பல்கலைக்கழகம்

விளக்கின் அருகே விட்டில் பூச்சியாய் வீட்டையே சுற்றிச்சுற்றி வந்த ஞாபகங்கள் வருகையில் விடுமுறைக்காய் ஏங்கிய காலம் காத்திருப்பைக் கற்றுத் தந்தது...

முதன் முதலாய் பெற்ற தாய் தகப்பன் இல்லாமல் சமாளித்த பிரச்சினைகளைத் தந்த பொழுதுகளில் நான் பொறுமையைப் படித்துக் கொண்டேன்...

ஆறடி அபாயாவுக்குள்ளே அமைதியாய் சிரம் தாழ்த்தி நடந்து செல்ல சீனியர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் சீரிய நல்லொழுக்கம் தனைச் சொல்லித் தந்தது...

மிஞ்சியிருக்கும் முன்னூற்றுக் காசில் மூன்று நாளைக் கடத்திய விடுதி நாட்கள் தந்த பாடம் அது சேமிப்பைச் சொல்லித் தந்தது...

பயிலும் அறை தனிலே பண்பொழுங்கு தவறாது விரிவுரையாளர்கள் முன் வீற்றிருக்கும் முறை தனை சோதரிகள் சொல்லித் தந்த பாடம் பணிவைப் படித்துக் கொடுத்தது...

தோல்வியால் துவல விடாத் தோழமைகள் நான் தவறி விழுந்த போதும் தத்தி நடக்கக் கற்றுத் தந்த நாட்கள் எனக்கு நட்பைக் கற்றுத் தந்தது...

உணவும் உடையும் உறையுளும் உறவாய் மாறிப் போன உற்ற நட்புக்களுடன் வகுத்துக் கொள்ளப் பழகிய நாட்கள் பகிர்வெனும் பாடத்தைப் புகட்டித் தந்தது...

மண்ணில் பிறந்த மனிதனையெல்லாம் மதமெனும் பெயரால் சிதறடித்த இப்பாரிலே நட்பெனும் சங்கிலியால் சகலரையும் முடிந்திட பல்கலைக்கழகம் படித்துக் கொடுத்தது...

பட்டப்படிப்புக்கும் மேலே நாம் வாழ்க்கைப் பாடங்களைப் பயின்றிடலாம், பண்போடு வாழப் பழகிடலாம் பல்கலைக்கழகம் எனும் பாசறை வந்து பார்...

அப்ரா இல்யாஸ் BA ​வெளியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்