சுடுகாடு அ​ழைக்கிறது!

போதும் மானிடா வேடம் பூண்டது..

உனக்கான வேளை நெருங்கிக் கொண்டிருக்க எதற்கடா ஊமை வேஷம் பேசவேண்டிய இடத்தில் பேசிவிடு!

போதும் மானிடா வேடம் பூண்டது..

உன்னுடல் சுவை பார்க்க மண் காத்துக் கிடக்க எதற்கடா அகங்கார தலைக்கனம் இருக்கும் வரை இரக்கம் கொண்டிடு!

போதும் மானிடா வேடம் பூண்டது..

ஊனுண்ணிப் புழுக்களெல்லாம் உன் பிணத்துக்காக ஏங்கிக் கிடக்க எதற்கடா பணக்கார அகம்பாவம் கொஞ்சம் ஏழை முகத்திலும் கரிசனை கொண்டிடு!

போதும் மானிடா வேடம் பூண்டது..

சுகந்தம் குறைந்து உன் உடல் வாடை உலகம் வெறுக்கும் எதற்கடா கெளரவப் பதவி அனைவரும் சமமென மதிக்கக் கற்றிடு!

போதும் மானிடா வேடம் பூண்டது..

சுற்றியிருக்கும் சுகங்களெல்லாம் ஒருநாள் உன்னை ஒதுக்கித் தள்ளிவிடும் எதற்கடா சொப்பன வாழ்க்கை உன்னால் முடிந்த தர்மம் பிறர்க்கு செய்திடு

போதும் மானிடா வேடம் பூண்டது..

சொந்தமென்று சொல்வார்கள் பந்தம் கொண்டு வாழ்வார்கள் கஷ்டம் உன்னை சூழ்கையில் யாரென்று இருப்பார்கள், இறந்த உன்னை சுமந்து செல்ல கைகட்டி நிற்பார்கள் எதற்கடா பொய்யான பாசம் முடிந்தவரை உண்மையாய் இருந்திடு!

போதும் மானிடா வேடம் பூண்டது..

உன் பெயர் மாற்றப்படும் பிணமென்று சொல்லப்படும் சேர்த்து வைத்த செல்வமெல்லாம் எடுப்பார் கையில் பொம்மையாகும் எதற்கடா பேராசை குணம் இருப்பதைக் கொண்டு திருப்தி கொண்டிடு!

போதும் மானிடா வேடம் பூண்டது..

இனம் மதம் சாதியென்று வெறி கொள்வதை நிறுத்திவிடு.! பூமியில் வாழும் வரை மனிதனாக மட்டும் வாழ்ந்துவிடு.! கொலை களவு கொள்ளையினை வேரோடு வெறுத்திடு.!

உழவர்களை வாழவிடு.! ஊழல் என்ற சொல்லுக்கே முற்றுப் புள்ளி வைத்துவிடு.! மது போதை பழக்கங்களை குழி தோண்டிப் புதைத்திடு.! பச்சிளம் குழந்தையில் கருணையை கொண்டிடு.! கண்கண்ட தவறுகளை கண்டித்து கேட்டிடு.! பெற்றோரைப் போற்றிடு! முதியோரைப் பேணிடு.! பெருந்தன்மை கொண்டிடு.!

உன் உரிமைக்காக போராடிடு பிறர் உரிமை காத்திடு! உண்மைக்கு உயிர் கொடு.! பொய்களை தகர்த்திடு.! இயற்கையை ரசித்திடு.! மரம் செடி கொடிகளை மண்ணிலே வாழவிடு.!

உயிர்களில் பரிவு கொண்டு பாசக் கரம் நீட்டிடு.! நீ நான் என்ற பகை மறந்து நாம் என்று கொண்டாடிடு.! உறவுகளைப் பேணி உன்னதமாய் வாழ்ந்திடு.! புன்னகை தந்திடு.! பிறர் மகிழ்வுக்கு காரணமாக இருந்திடு.!

மறக்காமல் காதலும் செய்திடு!!!

உன் கதை முடியும் முன் உலகத்தை உணர்ந்திடு! (ii)

அழகெல்லாம் மழுங்கவிடும் அலங்கோலம் ஆகிவிடும்.! (ii)

சுடர் கொண்டு வெய்யோன் சுட்டெரிக்க சுழல்காற்று வீசும் திசையில் சுடுகாடு அழைக்கிறது!!!

ஸுமைஹா Godapitiya வெளியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்