உலகில் சஞ்சரிக்கும் மனிதன் என்ற ஜீவனுக்குள் அவனை அறியாமல் சில குழப்பங்கள், குரோதங்கள், இனம்புரியாத குணங்கள், என பல விசித்திர என்னவளைகளோடு வாழ்க்கையில் விரிசல்களை கடப்பதற்கு முயற்சிக்கும் சாதனையாளர்கள் தான் தன்னம்பிக்கையாளர்கள்.
நம்மைச் சுற்றி பல நபர்களை கண்டிருப்போம். இவ்வுலகில் ஏதோ ஒரு மட்டத்தில் அவர்களுடைய வாழ்வைத் துவங்கி வாழ்ந்து கொண்டிருப்பார். ஒவ்வொருவரும் ஒரு இலக்கை அடைய வேண்டுமென்று புறப்பட்டாலும் இடைநடுவே வரும் சில சோதனைகளினால் குறிக்கோள் சிலருக்கு திசை மாறி விடுகின்றது. அதற்கான காரணம் வறுமை யாக கூட இருக்கலாம். அல்லது பௌதிக சூழலாக இருக்கலாம். இன்னொரு மனிதனின் அணுகுமுறை ஆகவும் இருக்கலாம். ஒவ்வொரு நபருக்கும் நீங்கள் நினைத்த கனவு நனவாகாமல் இருப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்டால் பல காரணங்களை கூறி முடிப்பார். இதற்கிடையில் பலதரப்பட்ட சோதனைகளுக்கும் தடைகளுக்கும் மத்தியில் வெற்றி அடைய துடிக்கும் வீர மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு மனிதனின் தன்னம்பிக்கையின் அளவைப் பொருத்து வெற்றி சிகரத்தின் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த உலகில் பிறந்த எல்லா மனிதரிடமும் அவரவருக்கு என்று ஒரு தனி திறமை இருக்கிறது. அந்த திறமையை அடையாளம் கண்டு அதை மேலும் வளர்க்கும் பொருட்டு அந்த ஆற்றலை பயன்படுத்தி நம்மால் வெற்றிபெற இயலும். எனவே ஆற்றல் திறமையின் மீது தன்னம்பிக்கை வைத்திருப்பவர்களை "தன்னம்பிக்கையாளர்கள்" என்று கூறலாம். பிறப்பினாலோ அல்லது வளர்ப்பு சூழலிலே ஒருவர் கூச்ச சுபாவமும் வெட்க உணர்வும் கொண்டவராக இருந்தாலும் வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் அதை உணர்ந்து கூச்சத்தையும் வெட்கத்தையும் வீசியெறிந்தால் தான் வெற்றியாளர்களாக கண்டிப்பாக மாற முடியும்.
கூச்சமும் குற்ற உணர்வும் முன்னேற்றத்தின் முதல் எதிரிகள் என்று கூட வரையறை செய்யலாம். உணர்வும் கூட ஒரு மனிதனின் பிடரியை தள்ளி எழுத்து பின்னோக்கித் தள்ளும். கண்ணுக்குத் தெரியாது நம்மோடு கூடவே நட்பாகியதை நாம் அடையாளம் காணவேண்டும். சமுதாயம் விதித்த தர்மங்களையும் நியாயங்களையும் பின்னோக்கி தள்ள கெட்ட நட்புகளின் சுவாசத்தால் தன்னையும் தன்மானத்தையும் மறைந்து செய்த குற்றங்களும், பலிகளும், பாவங்களும் மனசாட்சியில் குற்ற உணர்வாக பதியப்படுவதனால் ஆற்றலும், குறைபாடுகளும், அச்சங்களும் உருவாகி தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தை பின்தள்ளி தாழ்த்தி விடுகிறது எனலாம். அதனால்தான் "தருமூலர்" போன்ற பெரிய அறிஞர்கள் "தன்னையறி தனக்கொரு கேடில்லை" என்று சொல்லி சொன்னார்கள் போலும். எதேன்ஸ் மாநகரத்து எழில் மிக்க இளைஞர்களே! ஓடி வாருங்கள், கூடி நில்லுங்கள் உங்களுக்கெல்லாம் உன்னதமான ஒரு வெற்றியின் இரகசியத்தை போதிக்கிறேன் என்று சாக்ரடீஸ் சொன்னது "உன்னையே நீ அறிவாய்" என்பதுதான்.
