோதரத்துவ உறவை மனிதர்கள் மத்தியில் போதிக்கின்றது. இதற்கமைய இந்த சமாதான உணர்வை இலங்கையர்கள் மத்தியில் போதிப்பது குறித்த மதங்களின் மார்க்க கடமையாகும்.
இதற்கமைய இலங்கையர்கள் மத்தியில் குறித்த மதங்கள் செய்ய வேண்டிய பின்வரும் சில பங்களிப்புகளை குறிப்பிடலாம் .
வன்முறை சிந்தனைகளை தவிர்த்தல்
எந்த மதமும் வன்முறை சிந்தனையை போதுப்பது கிடையாது . மதத்தின் பெயரிலான வன்முறையின் மூலம் மதத்திற்கு வன்முறை சாயல் பூசுவது முறைகேடானதாகும். உதாரணமாக அண்மைக் காலத்தில் இஸ்லாம் சமயத்தின் பெயரால் சிலர் வன்முறையில் ஈடுபட்டு உலக அமைதியைக் குலைத்தார்கள் என்பதால், இஸ்லாம் சமயம் தன்னியல்பிலேயே உலக அமைதிக்கு எதிராக உள்ளது என்னும் முடிவுக்கு வருதல் தவறு என்று "World Peace Order Towards an International State" என்ற புத்தகத்தில் பேராசிரியர் கலாநிதி முஹம்மத் அஹ்மத் கத்ரி தெரிவிக்கிறார்.
சமாதானத்தை குழைப்பது இந்த வன்முறை சிந்தனை என்று பெற்றிகா மேயர் என்பவர் கூறுகையில் " சமாதானம் வாழ்வின் எந்நிலையிலும் சாத்தியமாகக் கூடியதே: மனிதன் தனது விதியா அல்லது யுத்தத்தின் பயங்கரங்களால் துன்புறுவதா எனத் தேர்ந்தெடுப்பதிலேயே இது தங்கியுள்ளது" என்கிறார். அதனடிப்படையில் இலங்கை சூழலில் வன்முறை கலாச்சாரத்தை ஆர்வமூட்டும் பிரச்சாரங்கள் மற்றும் இன வாததகவல்களை மதத்தின் பெயரால் பரப்புவதை சமய நிறுவனங்கள் மற்றும் சமய உபன்னியாசங்கள் தடுக்க வேண்டும்.
மேலும் நிகழ்வுகளின் மையமாக வன்முறையை கையாள்வதை தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தியே புத்தரும் "கோபம் என்பது ஏனையவர்கள் செய்யும் தவறுக்காக நீ உனக்கே கொடுத்துக்கொள்ளும் தண்டனை" என்று போதித்தார். மேலும் "மிகுந்த மனதாழ்மையும் சாந்தமும் நீடிய பெருமையையும் உள்ளவராய் , அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி ஆவியின் ஒருமையை காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாக இருங்கள்"(எபேசியர்-4:2-4) என்றே கிருஸ்துவ மதமும் போதிக்கின்றது. பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே.உன் மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!நான் ஆண்டவர்!( லேவியராகமம்19:18) என்றும் பாதிப்புக்குள்ளாகிய சமயத்திலும் அன்பை பரிந்துரைக்கும் கோட்பாட்டை தன்வசம் உள்ளடக்கியுள்ளது இந்த கோட்பாடு.
