காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 75

ஜெனி கீழே விழுந்ததும் ஓடிப்போய் அவளை தூக்கியவன் மறுபடி கொண்டுவந்து கட்டிலில் போட்டான்.

"என்னாச்சு இவளுக்கு வைத்தியருக்கு சொல்லி வர சொல்லு" என்று அங்கு நின்றவனை பணித்து விட்டு அவள் அருகிலேயே அமர்ந்து இருந்தான் என்கிடு.

எங்கே தனக்கு ஒன்றுமில்லை என்றால் அனுப்பி விடுவானோ என்று பயந்தே சட்டென யோசித்து மயங்குவது போல் நடித்தாள் ஜெனி. இவ்வளவு நேரம் அவள் யோசிக்காத ஒரு விடயம் அவன் வைத்தியரை அழைத்து வர சொன்ன போது அவளை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தி இருந்தது.

"இவ்வளவு நேரம் என்கிடு என்னிடம், ஏன் மித்ரத்திடம் கூட தமிழில் தானே பேசிக்கொண்டு இருக்கிறான். இதை எப்படி நாம கவனிகாம போனோம். சரி இருக்கட்டும் இவனும் கில்கமேஷ் போலவே சீக்கிரமே மொழிகளை கற்றுக்கொண்டான் போல. எல்லாம் நல்லதுக்கு தான் இருக்கட்டும். கொஞ்ச நேரத்திற்கு இப்படியே இருக்க வேண்டும்."

என்று மனதில் எண்ணிக்கொண்டாள். அவளுக்கு தான் அணிந்திருந்த அந்த டிவைஸ் பற்றி மறந்தே போனது அது கட்டிலுக்கு அருகில் மேசை விளக்கு வைக்கப்பட்டிருந்த சிறிய மேசையின் கீழே கிடந்தது. மறுபுறம் டிடானியா,கில்கமேஷ் மற்றும் விக்டர், இவளது அழைப்புக்காக காத்துகொண்டு இருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்தார். ஏதோ பரிசோதனை செய்து பார்த்தார். போதாக்குறைக்கு ஒரு ஊசியையும் போட்டு விட்டார். பல்லை கடித்து கொண்டு மயக்கத்தில் இருப்பது போலவே நடிக்க வேண்டியதாயிற்று. ஜெனிக்கு ஊசி என்றால் பயம்... இப்போது  அதுவும் நடந்தேறி விட்டது.

"இவளுக்கு என்னாச்சு ஏன் திடீரென மயக்கம் போட்டு விழுந்தா ஏன் இன்னும் கண்ணு முழிக்காம இருக்கா?" என்றெல்லாம் என்கிடு கேள்விகளை அடுக்கி கொண்டே போனான்.

"ஏதோ உளம் சார்ந்த பிரச்சினையா இருக்கணும். அப்படியான வங்க தான் அடிக்கடி இப்படி மயக்கம் போட்டு விழுவாங்க. இன்சுலின் போட்டு இருக்கேன் கொஞ்ச நேரத்தில் முழிச்சிடுவாங்க இவங்க பெட்ரெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கு பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள்." என்று சொன்னதும் ஜெனிக்கி வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் போல் இருந்தது.

"அடப்பாவி டாக்டரே! நடிக்கிறேன் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இப்படி தான் எல்லோரிடமும் வசூலிக்கிறாயா?" என்று எண்ணி கொண்டாள்.

அவர் போனதும் அந்த ஆளும் கூடப்போகும் படி என்கிடு உத்தரவிட்டான். அவன் அறையில் இருந்து போக யோசித்தான். இனி என்கிடுவின் உத்தரவையும் மீற முடியாத நிலையில் அங்கிருந்து அகன்றான். கொஞ்ச நேரம் என்கிடு ஜெனி அருகிலேயே உட்கார்ந்து இருந்தான். டாக்டர் சொன்ன ஒரு விடயம் அவனை யோசிக்க வைத்தது.

"உளம் சார்ந்த பிரச்சினையா. உனக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்" என்று அவனே கேட்டுக்கொண்டு அவள் நெற்றி முடியை விலக்கி விட்டான்.

இன்னொரு ஆடவன் கை ஒரு விதமாக முகத்தில் ஊறுவதை சகிக்க முடியாமல் கண்களை திறந்து விட்டாள். அவனும் கையை விலக்கி விட்டான். அவள் மறுபடி எழுந்து உட்கார்ந்து,

"சாரி.. எனக்கு என்னாச்சு நான் இங்கு இருந்து போக இருந்தேனே. மறுபடி என்னாச்சு?" என்று புரியாமல் குழம்புவது போல் கேட்டாள்.

"நீ மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்துட்டே.."என்றான்.

"ஐயோ, இப்பெல்லாம் அடிக்கடி இப்படி ஆகுதே அப்போ நான் போய்ட்டு வரட்டுமா?"என்று எழும்பினாள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அவன் கையை பிடித்து இழுத்து வலுவாக கட்டிலில் அமர்த்தினான்.

"நீ எங்கும் போகப்போறதில்லை உனக்கு ஓய்வு அவசியம் என்று வைத்தியர் சொன்னார். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இங்கேயே தங்கி ஓய்வு எடுத்து கொள்." என்றான்.

"என்ன, முன் பின் தெரியாத ஒருவர் வீட்டில் நான் எப்படி தங்குவதாம். எனக்கு என்று வீடு உள்ளது. அதோடு என்னோடு கரிசனை காட்ட நீங்கள் யார்?"

என்று வெடுக்கென்று கேட்டாள். அது வேண்டுமென்றே கேட்டது என்பதை அறியாத என்கிடு,

"நண்பன் என்று வைத்து கொள். உனக்கு இஷ்டம் இல்லாவிடினும் நான் சொல்லும் வரை நீ இங்கு இந்த அறையில் தான் இருக்க வேண்டும்." என்று அவனது கம்பீரமான குரலில் அதிகாரமாக சொன்னதும் உள்ளுக்குள் மகிழ்ச்சியில் குதித்து கொண்டும் வெளியே ஏதோ பயத்தில் ஓகே சொல்லியும் தான் நினைத்ததை சாதித்து கொண்டாள்.

"சரி.... நீங்கள் இவ்வளவு தூரம் சொல்வதால் இங்கேயே தங்கி கொள்ளுறேன்." என்றாள்.

"சரி தூங்கி ஓய்வு எடு." என்றுவிட்டு என்கிடு வெளியேறினான்..

"ஹ்ம்ம்."

******************

"இன்னமும் ஒரு ரெஸ்பான்சும் வரல"

என்று விக்டரையும் டிடானியாவையும் பாடாய் படுத்தி கொண்டிருந்தான் கில்கமேஷ். அவன் பட்டுத்திரியும் அவஸ்தையை பார்த்து கொண்டு ஆளுக்காள் பார்த்து சிரித்து கொண்டனர் விக்டரும் டிடானியாவும்.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்