மனித நரம்பினுள் புனிதமாய் நீந்திடும் ஐக்கியமெனும் குருதி வாக்கியமாகி வழியாகியது நல்வழி மார்க்கமான இஸ்லாமெனும் சுவர்க்கத்திலே
கரத்தோடு கரமாய் சிரம் தாழ்த்தாது மரமாய் உயர்ந்தெழ வீரு கொண்டு வேராய் பரந்திடின் வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்கும்
ஒரே இறைவனெனும் ஓரிறை கொள்கையும் கிளைகளாய் பிரிந்து குழைந்து போயிற்று தன்னிச்சை இயக்கத்தில் தயக்கத்தோடு சகோதரத்துவமும்
தந்தை சொல்லை மந்தையாக்கும் தமயனும் உற்றாரை வேற்றாராய் வெறுத்திடும் வீம்பும் நண்பனே பகைவனாக்கும் நவீன ஞாலமும் நாற்றக் குழியில் ஏற்றம் கொள்கிறது
வேடிக்கை காண விளையாட்டு பொம்மைகளாய் மனிதமின்றிய மாமிசங்களை கூலிக்கு ஆளமர்த்தி வேலியே பயிரை மேய்கிறது இங்கு
ஓரணி ஓர்குரலென ஓங்க வேண்டும் ஒற்றுமை தீபமாய் ஒளிர வேண்டும் சிற்சில சண்டைகள் சருகாய் போக சமாதானம் எங்கும் சத்தியமாகிட வேண்டும்
மனித குலத்தின் மந்திர உலகத்தில் இயந்திரம் ஆனாலும் இயல்பினை உணர்ந்து ஐக்கியம் கொண்டால் இம்மையும் கடந்து மறுமையும் மிளிர்ந்திடும்
கருத்துகள்
கருத்துரையிடுக