மேலும் வேதநூல்களில், புராணங்களில் இடம் பெரும் யுத்தங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பான முறையான பதிவை பொது மக்கள் மத்தியில் உண்டு பன்னுதல் அவசியமாகின்றது. அவற்றின் மூலம் முறைகேடான வன்செயல்களிற்கு மக்கள் பின் புகுவதற்கான சந்தர்ப்பங்களை நீக்குவது அவசியம் அடைகிறது. இதனை ஞானியாகவும் யோகியாகவும் குருவாகவும் திகழும் யேசத்குரு ஜகி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) "மதம் என்ற சொல்லுக்கு உள்நிலை நோக்கிய ஒரு படி என்று அர்த்தம். உள்நோக்கிப் போவதற்காகத்தான் மதங்களே தவிர போர் புரிவதற்காக அல்ல." என்று குறிப்பிடுகிறார். மேலும் நபிகள் நாயகம் அவர்கள் போர் என்ற வார்த்தையையே அதிகம் வெறுக்க கூடியவராக இருந்தார்கள் என ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே சமயங்கள் அனைத்தும் போதிக்கும் அமைதியை பேனுவதற்காக வன்முறையூட்டும் சிந்தனை திணிப்பை தவிர்ப்பது பல்கலாச்சார நாட்டின் அங்கம் என்ற வகையில் அனைத்து சமயங்களுக்கும் கட்டாயமாகிறது.
தனிமனித, ஆன்மீக மேம்பாடு
நாட்டின் அமைதி அமைதியான பிரஜைகளின் உருவாக்கத்திலே தங்கியுள்ளது. ஒவ்வொரு தனிமனிதனது மன சாந்தி உலக சாந்தியில் பங்களிப்பு செய்வதன் அடிப்படையாகும். இதனையே புத்த மதமும் போதிக்கிறது. புத்தர் தனது சீடர்களுக்கு பரிந்துரைத்த கோட்பாடுகளில் "தனிப்பட்ட மனநிறைவை பதுகாத்தல் வேண்டும் ; அதனால் நல்ல நன்பர்கள் கவர்ந்திழுக்கப்படுவர்" என்பதும் ஒன்றாகும். அதாவது உள்ளக சாந்தி வெளியக சமாதானத்தை விளைவிக்கும் என்பதாகும்.
கிறுஸ்துவ மதத்தில் மீகா 6:5 இல் "மனுஷனே4 நன்மை இன்னதென்று உமக்கு அறிவித்து இருக்கிறார். நியாயம் செய்து இரக்கத்தை சினேகித்து உன் தேவனுக்கு முன்பான மனதாழ்மையை அல்லாமல் வேறே என்னத்தை கர்த்தர் உன்னிடம் கேட்கிறார்" என்று கூறுவதன் பிரகாரம் கர்த்தரின் வேண்டுகோள் அன்பும், நியாயமும் நிறைந்த வாழ்வுடன் கடவுள் கீழ்பனிவை இனைத்து பேசுவதன் மூலம் ஆன்மீகத்துடன் சமூக சாந்தி இனைத்து வழியுருத்தப்படுவது புலனாகிறது.
மேலும் இந்து மதமானது ஒருவரது பணியை இறை தொன்டு மற்றும் சமூக தொன்டு என்று பகிர்ந்து "இறைத்தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களைப் புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்" என்கிறது. அதாவது சமூக மேம்பாட்டையும் ஆன்மீக மேம்பாட்டையும் உயரிய பணிகளாக அடையாளம் காட்டுகிறது. இதற்கமைய ஒரு மனிதன் ஆன்மீக விமோசனம் அடைவதுடன் சமூக எழுச்சியில் பங்கேற்க வேண்டும் என்பது புரியவேண்டிய பாடமாகும்.
மேலும் மனித குலத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர் என அல்குர்ஆன் வர்ணிக்கும் நபிகள் நாயகம் அவர்களின் பணியில் ஒன்றாக மக்களை "தஸ்கியா" எனும் உள மேம்பாட்டை ஏற்படுத்துவதனை குறிக்கிறது. மேலும் "உடலில் ஒரு சதைத்துண்டு உண்டு. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுக்க சீர்பெறும் . அது கேட்டுவிட்டால் உடல் முழுக்க கெட்டுப்போய்விடும். அறிந்துகொள்ளுங்கள் அது தான் உள்ளம்" என நபிகளார் கூறியதாக புஹாரியில் பதிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் காணப்படும் மத பின்தொடர் பரிஜைகளை சமய தளங்களும் நிறுவனங்களும் முறையான ஆன்மீக உணர்வை உண்டு பன்னுவதன் மூலம் சமாதானம் எழுச்சி பெரும் சந்தர்ப்பம் ஏதுவாக அமையும்.
