சாபச் சங்கீதம்

பருவங்களின் அலை மோதல்களை காலங்கள் கைகளுக்குள் சுருக்கி கனவுப் பைகள் வீங்க இறை கணக்கு மறந்து வீதியோரம் விதி எழுதுகிறாள்

உணர்வுகளின் பரிமாற்றல்களை உயிர்களுக்குள் புதைத்து கண்ட நொடிப் பொழுதில் காரணமின்றி தொற்றிக் கொள்ளும் வியாதியின் புரிதலை காதல் என்கிறாள்

வெட்டவெளி நிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் காலாற யாரும் காசு கொடுப்பதில்லை அழுகையின் அடிக்கல்லும் வாழ்க்கையின் வடுக்கலும் சிந்திக்க மறந்த ஓர் வார்த்தையால் நிர்பந்தமாகிப் போவதை மறந்து போகிறாள்

கல்வி தொலைத்து காதலை தேடினாள் உறவுகள் இழந்து கணவனை விரும்பினாள் கற்பு விற்று விவாகரத்து வேண்டினாள் விரும்பாத விதியை விழிகளுக்குள் நெய்து நொறுங்குகிறாள்

ஆரவாரமில்லா அறைகளின் தாழ்பாளுக்குள் அத்தியவசியமாகிப் போன இச்சையின் உருவத்தை கருப்பை சவக்குழிக்குள் அடக்கம் செய்யும் போராட்டத்தில் தாய்மையின் இரக்கம் உருகி நிற்க

ஈன்ற மேனி இரத்தம் மாற முன் அநாதை என்னும் பச்சை குத்தி தொப்புல் கொடி உறவை தாய்ப்பாலுக்குள் மறைத்து வலி பொறுக்கிறாள்

பிறந்த வீட்டின் ரோசம் காக்க புகுந்த வீட்டின் மானக் கப்பலுக்குள் கை விட்ட காதலன் முன் கை பிடித்த கணவனிடம் நம்பிக்கை இழக்கிறாள் நிம்மதி தொலைக்கிறாள்

ஏரூர் நிலாத் தோழி

கருத்துகள்