சிற்பியின் சரிதை

நிறங்களற்ற இரவுகளில் வலிகளைப் பருகும் விழிகளின் வழியே வழியும் புன்னகையை புசித்திடுவார் யாரும் உணர்ந்ததில்லை அவள் உளவறையை

மணவறை ஏறாச் சிட்டு மயானக்காட்டில் கற்பனைகள் உயிர் உதிர்த்த வலி பூசி புன்னகைக்கையில் அதன் ஆழ்மனது சிதறல்கள் காற்றிடையாகி கருகுவதை உணர்ந்தாரில்லை

நேசம் வராக் கல்வியில் சாதனை திரட்ட கல்க்கியாகி கண்ணீரோடு வெளியான கண்ணதாசனின் வறுமையாகி பேனா எடுத்து வரி தள்ளி பிரபஞ்சம் பிய்த்தெறிந்த வைரமுத்துவின் வரியாகி

தன்னை தடம் போடும் போதெல்லாம் வந்த நபி வழியில் தன்னை சுதாகரிக்கும் அவள் இருட்டறை வெளிச்சம் தெரிந்தாரில்லை

உருகிடும் போது உணர்வதில்லை யாருக்காகவோ என்று எண்ணி விட்டால் மெழுகும் தாங்காது தாங்கி நிற்பதெல்லாம் ஏற்றுக்  கொண்ட விதியின் சுவை

புன்னகை தரும் வாழ்வில் கண்ணீரை ரசிக்கும் வரம் காலத்தின் அனுபவ வேர்களால் கட்டிப் போட்டிருக்கும் அவளை காணக் கிடைத்தாரில்லை

அன்பில் உண்மை நேசத்தில் நிதானம் நம்பிக்கையில் நேர்மை ஏமாற்றத்தில் விழிப்பு துரோகத்தில் துணிவு அத்தனையும் திணிக்கப்பட்ட அவளில் தங்கி வாழ்வதெல்லாம் யுகத் தவம் .... புரியாத விழிகள் அரும்பும் அவள் இருப்பின் ஆழம் அறிந்தாரில்லை யாரும்

நிமிர்ந்து நிற்க காணாத வழிகள் எல்லாம் உயர்ந்து கொடுக்கும் சிற்றெறும்பின் கால்கள் உடைக்க நீளும் கரங்களை தட்டி எறியும் அது யாரோடும் இனி நிராயுதபாணியாய் போரிடப் போவதில்லை

தூரத்தில் கொஞ்சப் பேர் பக்கத்தில் பல பேர் விட்டு அகன்றவரெல்லாம் சிற்றெறும்பு அவளென்று கணக்கெடுத்து நின்றவரெல்லாம் நின்ற இடம்தனில் அவள் சிலையாகி சிதைந்திருப்பாள் என்றெண்ணி முடிப்பதற்குள் சிற்பியாகி நின்றாள்

ஏரூர் நிலாத் தோழி

கருத்துகள்