மத சகிப்புத்தன்மை
அனைத்து மதங்களும் தன்னகம் தன் சிறப்பை போதிப்பதில் மாற்றுக்கருத்து நிலவ முடியாது . ஆனாலும் ஏனைய மதங்களையும் மத வழிபாட்டு தலங்களையும் மதத்தலைவர்களையும் தூற்றவோ வஞ்சிக்கவோ எம்மதமும் இடம் கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுக்கும் பட்ச்சத்தில் அது காலத்திற்கு பொருத்தமான மதமாகும் என ஏற்க முடியாது. பல்லின சமூகங்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்ற மதக் குழுமங்களும் வாழ்கின்ற இலங்கை போன்ற நாடுகளில், மத சகிப்புத்தன்மை என்பது மிக முக்கியமானதாகும். இன ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றுக்கெல்லாம் முன்னதாக, மத சகிப்புத்தன்மை கட்டியெழுப்பப்படுவது அடிப்படையானது.
சிறுபான்மைச் சமூகங்களின் மத நம்பிக்கைகளைப் பெரும்பான்மைச் சமூகங்கள், நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்குவதோ, நாசமாக்குவதோ ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. மறுபுறத்தில், பெரும்பான்மைச் சமூகத்தின் மத விடயங்களை, சிறுபான்மையினர் யாரும் கேலிக்குள்ளாக்குவதும் பெரும் சிக்கல்களைக் கொண்டு வரும்.
ரிக்வேதத்தில் "உண்மை ஒன்று தான், ஆனால் அறிஞர்கள் அதை வெவ்வேறு பெயர்களால் அழைக்கின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அல்குர்ஆன் "மார்க்கத்தில் நிரப்பந்தம் இல்லை " ; "உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் உங்களுக்கு " என்று மத சகிப்பு தன்மையை பேசுவதுடன் " மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்." என்று கூறி இவ்வசனத்தில் மத விறோதம் காட்டாத அன்னியவர்களுடன் நல்லமுறையிலும் நீதியாகவும் நடக்கும் படி கூருவதுடன் அப்படிப்பட்ட நீதியாளர்களை அல்லாஹ் நேசிப்பதாகவும் கூருகிறது.
அந்தவகையில் பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் எல்லோரிடையும் மத ரீதியான, இன ரீதியான சகிப்புத்தன்மை புகட்டப்பட வேண்டியதாகத் தெரிகின்றது.
முறையான ஆன்மீக தலைமைத்துவம்
நாட்டின் சமாதானத்தில் முறையான ஆன்மீக தலைமைகளின் வழிகாட்டல்கள் இன்றியமையாதது. தலைமைத்துவம்கள் சமயத்தின் தொன்டர்களையும், பக்தர்களையும் நாட்டின் சமாதான நீரோட்டத்தில் வழிநாடாத்துவது அவசியம் அடைகிறது.
மத வெறியர்களை உருவாக்குவதில் முயற்சிகளை எடுப்பதிலும் அதிகமாக மனிதம் தொடர்பான உயரிய எண்ணங்களை மத அடிப்படைகளில் பிரகாரம் மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் முயற்சிகளை மேற்கொள்வதுடன் நாட்டின் சமாதானத்திற்கு பாதகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் தம் மதத்தவர்களாயினும் வழிகாட்டும் அல்லது நடவடிக்கை எடுக்கும் தலைமைகளாக செயற்படுவது, மற்றும் இனவாத சிந்தனைகளை மதத்தின் பெயரில் திணிக்கும் செயல்களில் ஈடுபடாத சமய தலைவர்களின் உருவாக்கம் நாடளாவிய சமாதானத்தில் ஒத்துழைப்பு வழங்கும் காரணியாக அமையும்.
