ரொம்ப நேரமாக உள்ளேயே சென்று கொண்டிருப்பது போன்ற பிரம்மை ஜெனிக்கு ஏற்பட்டது. அதேபோல் ஆர்தரும் உணர்ந்தான். இருவரும் ரொம்பவே களைப்படைந்து விட்டனர்.
"என்ன அங்கேயே நின்னுட்டீங்க?" என்று கேட்டான் கில்கமேஷ்.
"நாம வழி தவறி வந்துட்டோம் என்று நினைக்கிறேன்." என்றாள் ஜெனி முழங்காலில் கைகளை ஊன்றி நின்றபடியே.
"ஐயையோ... தலையெல்லாம் சுத்துதே..." என்று வலது புறமும் இடது புறமும் மாறி மாறி ஆடிக்கொண்டிருந்தான் ஆர்தர் கில்கமேஷுக்கு நடந்தது என்னவென்று புரிந்துவிட்டது.
"ஒஹ்ஹ். நோ.. நீங்க அந்த சக்கரத்தை பார்த்துட்டீங்க..." என்றான்.
இருவரும் குழப்பத்துடன்
"என்ன எந்த சக்கரம்???"என்று கேட்க அப்போது அவர்கள் இருவருக்குமே 5 நிமிடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
வருகிற வழியில் சுவரின் இடது புறமாக வரையப்பட்டிருந்த கேத்திர அமைப்பிலான ஒரு சிக்கலான சக்கரம் ஒன்றை இந்த ஆர்தர் தான் ஜெனியை கூப்பிட்டு காட்டி இருந்தான்.எத்தனை புள்ளிகள் எத்தனை கோடுகள் எத்தனை வளையங்கள் என அவற்றை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அதி சிக்கலான உருவம் அது மாளிகைக்குள் அத்துமீறி நுழையும் புதியவர்களை குழப்ப கில்கமேஷின் தாய் நின்சுன் வரைந்தது அவ்வோவியம் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே தெரிந்தமையால் கில்கமேஷ் எப்போதும் போல அந்த பக்கம் பார்க்காமலேயே கடந்து விட்டான். ஆனால் இவர்கள் இந்த மாயத் தோற்றத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்பதை உணர்ந்த கில்கமேஷ் ஜெனி அருகில் வந்தான். அவள் ஏற்கனவே தலையெல்லாம் சுத்திக்கொண்டிருப்பது போலவே உணர்ந்தாள்.
"ஹேய்...நீ என்ன பண்ண போறே?..."
"பளார்...!!!""பளார்"
"ஆஹ்..."
ஜெனிக்கும் ஆர்தருக்கும் கன்னத்தில் நன்றாக அறைந்து விட்டு அவன் பாட்டுக்கு நடந்தான். கொஞ்ச நேரம் பொறிகலங்கிப்போய் நின்று கொண்டிருந்த இருவரும் சரியாகி அவனை மீண்டும் தொடர்ந்தனர். முன்னாடி போனவன் இன்னொரு தடவை திரும்பி பார்க்கவே ஆர்தர் பயத்தில் தன் இரு கைகளாலும் இரு கன்னங்களையும் மறைத்து கொண்டான். மறுபுறம் ஜெனியோ... சுடுதண்ணியை காலில் விட்டவள் போல ஏதேதோ புலம்புவது கேட்டது. அவள் வலது கன்னம் சிவந்து போய் காணப்பட்டது.
"இப்படியா அறையுறது?? வெச்சுக்கிறேன் எனக்கும் ஒரு நேரம் வரும்..." என்று அவனுக்கு திட்டி கொண்டே வந்தாள்.
இருவரையும் பார்த்து லேசாக சிரித்து விட்டு இன்னும் உள்ளே போக அடுத்ததாக அவர்கள் எதிர்கொண்டது .இருளுக்கான கடவுள் அனுபிஸ். திடீரென எல்லா வெளிச்சங்களும் மறைந்து போனது. சுற்றிலும் ஒரே இருள். அருகில் நிற்கும் ஆட்களை கூட பார்க்கவே முடியாத அளவுக்கு அவ்வளவு இருள்.
"திடீரென ஏன் எல்லா லைட்ஸும் அணைஞ்சிடுச்சி? ஹெலோ... இங்க தானே இருக்கீங்க....?" என ஜெனி கேட்டாள்.
"ஆஹ்... இருக்கிறோம் ஜெனி... ஆனா யாரையும் என்னால பாக்கவே முடியலையே.... அது ஏன்..?" என ஆர்தர் கேட்டான்.
"இது அனுவோட வேலை...."என்றான் கில்கமேஷ்.
"அடேய்.... நீ எங்கடா இருக்கே.... யாருமே கண்ணுக்கு தெரியுறாங்க இல்லியே??? ஆமா அது யாரு அனு.... என்னு ஒரு பொண்ணு பேரு சொல்றே?" என மறுபடியும் ஆர்தர் கேட்டான்.
"ஆஹ்ஹ்... ஒரு சின்ன திருத்தம்.. அவங்க பொண்ணு இல்ல எங்க கடவுள் இருள்களின் கடவுள் இங்க இருக்குற காவல் தெய்வம்." என்றான்.
"ஒஹ்ஹ்.. காவல் தெய்வமா. அப்போ நம்ம ஆளு என்னு சொல்லு... அவங்க எல்லாம் உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க தானே." என்ற ஆர்தர் கொஞ்சம் சத்தமாக
"ஹலோ, இருளின் கடவுளே நீங்க உங்க கடமையை சரியா செஞ்சிடீங்க அதனால இப்போ நீங்க போகலாம்." என்றான்.
"டேய் லூசு... என்னடா பண்ணுறே?"
"இல்ல ஆர்தர்... அனு நமக்கு உதவ மாட்டங்க..." என்று கில்கமேஷின் சத்தம் மிக மெதுவாக கேட்டது.
"என்ன???"
"என்கிடு இறந்த சமயம் நான் எல்லா கடவுள்களையும் மதிக்காமல் பழிச்சொல் பேசி இருக்கிறேன். இவங்க ரொம்ப ரோஷம் உள்ளவங்க அவ்வளவு சீக்கிரம் அதெல்லாம் மறந்து நமக்கு உதவ மாட்டாங்க..." என்றான்.
"அடப்பாவி.. அது நடந்து 8000 வருசமாச்சே... இன்னுமா உன் மேல கோபமா இருக்காங்க..."
"ஹ்ம்ம்... இப்போ இந்த இடத்தை நாம இப்படித்தான் கடக்க வேண்டும். வேற வழியில்லை. எப்படியாவது நாம மூணு பேரும் முதலில் கைகளை கோர்த்து கொள்ளுவோம்." என்றான் கில்கமேஷ்.
"ஆமா... நீ சொல்றது தான் சரி..." என்று விட்டு மூவரும் இருட்டில் கைகளை நீட்டி ஆளுக்காள் எப்படியாவது பிடித்து ஒன்றாகிவிட முயற்சித்தனர். அப்போது கூட சரியாக யாரும் நெருங்கவில்லை.
"ஏதாச்சும் பேசிக்கிட்டே இருந்தா.. அந்த சத்தத்தில் நெருங்க முடியும்."என்றாள் ஜெனி.. எல்லோரும் அங்கும் இங்கும் கைகளை போட்டு துழாவி கொண்டிருக்க திடீரென ஜெனி.... "ஆஹ்ஹ்..."என்று கத்தினாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக