இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் உய்குர் முஸ்லிம்களும்

இன்று உலகம் எதிர் நோக்கியுள்ள ஓர் பாரிய சவாலாக இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் பார்க்கலாம். உலகில் உள்ள எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கு வாழுகின்ற மக்களில் ஒரு சாராரை இன்னுமொரு சாரார் அவர்களின் மதத்தை வைத்தோ அல்லது அவர்களின் பரம்பரை காரணங்களை வைத்தோ இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த இனச்சுத்திகரிப்பு செயற்பாடு என்பது இன்றோ நேற்றோ ஆரம்பித்த செயற்பாடல்ல, இது உலகம் தோன்றி மனித வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் இருந்து வருகின்ற ஓர் செயற்பாடாகும். எனவே இதுவரை இதற்கு நிரந்தர தீர்வு ஒன்று வரவில்லை என்பதே யதார்த்த நிலையாகும்.

அந்த வகையில் நாம் அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகம் உலகில் பல பாகங்களில் இனச்சுத்திகரிப்பு என்ற பெயரில் பல கொடுமைகளையும், பிரச்சினைகளையும் அனுபவித்து வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அவ்வாறு இனச்சுத்திகரிப்பு நடைப்பெற்று வரும் ஓர் முஸ்லிம் பிரதேசம் ஒன்றைப் பற்றித்தான் இங்கு பார்க்க உள்ளோம்.

இஸ்லாம் பரவியது முதல் இரண்டு நூற்றாண்டுகளிலேயே இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் சென்று விட்டது. ஆவ்வாறு தான் சீனாவுக்கும் இஸ்லாம் பரவியது

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி செய்த அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அதன்படி அன்று சீனாவை ஆட்சி செய்த "டாங்" பேரரசிற்கும் கடிதம் எழுதினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து மூன்றாம் கலீஃபா ஹஜ்ரத் உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் அதாவது கி.பி. 650ல் இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழு சீனாவிற்கு அனுப்பப்பட்டது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாமா ஹஜ்ரத் ஸஃதுபின் அபிவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் சென்ற அந்தக் குழு சீனாவின் டாங் பேரரசர் குவாஸாங் அவர்களை சந்தித்து ஒரிறை கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள்.

இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழுவிற்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் கொடுத்து வரவேற்ற குவாஸாங் பேரரசன், முஸ்லிம்கள் விரும்பியவாறு சீனாவில் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு இடமளித்து உதவி செய்தார்.

ஹஜ்ரத் ஸஃது பின் அபிவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்ட அந்தப் பள்ளிவாசல் இன்றும் கேண்டன் நகரில் மெமோரியல் மஸ்ஜித் என்று அழைக்கப்பட்டு மிகக் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஹஜ்ரத் ஸஃது பின் அபி வக்காஸ் அவர்களது அதிகாரப்பூர்வ வருகைக்கு முன்பாகவே அரபு வணிகர்கள் மூலம் இஸ்லாம் சீனாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு முழுவதும் சில்க்ரோடு வணிகத்தோடும் அரபு மக்கள் வந்து சேரும் இடமாகவும் இந்த சிங்ஜியாங் மாகாணம் விளங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளின் மக்களும் வியாபார நிமித்தமாக குடியேறியதால் பலவிதமான கலப்பு இனங்கள் சிங்ஜியாங் மாகாணத்தில் உருவானது.

1949 வரை சுயாட்சி பெற்ற தனிநாடாக சோவியத் யூனியனின் ஆதரவோடு கிழக்கு துருக்கிஸ்தான் என்ற பெயரில் விளங்கி வந்த இன்றைய சிங்ஜியாங் மாகாணம் முழுவதும் கிழக்கு துருக்கிஸ்தானாக இருந்தது.

1949ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மூலம் சிங்ஜியாங் பகுதியை தன்னோடு இணைத்துக் கொண்டது சீன குடியரசு. இந்த இணைப்பை ஏற்காத சிங்ஜியாங் மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். சீன குடியரசின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அன்றிலிருந்து இன்று வரை கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற அமைப்பு அந்த மக்களின் விடுதலைக்காக போராடி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் இப்போது தஜக்கிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர்.