இதற்குதாரணமாக இலங்கை முஸ்லிம் மத்தலைவர்களின் ஒன்றியமான அகில இலங்கை ஜமியத்துல் உலமா தம் மதத்தின் பெயரிலான சில அமைப்புக்கள் நம் தாய் நாட்டின் அமைதியை குழைக்கும் வகையிலான நடவடிக்கை எடுப்பதாக ஜ.எஸ் தீவிர வாத அமைப்பை சுட்டிக்காட்டி ஒரு கடிதத்தை 07.04.2013 பாதுகாப்புத்துறை செயலாளரிடம் ஒப்படைத்தமையினை குறிப்பிடலாம் . இது ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட ஆன்மீக தலைமைக்கான எடுத்துக்காட்டாகும்.
அதே போன்று 21.04.2019 அன்று இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த மிலேட்ச்சத்தனமான சம்பவத்தின் பின்னர் தம் மதஸ்தலங்கள் பாதிக்கபட்ட போதிலும் நாட்டின் வன்முறை நடத்தைகளை ஆதரிக்காமல் குறித்த சந்தர்ப்பத்தில் மக்களை அமைதிப்படுத்தி மக்களுக்கு அன்பின் வழியில் போதித்து நிலமையை சுமூகமாக்க முயன்ற கண்ணியத்துக்குறிய காடினல் மல்கம் ரஜ்ஜித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் தலைவர்களின் முன்மாதிரியும் சிறந்த உதாரணமாக அடையாளம் காட்டலாம்.
பல் மத ,கலாச்சார புரிந்துணர்வு
ஒரு நாட்டின் வெவ்வேறு உருப்புக்களாக காணப்படும் பல மதத்தவர்களும் தம் மதம் தொடர்பான அறிதலையும் தெளிதளையும் பெறுவதுடன் ஏனைய மதத்தவர்கள் மற்றும் அவர்களது மதம் தொடர்பான மெய்யான அறிவை பெறுதல் அவசியம் அடைகிறது.
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். "நபி(ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி(ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி(ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்." அதாவது அவர்களது கலாச்சார புரிந்துணர்வை நபிகளார் அறிவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது புலனாகிறது.
அனைத்து மதத்தவர்களும் ஏனைய மதம் தொடர்பான அடிப்படைளை தெரிவதுடன், கன் தெரியா வன்னம் விமர்சனங்களை பரப்புதல் மற்றும் மத தூற்றுதல் போன்ற விடயங்களை ஈடுபடுவதை தவிரத்தல் வேண்டும். பொளத்த விகாரைகளிலும் பள்ளி வாசல்களுள் , கிருஸ்துவ தேவாளயங்களும், கோவில்களும் போதிக்கும் விடயங்கள் தொடர்பாக அறிவூட்டப்பட வேண்டும். மேலும் அதனை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அனைத்து சமயத்தவர்களினாலும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு டுபாயில் அமைந்துள்ள quranic park என அறிமுகப்படைத்தப்பட்டுள்ள சுற்றுலா பகுதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். (இனையத்தில் விரிவான விபரங்கள் அறிவதற்கு : https://play.google.com/store/apps/details?id=ae.gov.dm.mamzar ).
மேலும் இந்த விடயத்தை எடுத்துரைக்கும் விதத்தில் நீர் கொழும்பில் 2016 ஆம் வருடம் இடம்பெற்ற தேசிய நத்தார் தின விழாவில் பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பின்வருமாரு கருத்துரைத்தார் .
"மதங்களினால் தாம் துருவங்களாக மாறுவதை விட அந்த மதங்களின் போதனைகள் எதைக் கொள்கின்றன என்பதை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். பௌத்தம் எதைப் போதிக்கின்றது. கிறிஸ்துவின் போதனை என்ன, இந்து தர்மம் எதைச் சொல்கிறது, இஸ்லாம் தந்த குர்ஆன் போதனை எதைச் சொல்கிறது இவற்றைப் படிப்பதால் எந்த தீயவிளைவுகளும் ஏற்படப் போவதில்லை. அதனூடாக நல்ல புரிந்துணர்வு ஏற்பட முடியும். "
இதற்கமைய மதஸ்தான நிகழ்வுகள் தொடர்பாக பொதுமக்கள் அறிய சந்தர்ப்பம் அமைத்தல் மற்றும் மத போதனைகளை மக்கள் மயப்படுத்தல் , மதங்கள் தொடர்பான சந்தேகங்களையும்; விமர்சனங்களையும் தெளிவு பெறுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தல், மதத்திலான தப்பான நடத்தைகளையும் புரிந்துணர்வுகளையும் தெளிவூட்டுதல் போன்ற விடயங்களை நாடலாவிய அனைத்து சமயங்களும் பொருப்பேற்று நடாத்த வேண்டும்.
