மீன்களை அரவனைத்தபடி ஆதியிலிருந்து வசித்து வந்தது குளம் அதன் நீர்ச் சரடுளை சிறு உறுத்தலுமின்றி அடாத்தாக துரத்தி விட்டு இருப்பிடங்களை நிர்மாணித்து குடியேறி வசிக்கலானோம்
இப்போது ஒதுங்குவதற்கு சிறு குட்டையின்றி சாலை தோறேும் கை விடப்பட்ட பூனைக்குட்டிகளென அனாதரவாக அலைந்து திரிகி்ன்றன
ஓயாது பெய்யும் அடை மழையில் வெளியேறிச் செல்ல வேறு வழியின்றி சாலை தோறும் திட்டுத் திட்டாக கிடக்கிறது நீர்க் தாரைகள்
அது விரைந்து செல்லும் வாகனங்களின் சில்லுகளினிடை அரைபட்டுச் சிதறுகையில் மீன்களின் கத்தலும் கதறலும்தான் கேட்கிறது
உடன் குளமொன்றை வரைந்து போக்கிடமின்றி அலைவுறும் நீரினை கையோடழைத்து வந்து குளத்தினுள் மெதுவாக இறக்கி விடுகிறேன்
பூர்வீக நிலத்திற்கு மீளத் திரும்பிய குதுகலத்தில் தனது பறவைகளை அழைத்துப் பேசி ஆற்றுப் படுத்துவதனை கண்ணுற்ற இரட்டிப்பு மகிழ்ச்சியில் திரும்பி வருகிறேன்
என் மனசின் குளத்தினுள் ஓயாது கேட்கிறது மீன்களின் இனிமையான பாடல்
கருத்துகள்
கருத்துரையிடுக