வெற்றியின் விளிம்பை தொட வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் எல்லாம் தவறாக புரிந்து கொண்டவர்கள் தன் பெயரையும் தன் குடும்பத்தையும் உறவுகளையும் நண்பர்களையும் அறிந்திருக்கும் போது வேறென்ன அறிவதற்கு இருக்கிறது என்று எண்ணாமல் தன் பலம் என்ன? தன் பலவீனம் என்ன? எதன் மீது வெறுப்பு? என் இலட்சியம் என்ன? என் இலக்கு என்ன? அதை நோக்கி நான் எப்படி பயணம் செய்ய வேண்டும்? இப்படி அடுக்கடுக்காக ஆராயும் போது தான் ஆற்றல்களை அறிந்து கொள்ளலாம். வெற்றியின் முதற்படி தன்னை அறிதல்.
இறை நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று "விவேகானந்தர்" விளம்பியுள்ளார். வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் அழியாத புகழ் படைத்து ஆழிசூழ் உலகை ஆண்டவர்கள் அனைவருமே தனி மனிதன் தான். ஆனால் அவர்கள் எல்லோரும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். என்னால் முடியுமா? என்று சந்தேகத்தோடு கேட்பவர்கள் பிரான்சின்பேரரசன் நெப்போலியன் போன்பட் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள். "முடியாது என்ற வார்த்தை பிராஞ்சி வார்த்தையே அல்ல. அது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே உள்ளது." என்று முழங்கிய நெப்போலியன் மத்தியதரைகடலில் காசிக்கா எனும் தீவில் பிறந்து பிராஞ்சுப் படையில் சாதாரண போர் வீரனாக வாழ்க்கையை தொடங்கியவன்தான். பிராஞ்சு ஏகாதிபத்தியத்தின் சக்கரவர்த்தியாக தன்னை உயர்த்திக் கொள்ள முடிந்தது என்றால் அது அவன் கொண்டிருந்த தன்னம்பிக்கை எனும் தன்மையினால் தான் முடியுமாக இருந்திருக்கிறது.
எமக்கு ஏதும் தீங்குகள் நடந்தால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று தனக்குள் கூறி மனதை திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத படி ஒரு தவறு நிகழ்ந்து விடுமாயின் நடக்கவேண்டியது நடந்தது என்று மட்டும் இருந்துவிட்டால் போதாது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று உன் மனதை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் உன் மனதை மாற்றி அமைத்து கொள்வாயாயின் அளவற்ற மன அமைதியை நீ பெறுவாய் என்பதில் சந்தேகமில்லை. இறைவனின் வழியோ பெரும் புதிராக இருக்கிறது. நல்லது போன்று ஒன்று தோற்றம் அளிக்கின்றது. அதனை பற்றி பற்றிப்பிடிக்க மனிதன் முயல்கிறான் பற்றிப் பிடித்துவிடவும் செய்கின்றான். ஆனால் அதுவோ பின்னால் அவனுக்கு நீங்காத துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது. தீயது போன்று ஒன்று தோற்றமளிக்கின்றது அது அவனைப் பற்றிப் பிடித்து விடுகின்றது. அதனால் அவன் பெரிதும் மனத்துயர் அடைகின்றான். ஆனால் அதுவோ பின்னால் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கின்றது. ஆதலால் தவிர்க்க முடியாதபடி ஒரு நிலை ஏற்பட்டுவிடின் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று இறைவன் செய்வது எல்லாம் நன்மைக்காகவே இருக்கும் என்ற மனோநிலையும் அதனை எவ்வாறு தனக்கு நன்மை பயக்கும் முறையில் மாற்றி அமைப்பது என்று சிந்திப்பது அறிவுடைமையாகும். மாற்றமாக அதனை நினைத்து வருந்தி தனது அடுத்த அடியை வைக்க மறுப்பது அறிவுடைமையாகாது. மகிழ்ச்சி என்பது முற்றிலும் இன்பமானது அல்ல. அது பெரும்பாலும் வெற்றி மயமாக இருக்கின்றது. நமக்கு கிடைத்த மோசமான நிலையை வெற்றி மயமாக ஆகிவிட்டோம் எனும் எண்ணத்தில் இருப்பது உதிப்பது தான் உண்மையான மகிழ்ச்சியாகும்.
