அங்கு அவனுக்கு இன்னுமோர் பேரதிர்ச்சி காத்துக் கிடந்தது. மீண்டும் விம்மி அழத் துவங்கி விட்டான். அவனுக்கு எதுவும் நிஐம் போல் தோன்றவில்லை.. உள்ளே ஓடிச் சென்றான்.
"என்ன என்ன மன்னிச்சிடு ராதா, நான் உனக்கு துரோகம் பண்ணிட்டன், கடவுள் என்ன தண்டிச்சிட்டான் ராதா, கடவுள் என்ன தண்டிச்சிட்டான்" அறைக்குள் தன் குழந்தையை வாரியணைத்துக் கொண்டிருந்த ராதாவை சுந்தர் உண்மையில் எதிர்பார்த்திருக்கவில்லை.
நட்பை இழந்து விட்ட கவலையும், நம்பிக்கைக்கு மாறு செய்த கணவன் நிலைமையும் அவள் உள்ளத்தை வருத்தினாலும், இந்த நேரத்தில் தன்னவனுக்கு தன் ஆறுதலொன்றே தேவைப் படுவதை உணர்ந்து கொண்டாள்.
"கவல படாதிங்க சுந்தர், ஏதோ நலவு ஒன்னு இருக்கும்.
“உனக்கு கவல இல்லயா ராதா? என் மேல கோவம் வரல்லயா? சொல்லு ராதா?
எந்தப் பொம்புளயும் இப்படி ஒரு காரியத்த தாங்க மாட்டாங்க சுந்தர். அதுவும் என் உயிர் நண்பியவள்.
அந்த காரணத்தால தான் வத்சலா உயிர விட்டிருக்காள் ராதா..
ஹ்ம்ம்.. இனி இந்த குழந்தைக்கு நான் தான் அம்மா. நான் பார்த்துக்குறன் சுந்தர்"
சுந்தர் தன் மனைவியை நன்றியுடன் நோக்கினான். இப்படியொரு மனைவிக்கு துரோகம் செய்து விட்ட நெருடலும், தன்னால் அநியாயமாம் ஓர் உயிர் மாய்ந்து விட்ட வருத்தமும் அவனை வதைத்துக் கொண்டிருந்தது.
காலம் உருண்டோட வாணிக்கு ஒரு தம்பியாய் வார்க்கப்பட்டான் சுரேஷ். ராதா அவனுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. வத்சலாவின் முகவாட்டத்தை அப்படியே கொண்டிருந்த சுரேஷின் மீது அவளுக்கு அளவு கடந்த பிரியமிருந்தது. வாணியும் "தம்பி, தம்பி" என சுரேஷ் மேல் உயிரையே வைத்திருக்க எல்லோர் அன்பையும் பெற்று திடமாக வளர்ந்தான் சுரேஷ்.
அவன் கட்டற்ற அழகும், வீரிய உடற் தோற்றமும், வெள்ளைத் தோலும், கலங்காத உள்ளமும், அச்சமில்லா பார்வையும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் வாணியின் உயிர் தம்பியாய், அக்காப் பைத்தியமாய் இருந்தான். யார் தன்னை பார்த்தாலும், என்ன சொன்னாலும் வாணியிடம் வந்து சொல்வதும், அடுத்த நாள் வாணி விசாரணைக்குப் போவதுமாம் ஒரு மகிழ்ச்சியான சூழல் இவர்களுக்குள் தொடர்ந்தது.
ஆயினும் இந்த ஆனந்தமும் ஆரவாரமும் இன்னும் எத்தனை நாட்களுக்கென்று தான் யாருக்கும் தெரியாது. ஆம் சுரேஷும் வயதுகளால் வளர உயர்தரம் வரை வந்துவிட்டான். வாணிக்கு பெண் பார்க்கும் படலமும் ஆரம்பித்து விட்டது. அந்த காலத்துக்குள் உண்மையில் சுரேஷ் அப் பேரழகியை பார்த்திருக்கக் கூடாது
கதை தொடரும்… Ruwaiza Razik வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
கருத்துகள்
கருத்துரையிடுக