ஏன் எழுத வேண்டும் என்று தானே கேட்கிறாய்..? இலக்கியங்களைத் தாண்டி இதயத்திலிருந்து வரும் நன்றிக்காக எழுதலாம்..
அறிவு வழிகாட்டிய அடைவுகளுக்காக எழுதலாம்.. விருப்புக்கள் நிறைந்த வாழ்தலுக்காக.. இரசனைகளை சுவைபட கோர்ப்பதற்காக..
யாரோ புரிந்து கொள்ளட்டும் என இன்னும் காயப்படுத்தாத உணர்த்தலுக்காகவும் எழுதலாம்.. இரவின் மீதான பிரியத்தைச் சொல்லவும் பகலின் மீதான தேவையைச் சொல்லவும் எழுதலாம்..
சில வார்த்தைகளில் இந்த எழுத்துக்கள் மௌனமாகிறது.. பல மௌனங்களை இந்த எழுத்து வார்த்தைகளாக்குகிறது..
நேசங்களையும் துரோகங்களையும் பற்றி எழுதலாம்.. அழியாத நினைவுகளையும் அழகான உறவுகளையும் பற்றி எழுதலாம்.. ஆழ்ந்த துயருக்காகவும் ஆறுதலுக்காகவும் எழுதலாம்..
தவறுகளை தடுக்கவும் தட்டிக் கேட்கவும் எழுதலாம்.. கேள்வியாய் எழுதலாம்.. பதிலாகவும் எழுதலாம்..
இந்த தேசம் செழிக்கவும் எழுதலாம்.. இன்னும் எழுதலாம்.. எழுத்து உயிரோட்டமானது அறிவாயா?
கருத்துகள்
கருத்துரையிடுக