திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 03

இங்கு சுந்தர் அந்த பெண்ணின் நினைவுகளை சுமந்தவனாய், அவளையே நினைத்து உருகிக் கொண்டிருக்க, அவளை மீண்டும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அவ்வளவு இலகுவாய் வாய்க்குமென அப்பொழுது தெரியாது.

தன் அகத்தில் இடம் பிடித்த அந்த அழகு தேவதையை தரிசிக்க அவளை முதற் சந்தித்த அக் கடற்கரையோரம் தினசரி பயணமானான். ஆனால் அவளைக் காணும் வாய்ப்பு கிட்டவில்லை. நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாகி மூன்று மாதங்களும் மறைந்து விட்டன. ஆயினும் அவள் நினைப்பு அவனை விட்டு துளியும் அகழவில்லை. சுந்தரின் கண்கள், உள்ளம் தடுமாற "எங்கே அவள், எங்கே மனம் தேடுதே ஆவலாய்" என்று எண்ணியபடி அவன் குடியிருந்த வீட்டின் வெளியே இளைப்பாறிக் கொண்டிருந்தான்.

என்ன ஆச்சரியம்! அதே அழகு, தேவையான உயரம், நீண்ட கண்கள், பறந்த நுதல், சிவந்த சின்ன இதழ், குறைவற்ற நிறம்.. ஆம் அவளே தான். இங்கு என்ன செய்கிறாள்?

"அஹமட் தஆல் (அஹமட் வாங்க)" என எங்கோ அவசரமாய் கிளம்பிப் பயணமாகிக் கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதை விட சந்தோஷம் "என்ன பக்கத்து வீட்டிலா  இவ்வளவு நாளும்?? காணவேயில்லையே" பார்த்துக் கொண்டே இருந்தான்.

நாளும் அவளை, அவள் எழிலைக் காணத் தவமிருந்தவன், காதல் மழையில் நனைந்து கொண்டிருந்தான். சுந்தரின் ஓரப் பார்வை அவளுக்கும் தெரியாமலில்லை. என்றாலும் அதை பொருட்படுத்தாமல் தன்பாட்டில் தானிருந்தாள். அன்று காலை ஆபிஸ் வேலை கொஞ்சம் அதிகமாயிருந்ததால் நேரகாலத்துடன் நித்திரை விட்டெழுந்த சுந்தர் வீட்டின் முன் யன்னலைத் திறந்து விட்டுத் திரும்பினான். ஏதோ தடுமாற்றம். திரும்பிய வேகத்துக்கே பின்னால் யன்னல் வழியே நோட்டமிட்டான்.

அந்த விடியா இரவிலும் அவன் தேவதை நித்திரையின்றி களைத்துப் போய் ஏதோ கடினமாய் இயங்கிக் கொண்டிருந்தாள். அவளை மனதாற விரும்பும் சுந்தர் இதைத் தாங்கிக் கொள்வானா என்ன?

"இந்த நேரத்திலும் எதற்காக இவளுக்கு இவ்வளவு பிரயத்தனங்கள்?" நொந்து போனான். எப்படியாவது இவளுடன் பேச்சுக் கொடுக்க வேண்டும். வந்த கவலையில் ஒன்றும் யோசிக்காமல்  கதவைத் திறந்து கொண்டு அவள் அருகே சென்றவன் தடுமாறிப் போனான்.

கதை தொடரும்… Ruwaiza Razik வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்