இஸ்லாம் கூறும் அறிவு எது?

இஸ்லாம் வெறும் அறிவை மட்டும் நோக்காகக் கொண்டு அறிவு தேடுதலை வலியுறுத்தவில்லை. செயலற்ற அறிவு பயனற்றது என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும். ஒருவனின் செயல் ரீதியாக வெளிப்படாத அறிவு முற்றிலும் பயனற்றது என இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் கருதுகின்றார்கள். பல்வேறு கலைகளையும் கற்று தனது அறிவைப் பெருக்கும் பணியில் மிக ஆர்வத்துடன் ஈடுபட்ட ஓர் இளைஞன் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிய ஒரு சிந்தனைச் சிக்கலுக்கு ஆளாகி இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களிடம் அது பற்றிய தெளிவை வேண்டினான். அந்த இளைஞனின் சிந்தனைச் சிக்கலைத் தெளிவுபடுத்தி அவனுக்குப் பதிலளிக்கும் வகையில் இமாமவர்கள் ‘அய்யுஹல் வலத்’ என்னும் ஒரு நூலை எழுதினார்கள். அதில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

இளைஞனே! நீ எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் செயலற்றவனாக இருக்காதே. ஒழுக்க, ஆத்மீகப் படித்தரங்களில் ஒரு வளர்ச்சியின் நிலையிலன்றி வெறுமையாக இருக்க முயற்சிக்காதே. ஒருவன் ஆயிரக்கணக்கான நூல்களைப் படித்திருந்தாலும் சரியே, அவன் அதன் அடிப்படையில் செயலாற்றாதவரை அது பயனற்றதாகும். அறிவு என்பது ஒரு மரம் போன்றது. செயல்பாடே அதன் கனியாகும். நீ நூறு ஆண்டுகள் கல்வியைக் கற்று, ஆயிரம் நூல்களைச் சேகரித்திருந்தாலும் அதன் அடிப்படையில் செயலாற்றுவதன் மூலமே அல்லாஹ்வின் அருளுக்கு நீ ஆளாக முடியும். ‘’இளைஞனே! செயலற்ற அறிவு பைத்தியமாகும். அறிவற்ற செயல் வெறும் போலிப் பகட்டாகும்’’

கலாநிதி எம். ஏ. எம் சுக்ரி

கருத்துகள்