வெண்கோல் செங்கோல்!

உலகை உவந்து மாற்ற உங்கள் உன்னத ஊக்கம்! மனமுறியா உங்கள் எண்ணம் முற்றிலும் தன்னடக்கம்! வானத்து நிலவை மின்னும் நட்சத்திரங்களை சூரிய குடும்பத்தை காணாமல்இயற்கையின் எழிலை நிறங்களைஇனிதே நன்று படித்தறிந்து அலை வரிசையை பிடித்தறிந்து பகுத்தறிந்து பலமறிந்து குரலின் இனிமையை வைத்தே அடையாளம் சொல்லும் கைங்கரியம்!

அன்பு அன்னை நிலவைக் காட்டி அண்ணம் ஊட்ட முடியாது எத்தனை நொந்து இருப்பாள் எத்தனை வெந்து இருப்பாள்! இருப்பினும் அவள் சாமர்த்தியம் குயிலின் கூக் கூவை சொல்லி அல்லவா அவள் உங்களுக்கு அண்ணம் ஊட்டினாள்!

ஆதங்கம் கலந்து ஆனந்தத்தில் ஆகாரம் ஆசை தீர ஊட்டினாள்! நீங்கள் ஏது பாவம் செய்தீர்! இயற்கை அல்லவா உங்களைச் சோதித்தது! இயற்கையை வென்று நீங்களோ சாதனை புரிந்தீர்கள்!

வெள்ளைப் பிரம்பு அல்லவா உங்கள் உன்னத உரிமை! உங்களை வழி நடாத்தும் செங்கோல் அந்த வெண்கோல்! உங்கள் பார்வைகள் தான் தொலைவில் தொலைந்தாலும் பார்வை உள்ளோர் பார்வைகளில் ஒளிக்கீற்றாய்ப் பட்டுத் தெறிக்கின்றீர்கள்!

பார் போற்றும் படி வாழ்கின்றீர்! பார்வை உள்ளோர் பாராமுகமாய்! முற்றிலும் ஊனமுற்றவர்களாய்! பார்வையின்றி நீங்கள் பரந்த வானில் நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டு உலகை வெல்ல சலனமற்றவர்களாய்!

இருளை ஆடையாய் அணியும் பாதிப் பேர் விடியலே இல்லாமல்! இருட்டறை வாழ்வில்.... இருளே உங்கள் வாழ்வான போதும் வெளிச்சத்தை உடுத்தி வாழ்வை அழகு செய்கிறீர்கள்!

இருளின் விடியலில் கல்விப் பிரகாசம் வளம் செய்கிறது உங்கள் வாழ்வை! வாழ்க வளமுடன் விழி உள்ளவர்களுக்கு வழி காட்டுபவர்களாய்!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS -2
பஸ்யால
(இக்கவிதை வெள்ளைப் பிரம்பு தின நிமித்தம் 15/10/2019)

கருத்துகள்