காலாவதியான நேசம்

"ஒரு காலாவதியான நேசத்தை இன்னும் எத்தனை காலத்திற்குதான் தூக்கி சுமப்பாய்?" என கேட்கிறார்கள்

எப்படி சொல்வேன்? எப்போதோ நானொரு காலாவதியான தருணமொன்றிலேயே தங்கி விட்டதனை

அன்பே! ஒரு காலாவதியான நேசத்தைப்பற்றிச்சொல்ல என்னப்போலவே யாருக்கும் இங்கே பல்லாயிரம் கதைகள் இருக்கக்கூடும்தானே?

அந்தோ! காலாவதியான ஒரு நேசம் காலத்தோடு கலந்து யாருமே கைகளில் ஏந்த முடியாதபடி அவ்வளவு கனத்துப்போய் விடுகின்றது

இன்னும் யாரும் நினைப்பது போல் எளிதில்லை காலாவதியான ஒரு நேசத்தை தூக்கி சுமப்பதென்பது

நிற்க காலாவதியான அனைத்துமே தரம் குன்றி தன் இயல்பை இழந்து விடுமென்றால் இப்போது நாம் கைகளில் ஏந்தும் இவ்விசக்கோப்பைக்கு என்ன நேரும்?

இல்லை அது அவ்வாறில்லை

நேசமென்பது என்ன? பல நூறு வருடங்கள் பழைமையடைந்ததொரு மதுக்கிண்ணம் தானே??

காலத்தின் நீட்சியில் அதிகரிக்கிறது அதன் சுவை!!!

ரிஸ்கா முக்தார் வியூகம் வெளியீட்டு மன்றம்

கருத்துகள்