ஒருவன் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவனாக இருக்கின்றானோ அந்த அளவுக்கு அவ்வளவும் மக்களின் அதிருப்தியையும் குறைபாடுகளையும் பெறுகின்றான். இதற்கு காரணமென்ன? பொறாமை தான். நீ ஓர் எளிய மனிதனாக இரு. அப்போது நீ ஒருவன் உலகத்தில் இருக்கின்றாய் என்பது கூட பலருக்குத் தெரியாது. ஆனால் உனது மதிப்பு மரியாதை வானில் உச்சியை நோக்கி விரியும் போது உடனே எத்தனை பேர் உன்னை வாய் அம்புகளால் உன் மனதை சிதைக்க முனைகிறார்கள் என்பதை அறிந்து கொள்வாய்.
பிறர் குறை கூறுதல் கேட்டு நாம் ஒரு போதும் மனம் வருந்தக் கூடாது. ஆனால் அதிக தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது தான். ஆனாலும் சின்னஞ்சிறு தவறுகள் எல்லாம் இமாலயத் தவறு என்று எண்ணிக் கொண்டு தங்களை தாங்களே வருத்திக் கொள்ளும் மனிதர்கள் பிறர் தங்களைப் பற்றிக் கூறும் குறைபாடுகளை கேட்டு உள்ளம் வருந்துகின்றனர். உலக மக்கள் யாரை தான் குறை கூறாது விட்டார்கள். இறைவனை கூட குறை கூறாது விட்டு விட்டார்களா என்றால் அதுவும் இல்லையே.
ஒருவன் உன்னை குறை கூறுவதாக உலகத்தார் அனைவரும் தெரிந்து பெரும் இழிவு ஏற்பட்டு விட்டது என்று எண்ணி உன் மனதை நோவினை செய்து கொள்ளாதே! ஒவ்வொருவரும் தன் வேலையே பெரிது எனக் கருதி காற்றாய் பறந்து தெரியும் பொழுது உன்னை பற்றி கூறப்பட்ட குறைபாடுகளை கேட்கவோ சிந்திக்க நேரம் ஏது? ஒருவேளை உலகத்தார் அனைவருக்கும் தெரிந்து விட்டால் தானென்ன? நீ நேர்மையுடன் செயலாற்றும் போது எந்த குற்றச்சாட்டுகளால் தான் உன்னை என்ன செய்ய இயலும்? குற்றம்சாட்டப்பட்ட பொருளின் வலுவின்மை தான் குற்றச்சாட்டின் வலுவாகும். அதனால்தான் அநியாயமான குற்றச்சாட்டுகளைக் கண்டு நீ கவனமாக அணுகவேண்டும். வாழ்க்கையில் ஒரு போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளாதே! வருந்தி மனம் முடியாதே! எது சரி என்று உனக்கு தெரிகிறதோ அதை நீ சிறப்பாக இயன்றவரை நேர்த்தியாக செய். பிறரை நினைந்து நீயே உன்னை வாட்டி பல விடயங்களை மாற்றிக் கொள்ளாதே!
ஆகவே தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி மாத்திரமே வாழ்க்கையின் பல அடைவுகளை அடையலாம். தன்னம்பிக்கை என்பது வாரிசு சொத்து அல்ல. மாறாக அது அரியவகை சொத்தாகும். இதனை தேடினால் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனிதனின் வரைவிலக்கணம் முயற்சி செய்து பெற்றுக் கொள்வதுதான். இதனை ஒரு மனிதன் திறன்பட செய்கின்ற போதுதான் அவனை அறியாமலே தன்னம்பிக்கை உருவாகி விடும். தன்னம்பிக்கை என்னும் ஆயுதத்தைக் கொண்டு போர் செய்து வாழ்க்கையில் பல சிகரங்களை தொடமுடியும். நம்மாலும் சாதனையாளர்களாக மாற முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக