ஆழமான நடுக்கடலில் வலைவீசி அனுதினமும் அலையோடு போராடி அல்லாடும் வாழ்வுதனில்
கடல்காயும் உச்சிவெயிலில் உடல்வாட உழைப்பவன் கடலின் செல்வம் அள்ளி கரைக்குக் கொடுத்து -அதுவே கடமையெனக் களிப்பில் மிதப்பவன்
விடியல் தெரியும் முன்னே வாடைக் காற்றும் ஊசிபோல் நாளும் உடம்பைத் தைக்க வீரனைப் போல பாரை சூரைகளைப் பற்றி வருபவன்
குடிசை வீட்டில் குப்பி விளக்கோடும் குமுறும் கனவுகளோடும் கரை திரும்பும் கணவனுக்காய்க் காத்திருக்கும் மனையாளும்
கைகளில் ஏந்திய நுரைப் பூக்களுடன் கரை தொட்ட கால்களை கட்டிக் கொள்ளத் தவழ்ந்திடும் பூமுகப் பிஞ்சுமே இவனுக்குத் தஞ்சம்
மண்ணிற் புதைந்த சுவடுகளாய் மனதை அழுத்தும் சுமைகளுடன் மீண்டும் மறுநாற் சாமம் மிடுக்குடன் புறப்படுவான் மீனவப் போராளி.
கருத்துகள்
கருத்துரையிடுக