கண்ணே! என் தாய்மையின் வரைபடம் உருவழிந்து கொண்டிருக்கிறது. காத்திருப்புகள் காற்றாடி வீச, உருவம் காட்டும் மாத உதிரம் எப்போது தான் உன் உருவம் காட்டுமோ?
சமூகத்தின் தீட்டுப்பட்ட வார்த்தைகள் தினமும் என்னைத் தீண்டுகின்றன கழிவு நீராக-அவை எலும்புகளையும் நரம்புகளையும் சேதமாக்குகிறது கண்ணே!
முலை நுகரப்படாத உயிராய் வாழ்வதாலோ, மலடியெனும் மகுடம் சூடி மகிழ்கின்றனர். காலத்தின் பழுத்த சருகுகள் முதுகில் சுமையேற-என் கனத்த தனங்கள் அழுகிக் கொண்டுடிருக்கிறது
புண்ணான என் நெஞ்சில் புழுப்பிடிப்பான நினைவுகள் வடிக்க முடியா வார்த்தைகளாக வரம் பெற்றதுவோ?
கருவறைக்குள் வெறுமையின் விம்பம் வெறித்துக் கொண்டிருக்க, காலப் பருவத்தில்-தாய்மையை எப்போது உணர்வேன் கண்ணே?
என் உப்பிய வயிற்றின் மீது உன் அப்பாவின் இதழ்கள் எப்போது பதியும்? உனக்கான ஆசை முத்தங்களாக.
தவிப்பில் உன் தந்தையும் சொல்லாது பருகும் வார்த்தைகளால், வெளிச்சமற்ற தேசமாகிறது உனக்கான என் உலகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக