மணாளனே மீண்டு விடு

காலப் பெட்டகத்தில் காத்திருக்கும் காரிகையின் கனவின் பிரசவங்கள் கானலாகிக் கரைந்திட கங்கணம் கட்டும் நம்பிக்கை மட்டும் வட்டமிடுகிறது

இதழ்களில் மௌனம் வடிகட்டிய சிற்பமாய் இவள் மீது நிசப்தம் சுமத்தப்பட காலத்திடம் சாவியைக் கொடுத்து விட்டுக் காத்திருக்கிறேன்

நெருக்கங்களால் நாமும் நெகிழ்ந்து போன பௌர்ணமி இரவுகளை எண்ணும் போதெல்லாம் ஊசியாய்த் தைக்கும் வாடைக் காற்றிலே நைந்து போகிறேன்

காலம் நமக்கு கணக்கு வைக்க உறவு அதில் பிணக்கு வைக்க இருளைப் பரப்பும் விளக்கோடு விழித்திருக்கிறேன்

சிரிக்கும் வளையல்கள் சிதைந்து கிடக்க சிறகுகள் சுமையாகினாலும் பருவப் பார்வையில் உருவம் பெற்ற உந்தன் உயிரோடு உயிர்த்திருக்கிறேன்

மணவாளனே உந்தன் மனைவி மண்ணறை செல்லும் முன் மீண்டு விடு

நிலாக்கவி நதீரா முபீன்

கருத்துகள்