அந்த வகையில் சீனாவின் ஷின்கியாங் மாகாணத்தில் வாழ்கின்ற உய்குர் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இன சுத்திகரிப்பு நடவடிக்கையைப் பற்றி ஓர் தேடல் இடம்பெற்று வருகின்றது.

யார் இந்த உய்குர் முஸ்லிம்கள்?

சீனா நாட்டின் மக்கள் அல்லது உய்குர் மக்கள் என்பவர்கள் சீனா அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் குழுவினர் ஆவர். பெரும்பாலும் இஸ்லாமிய சமயத்தை பின்பற்றும் இவர்கள் பல நூற்றாண்டுகளாகச் சீனாவுடன் வணிகம் மற்றும் அரசியல் தொடர்புகள் கொண்ட போது சீனப்பெண்களை மணந்து சீனாவிலேயே நிரந்தரமாக குடியேரிய மத்திய ஆசிய, அரேபிய மற்றும் பாரசீக மக்களின் வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றனர்.

உய்குர் முஸ்லிம்களின் மொத்த மக்கள் தொகை 10,586,087 ஆகும். சீனாவில் 56 இன மக்களில் உய்குர் இன மக்களும் அடங்குவர். உய்குர் மக்கள் சீனாவின் வட மேற்கு பகுதிகளான நிங்சியா, கான்சு, ஷிங்சியாங் போன்ற இடங்களில் அடர்த்தியாகவும் மத்திய சீனா மற்றும் கிழக்கு சீனாவின் பகுதிகளான பெய்ஜிங், உள்மங்கோலியா, ஹெபெய், ஹைனான் மற்றும் உன்னானில் பரவலாகவும் வாழ்கின்றனர். தாய்வான் மற்றும் இந்துனேஷியா நாட்டிலும் இம்மக்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர்.

சீனாவின் வடமேற்கு எல்லைப் புறமாகாணமாக சிங்ஜியாங்க் உள்ளது. இதன் தலைநகரான உரும்கியில் கடந்த 2009 ஜூலை மாதம் 5 ஆம் தேதியன்று இரண்டு இனங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் 184 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் படுகாயமடைந்தனர்.

மோதலுக்கான காரணம்

1949 வரை கிழக்கு துர்கிஸ்தானாக இருந்த சிங்ஜியாங் பகுதியில் 95 சதவீதமான மக்கள் முஸ்லிம்கள். உய்குர், கிர்கிஸ், உஸ்பெக், டாடார், ஸாலா போன்ற துருக்கிக் மொழி பேசும் முஸ்லிம் இனங்களும், டங்ஸயாங், பாவோன் என்ற மங்கோலிய இன முஸ்லிம்களும் தாஜித் என்ற ஈரானிய இன முஸ்லிம்களும் சைனிஸ் ஹாய் இன முஸ்லிம்களுமாக 95 சதவீதமான முஸ்லிம்கள் தான் இந்த மாகாணத்தில் வாழ்ந்தனர். 4 சதவீத ஹான் இன மக்களும் வாழ்ந்து வந்தனர். இதில் உய்குர் இன முஸ்லிம்கள் தான்பெரும்பான்மையினர். 1949 வரை இந்த நிலைதான் இருந்தது.

சிங்ஜியாங் முஸ்லிம்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் கைவினை கலைஞர்கள். கைவினை பொருட்கள் செய்வதில் வல்லுனர்கள். சிங்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பான்மையை குறைக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தின் காரணமாக முஸ்லிமல்லாத ஹான் இன மக்களை சிங்ஜியாங் பகுதியில் குடியமர்த்த திட்டமிட்டது சீன அரசு.

சிங்ஜியாங் மாகாணத்தில் இயற்கை வளங்கள் அபரிமிதமாக உள்ளன. இன்றைய தேதியில் சீனாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 40 சதவீதமான சிங்ஜியாங்கில் தான் கிடைக்கிறது. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் சீனாவின் 60 சதவீதமான தேவையை பூர்த்தி செய்கிறது. இன்னும் பருத்தி, கால்நடை வளர்ப்பு, காற்றாலை, கம்பளி, வேளாண்மை என்று சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிங்ஜியாங் மாகாணம் திகழ்கிறது. இப்படிப்பட்ட மண்ணிற்கு சொந்தமான மக்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை குறைத்தால் தான் அங்கே உள்ள வளங்களை சுரண்ட முடியும் என்ற காரணத்தால் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் முஸ்லிம்களைப் புறக்கணித்து ஹான் இன மக்களை நியமித்தது. உய்குர் முஸ்லிம்களிடம் உள்ள கைவினை பொருட்கள் தயாரிக்கும் திறனை பயன்படுத்தி விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்ஜியாங் பகுதியில் தொடங்காமல் மத்திய சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கினர். பிறகு இந்த மக்களை சிங்ஜியாங் மாகாணத்திலிருந்து மத்திய சீனாவிற்கு வேலை தேடி புலம் பெயர செய்தனர். தங்களது மண்ணின் வளங்களை சுரண்டத்தான் இந்த புலம்பெயர்தல் என்ற சூழ்ச்சியை அறியாத உய்குர் முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் வேலை தேடி புலம்பெயர்ந்தனர்.

பல்வேறு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த ஹான் இன மக்களை வைத்து சிங்ஜியாங் பகுதியின் வளங்கள் அனைத்தையும் சீன அரசு உறிஞ்சி வருகிறது. 1947ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95 சதவீதமாக இருந்த முஸ்லிம்கள் 2004 கணக்கெடுப்புபடி 45 சதவீதமாகவும் ஹான் இனத்தவர் 45 சதவீதமாகவும் மாறிப்போயினர்.

வேலைதேடி சீனாவின் மத்திய மாகாணத்திற்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலின் காரணமாக சீன விளையாட்டுப் பொருட்களை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தடை செய்ததின் விளைவாக அவர்கள் பணியாற்றிய ஏறக்குறைய ஒரு லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

அதிர்ச்சியுற்ற முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணிற்கு வந்த போது தான் சிங்ஜியாங் மாகாணத்தில் எல்லா முக்கிய பொறுப்புகளிலும் ஹான் இனத்தவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒரு பக்கம் வேலை வாய்ப்பற்று வறுமையில் மண்ணின் மைந்தர்கள் வாட, மறுபக்கம் அவர்களின் வளங்களை எல்லாம் ஹான் இனத்தவர் சுரண்ட, இரு சமூகத்தாருக்கும் சம வாய்ப்பளிக்க வேண்டிய சீன கம்யூனிஸ்டு அரசு ஹான் இனத்தவர் பக்கம் ஒரு தலைபட்சமாக நடக்க, மோதல் முற்றி கலவரமாகி உயிர்பலி ஏற்பட்டுள்ளது.

1949ல் சிங்ஜியாங் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து சீன கம்யூனிஸ்ட் அரசு முஸ்லிம்கள் மீது மத ரீதியான தாக்குதலையும் தொடுத்து வருகிறது. முஸ்லிம் ஆண்கள் தாடி வைக்கக் கூடாது, பெண்கள் புர்கா அணியக் கூடாது 18 வயது நிரம்பியவர்கள் தான் பள்ளி வாசலுக்கு செல்லவேண்டும், அரசு அச்சடித்து தரும் குர் ஆனைத்தான் முஸ்லீம்கள் ஓத வேண்டும் என்ற முஸ்லிம்கள் தங்கள் உயிரே போனாலும் ஏற்றுக் கொள்ள இயலாத இத்தகையை ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது சீன அரசு. ஆனால் இந்த செய்திகள் எல்லாம் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை.

பாலஸ்தீனத்தில் அரபு மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து யூதர்களை இஸ்ரேல் அரசு குடியமர்த்துவது போல ஈழத்தில் தமிழ் மக்களையெல்லாம் அகதி முகாமில் அடைத்துவிட்டு தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் சிங்களர்களை இலங்கை அரசு குடியமர்த்துவது போலத்தான் சீன அரசு மண்ணின் மைந்தர்களைப் புலம் பெயர செய்து பிற மக்களை குடியமர்த்தி வளங்களை தேசியம் என்ற பெயரால் சுரண்டி வருகிறது. போதாக் குறைக்கு உய்குர் மக்களின் மொழியான துருக்கிக் என்ற அரபி வரி வடிவம் கொண்ட மொழியையும் சிதைத்து அவர்களது கலாச்சாரத்தையும் சிதைத்து வருகிறது. தொடர்ந்து சீன அரசிற்கு எதிராக புரட்சிகள் சிங்ஜியாங் பகுதியில் நடைபெற்று வருகின்றன.

BBC அறிக்கை

சீனாவின் மேற்குப்பிராந்தியத்திலுள்ள இஸ்லாமிய பிரிவினைவாதிகளே நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலென சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய மேற்குப்பிராந்தியமான சின்ஜியாங்கை பாதுகாக்கப்போவதாக சீன அதிபர் தெரிவித்துள்ளார். அந்த பிராந்தியத்தில் ஒருகோடி உய்கர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள்.

சிரியாவிலிருந்தும் இராக்கிலுருந்தும் வரும் பிரச்சாரங்கள் மூலம் இந்த உய்குர் முஸ்லிம்கள் தீவிரவாதம் நோக்கி ஈர்க்கபடக்கூடுமென சீன அரசு அஞ்சுகிறது. தெற்கு சிங்க்ஜாங் பிரதேசம் ஒருகாலத்தில் சீனாவுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான பட்டு வணிகப்பாதையாக அறியப்பட்ட இடம். இன்று சீன அரசால் "பயங்கரவாதத்துக்கெதிரான போரின்" முன்னரங்காக வர்ணிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இதுவரை அரசால் உறுதி செய்யப்பட்ட ஒரே தாக்குதல் சம்பவம் பி ஷான் என்கிற இடத்தில் நடந்தது. அங்கே மூன்று உய்கர் இளைஞர்கள், ஹான் சீனர்களை நடுத்தெருவில் வைத்து கத்தியால் தாக்கியதில் ஐந்துபேர் கொல்லப்பட்டனர். தாக்கியவர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் குறித்த விவரம் தருவோருக்கு மிகப்பெரிய ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை இங்குள்ள சிலர் வரவேற்கிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் பாதுகாவலர்கள் இருப்பதால் இப்போது பயமின்றி நடமாட முடிவதாக கூறுகிறார்கள்.

அந்த பிராந்தியத்தில் பெரிய தொழில் வாய்ப்புகள் இல்லை. எனவே பின் தங்கிய பிராந்தியமாக இருக்கும் இந்த இடத்தில் வாழும் இளம் தலைமுறையினர் வாய்ப்பு கிடைத்தால் இங்கிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் எங்கே செல்வார்கள் என்பதே சீன அரசின் கவலை.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு ஈராக்கிலுள்ள உய்கர்கள் சீனாவில் இரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதனால் ஐ எஸ் அமைப்பினர் சீனாவுக்குள் வந்து கொலை செய்வார்களென சீன அரசு அஞ்சுகிறது. எனவே சின் ஜாங்கில் மதம் மீதான கண்காணிப்பும் அழுத்தமும் தொடர்ந்து அதிகரிக்கிறது.

மசூதிகளில் இளம் தலைமுறையினரை காண முடிவதில்லை. வயதானவர்கள் தவிர மற்றவர்களிடம் தாடி இருக்கவில்லை. திரும்பும் பக்கமெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை நன்றியுடன் நினைத்துப்பார்க்கக்கோரும் பிரச்சாரம். எல்லா இடங்களிலும் கவசமணிந்த ஆயுதப்படையினர்.

சீன அரசின் இத்தகைய அடக்குமுறையே பயங்கரவாத குழுக்களுக்கான ஆட்சேர்ப்பை அதிகரிக்குமென வெளிநாட்டு விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் சீன அரசோ வெற்றி தனதே என பதிலளிக்கிறது. அது நடக்கும்வரை ஒவ்வொரு உய்கரும் சந்தேக நபரே. அந்த பகுதிக்கு நேரில் செல்ல பிபிசிக்கு பிரத்யேக அனுமதி கிடைத்தது. அங்குள்ள நிலைமைகள் குறித்து பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்புக்களே இவை.

உய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைப்போம்

சீன அரசால் துருக்கி இன முஸ்லிம்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தங்களின் மௌனத்தை கைவிடுமாறு உலக தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக முஸ்லிம் சமூகத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.அபுபக்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிழக்கு துர்கிஸ்தான் பகுதியை சார்ந்த உய்குர் இன முஸ்லிம்கள் மீது திட்டமிடப்பட்ட இன சுத்திகரிப்பினை சீன அரசு செய்து வருவது குறித்து அதிர்ச்சி தரும் அறிக்கைகள் சீனாவில் இருந்து வருகின்றன. எந்தவித உரிமைகளும் இல்லாத வாழ்க்கை வாழ அவர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். சலாம் சொல்வது, மதுவை விட்டும் விலகி இருப்பது மற்றும் தங்கள் தாய் மொழியில் பேசுவது போன்ற சாதாரண மத விவகாரங்களில் ஈடுபடுவதாக தெரிந்தால் கூட அவர்கள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். நாஜி சித்திரவதை முகாம்களை ஒத்த இது போன்ற முகாம்களில் ஏறத்தாழ 20 லட்சம் முஸ்லிம்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிற்சி முகாம்கள் என்று சீன அரசாங்காத்தால் அறிமுகம் செய்யப்படும் இத்தகைய சித்தரவதை முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் விசாரணையின் போது மனிதாபிமானமற்ற சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதோடு கடுமையான முறையில் கம்யூனிஸ சித்தாந்தங்களும் அவர்களுக்கு புகட்டப்படுகின்றன. இவர்கள் குறித்த செய்திகள் ஊடகத்திற்கும் அவர்களின் குடும்பத்திற்கும் கூட தெரிவிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் இந்த முகாம்களில் அடைபட்டு இறந்தவர்களின் சடலங்களை கூட அவர்களது உறவினர்களிடம் வழங்குவது இல்லை.

சீன அரசாங்கத்தின் அழுத்தத்தால் முஸ்லிம் நாடுகள் உட்பட அனைத்து உலக நாடுகளும் இந்த விவகாரத்தில் பெரும்பாலும் மௌனமாக இருக்கிறார்கள். உய்குர் முஸ்லிம்களின் மீதான இந்த சித்தரவதையை கண்டித்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீன அரசு மீது பொருாளாதார தடை விதிக்க தயங்குகின்றன. பிற நாடுகளில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாகிஸ்தான் தனது நட்பு நாடான சீனாவை திருப்திபடுத்த கள்ள மௌனம் சாதித்து வருகிறது. மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் உலக மக்கள் சீன அரசாங்கத்தின் இந்த மனித தன்மையற்ற செயலை கண்டிக்க வேண்டும் என்றும் இந்த கேவலமான அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வர சீனாவின் மீது தங்கள் அரசுகள் அழுத்தம் கொடுக்க கோரிக்கை வைக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் இ.அபுபக்கர் கேட்டுக் கொண்டுள்ளார். சீன அரசை அம்பலப்படுத்த வேண்டிய இந்த விஷயத்தில் அமைதி காத்து வரும் சிவில் உரிமை அமைப்புகள் மற்றும் இந்தியாவின் இடதுசாரி காட்சிகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனவே ஓர் முஸ்லிம் மற்றைய முஸ்லிம்களுக்கு சகோதரர் என்ற ரீதியில் ஒருவருடைய, ஒரு குழுக்குறிய தாக்குதலாக இது இருந்தாலும் எம் அனைவருக்குமான தாக்குதல் ஆகும் எனவே அவர்களுக்கு உதவுவதும் அவர்களுக்காக பிராத்தினை செய்வதும் அவர்களுடைய விடுதலைக்காக போராடுவதும் எமது கடமையாகும். இதனை அறிந்து எம்மால் இயன்றவரை அவர்களுக்கு உதவி செய்வோமாக .

NAFEES NALEER ( IRFANI, SEUSL) EDITOR OF VIYOOHAM MAGAZIN வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்