சகவாழ்வுடன் வழிநடாத்தல்
இலங்கை பல கலாச்சார நாடு. இதில் தம் மத கலாச்சாரத்தைப் பேனி பல்லினத்தவன்கள் மத்தியிலான சகவாழ்வு சமாதான சூழலை தோற்றிவிப்பதில் அவசியம் அடைகிறது. “எல்லா மனிதர்களும் பிறப்பிலேயே சுதந்திரத்தையும், சம மதிப்பையும், சம உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் பெற்றிருக்கிறார்கள்; அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் போல் பழக வேண்டும்.” —மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழி, பிரிவு 1 இவ்வாறு கூரி சகவாழ்வை உலக மட்டத்தில் மனித வர்க்கத்திற்கு மத்தியில் போதிக்கிறது.
மேலும் “பிறரோடு ஒத்து வாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்,” நடைமுறை ஞானத்தைக்கூட அலட்சியம் செய்கின்றார் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 18:1, பொது மொழிபெயர்ப்பு)
இது தொடர்பில் 30.10.2017அன்று சுகததாச உள்ளக விளையாரங்கில் நடைபெற்ற தேசிய சகவாழ்வு திட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரையில்
"பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ எல்லா மதகுருமார்களையும் ஒரே இடத்தில் ஒரே மேசையிலே வைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்திருக்கின்றேன். அரசில்வாதிகளுக்கு ஒரு முக்கிய பொறுப்பு இருக்கத்தான் செய்கிறது. அதேபோன்று இந்த நாட்டிலே இருக்கக் கூடிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எல்லா மதத்தலைவர்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்குத்தான் நாம் இதனை செய்கிறோம். அதேபோன்று சர்வமதத் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவதனால் பல்வேறு சிக்கலான விடயங்களுக்கு தீர்வுகாண முடியும் என நான் நம்புகிறேன்" என்று கூறி மத தலைவர்களை சகவாழ்வை போதிக்கும் தரப்பிராக மாற்றுவது நாட்டின் அமைதியை தீர்மானிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆகொஸ்ட் மாதம் 11, 2016 கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்ற "முஸ்லிம்களும் சகவாழ்வின் சாத்தியப்பாடுகளும்" எனும் தொனிப்பொருளில் உலக இஸ்லாமிய மாநாடு இதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.
மேலும் சில முன்வைப்புக்கள் -
-
மேலும் நாடு பற்றிய பற்றை மதஸ்தானங்கள் போதிப்பது
-
மதத்தலைவர்கள் மத்தியில் தரிசிப்புக்கள்
-
இன வாத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களின் செய்லபாடுகளுக்கு மத அங்கீகாரம் வழங்காமை
-
பாமர மக்கள் மத்தியில் சமாதான சூழலை ஏற்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டல்
-
அடிமட்ட சமாதன வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல். உலக அமைதி ஏற்பட அடிமட்டத்தில் மக்களிடையே அமைதி வளர வேண்டும் என்பது இன்னொரு கருத்து ஆகும்.
எனவே அனைத்து மதத்தின் போதனையாகிய சமாதானம் இலங்கையில் சாத்தியமாகிய மதங்களின் பங்குபற்றுதல் அவசியமானது. ஆன்மீக தலைமைகள் மத்தியில் இவ்வாரான விழிப்புணர்வு ஏற்படுவது சமாதானத்தை அடைவதற்கான பெரும்பங்கேற்கும் என்பதில் இரு கருத்து நிலவ முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக