எத்துனை இலகுவாய் ''மௌனம் என்பது மடைமைத்தனம்'' என்று கூறிவிட்டாய்...?
எவ்வித கஷ்டமுமின்றி இமைகள் சிமிட்டும் நொடிக்குள் வந்து போன உன் வார்த்தை போன்றதல்ல இந்த மௌனம்..
பிறந்தது முதலே இலகுவாய் இயல்பாய் என்னோடே ஒட்டிக்கொண்டதுமல்ல...
தள்ளி நின்று என்னை எள்ளி நகையாடிய மௌனத்தை இந்த இடைப்பட்ட காலத்தில் நான் தான் அழைத்துக்கொண்டேன்.
ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பது வேண்டுமானால் இலகுவாய் இருக்கலாம் ஒன்றை ஒன்றோடொன்று ஒன்றிப்போக வைப்பது என்பது எத்துனை சிரமமானதொன்று என்பதை அப்போது தான் கற்றுக் கொண்டேன்.
தள்ளித் தள்ளிப்போக எத்தணிக்கும் மௌனத்தை வலுக்கட்டாயமாக இருத்திக்கொள்ளலில் வந்த சிரமத்தை என் வார்த்தைகள் ஒருபோதும் வெளிப்படுத்திடாது
அதனாலோ தெரியவில்லை மௌனம் என்பது அதிகமாகவே பிடித்துப்போன தொன்றாயிற்று
சிறுகச் சிறுக சேர்த்து வைத்த மொத்த நேசத்தையும் அதன் மீது தூவியே அதனை என்னோடு ஒன்றிக்கொள்ள வைத்ததன் வெற்றியை இன்று வரை நிரம்பவே அனுபவித்துவிட்டேன்.
''மடைமைத்தனம்'' என்ற பெயரை என் மௌனத்திற்கு நீ சூட்டிய பொழுதொன்றில் ஒற்றைப் புன்னகையை உனக்கு பரிசளித்தபடியே நான் நகர்ந்தேனே அதனைக் கற்றுத்தந்ததும் இந்த மௌனம் தான்.
''உன் கண்ணீரின் முகவரி தொலைந்து போய் கனநாளாயிற்றோ'' என்று உன்னைக் கேள்வி கேட்க வைத்தும் இந்த மௌனம் தான்.
என் மொத்த காயங்களுக்கும் மருந்திட்டது மௌனம் மொத்த வாழ்க்கையையும் புன்னகையால் அலங்கரித்தது மௌனம்
விசித்திரமானதொரு வீரத்தை கற்றுத்தந்தது மௌனம் அமைதி எனும் சாரலை என் மீது தூவிற்று மௌனம் ஆக்ரோசமாய் கிளர்ந்தெழும் அத்தனை உணர்ச்சிகளையும் அடக்கியாண்டு நிதானமாய் செயற்பட சொல்லிந்தந்தது மௌனம்.
நெடு நாட்களாய் தொலைந்து போன நிம்மதியை தேடித்தந்ததும் மௌனம் தான்
மௌனம் என்னை உயிரோடு மரணிக்கச் செய்யவில்லை மரணத்தை நோக்கிய என் பாதையை உயிர்ப்பாக்கியது
கருத்துகள்
கருத்துரையிடுக