வாரிசுரிமை சட்டங்கள் பகுதி – 02

வாரிசுரிமை சட்டங்கள் தொடர்பாக முதலில் வாரிசுரிமை குறித்த அடிப்படை விதிகளை அறிந்து கொண்டோம். இன்றைய பாடத்தில் வாரிசுகளுக்குறிய பாகங்கள் குறித்து அறிந்து கொள்வோம். ஒருவர் இறந்து விட்டால் (அவர் ஆணாக இருக்கலாம் அல்லது பெண்ணாக இருக்கலாம்) , அவருடைய மொத்த சொத்துக்களும் ஆறு பங்குகள் வைக்கப்படும் என்று திருமறை குர்ஆன் பங்குகளை குறிப்பிடுகின்றது.

  1. அரைவாசி. (1/2. 50%)
  2. கால்வாசி. (1/4. 25%)
  3. அரைக் கால் வாசி. (1/8. 12.5%)
  4. மூன்றில் இரண்டு. (2/3. 66.66%)
  5. மூன்றில் ஒன்று. (1/3. 33.33%)
  6. ஆறில் ஒன்று. (1/6. 16.5%)
அரைவாசி

கணவன் :- மனைவி இறந்து அவளுக்குப் பிள்ளைகள் இல்லாவிட்டால் அவளது மொத்த சொத்தில் கணவனுக்கு சரி பாதி உண்டு.

மகள் :- ஒரு ஆணோ, பெண்ணோ இறந்து, அவருக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை மாத்திரம் இருந்தால் இறந்தவருடைய மொத்த சொத்தில் சரி பாதி அந்த மகளுக்கு உண்டு.

கால்வாசி

மனைவி :- கணவன் இறக்கும் போது அவனுக்கு எந்த ஒரு மனைவி மூலமும் பிள்ளைகள் இல்லையென்றால் அவனது மொத்த சொத்தில் மனைவி அல்லது மனைவியருக்கு கால் பங்கு (அதாவது நான்கில் ஒன்று) கிடைக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், அவர்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட பங்கை சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும்.

கணவன் :- மனைவி இறக்கும் போது அவளுக்கு பிள்ளைகள் இருந்தால், அவளது மொத்த சொத்தில் கணவனுக்கு கால் பங்கு கிடைக்கும்.

அரை கால் வாசி

மனைவி :- கணவன் இறக்கும் போது அவனுக்கு பிள்ளைகள் இருந்தால் அவனது மொத்த சொத்தில் அவனது மனைவிக்கு அல்லது மனைவியருக்கு அரைக்கால் வாசிப் பங்கு உண்டு.

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், குறிப்பிட்ட அரை கால்வாசி பங்கை உயிரோடு இருக்கும் மனைவியருக்கு மத்தியில் சரி சமமாக பிரித்துக் கொடுக்கப்படும்.

மூன்றில் இரண்டு

மகள்கள் (பெண் பிள்ளைகள்) :- ஆணோ பெண்ணோ இறக்கும்போது அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்பிள்ளைகள் மாத்திரம் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் இறந்தவரின் மொத்த சொத்தில் மூன்றில் இரண்டு பங்கை சரிசமமாகப் பங்கிட்டு கொடுக்கப்படும்.

மூன்றில் ஒன்று

தாய் :- ஆணோ பெண்ணோ இறக்கும்போது, அவருக்கு பிள்ளைகள் இல்லையென்றால், இறந்தவரின் தாய்க்கு அவரது மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்கும்.

ஆறில் ஒன்று

தாய் :- ஆணோ பெண்ணோ இறக்கும்போது, இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்தால் அவரது மொத்த சொத்தில் அவரது தாயாருக்கு ஆறில் ஒரு பங்கு கிடைக்கும்.

தகப்பன் :- இறந்தவருக்கு (ஆணோ பெண்ணோ) பிள்ளைகள் இருந்தால், அவரது தந்தைக்கு அவரது மொத்த சொத்தில் ஆறில் ஒரு பங்கு கிடைக்கும்.

மேற்குறிப்பிட்ட பங்குகளை அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்ட பங்குகள் ஆகும்.

ஆணோ பெண்ணோ இறந்து, அவர்களுக்கு ஆண் பிள்ளைகள் மாத்திரம் இருந்தால், மேற்குறிப்பிட்ட வாரிசுகளுக்குப் போக மிகுதி இருக்கும் வாரிசுச் சொத்துக்கள் அனைத்தும் அந்த ஆண் பிள்ளைகளுக்குக் கிடைக்கும்.

அவ்வாறு கிடைக்கும் வாரிசுச் சொத்துக்களை தலைக்கு சரிசமமாக அவ் ஆண்பிள்ளைகள் பிரித்துக்கொள்ள வேண்டும்.

இந்த வாரிசுரிமைச் சட்டத்தில் இறப்பவருக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் கலந்திருந்தால், மேற்குறிப்பிட்ட வாரிசுகளுக்குப் போக, எஞ்சியதை ஆணுக்கு 2 பெண்ணுக்கு 1 என்ற ரீதியில் பிரித்துக்கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பங்குகளுக்கான அல்குர்ஆனிய ஆதாரங்கள்.

لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ ۚ نَصِيبًا مَّفْرُوضًا

குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. (திருக்குர்ஆன் 4:7)

يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ ۚ فَإِن كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۖ وَإِن كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ۚ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ ۚ فَإِن لَّمْ يَكُن لَّهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُثُ ۚ فَإِن كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ ۚ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ ۗ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا ۚ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:11)

وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ ۚ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ ۚ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ وَإِن كَانَ رَجُلٌ يُورَثُ كَلَالَةً أَوِ امْرَأَةٌ وَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ ۚ فَإِن كَانُوا أَكْثَرَ مِن ذَٰلِكَ فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ ۚ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصَىٰ بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ ۚ وَصِيَّةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَلِيمٌ

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனத்துக்கும், கடனுக்கும் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன், சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 4:12)

அல்குர்ஆன் கூறும் சொத்துப் பங்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தும் அவர்களுக்கு சுவனமே பரிசு.

تِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 4:13)

அல்குர்ஆன் கூறும் சொத்துப் பங்கீட்டை முறைகேடாக நடைமுறைப்படுத்துபவர்களுக்கு நிரந்தர நரகமே பரிசு.

وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 4:14)

அஜ்மீர் பாரூக்

கருத்துகள்