கதாநாயகர்களுடனான பயணத்தில்

நான் டொக்டர் ஆக வேண்டும் என்ஜினியர் ஆக வேண்டும் என்ற பல இலட்சியங்களோடு தங்களின் கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் கதாநாயகர்களின் அழகிய முகங்களை நேற்றும் இன்றும் முகநூலில் காணக்கூடியதாக இருந்தது. பார்க்கும் போது ஒரு வகையான சந்தோசமாக இருந்தது. இருந்தாலும் என்னையும் இப்படி ஒரு போட்டோ பிடிக்க இல்லையே என்ற சிறிய கவலை இருந்தது. ஓகே எனது கவலை ஒரு பக்கம் இருக்கட்டும்.

அந்த சிறிய மாணவர்களின் முகங்களில் காணப்பட்ட சந்தோசம் அவர்களின் இலட்சியப் பயணத்தின் இறுதி நிமிடம் வரை இருக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு அவசியமாக இருக்கின்றது.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் இலட்சியப் பயணத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டும். குறிப்பாக அந்த பிஞ்சு உள்ளங்களை உடைத்து விடக்கூடாது. அவர்களுடைய பயணத்திற்கு பணத்தால் உதவி செய்வது மட்டும் கடமையல்ல. மாறாக அவர்களை உள ரீதியில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பரீட்சைகளில் பெறுகின்ற புள்ளிகளை உளப்பூர்வமாக ஏற்று அவர்களை வாழ்த்த வேண்டும்.

அவர்களால் செய்ய முடியுமானவற்றை நன்கு அறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அடுத்த மாணவர்களுடன் அவர்களை ஒப்பீடு செய்து அவர்களின் மனதை உடைத்து விடக்கூடாது. அடுத்த நபர்களுக்கு முன்னால் தங்களின் குழந்தைகளின் திறமைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது.

Today is my son or daughter' s 1st day in school என்று போட்டோ எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்வதுடன் நின்று விடாமல் இவ்வாறான விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

முதல் நாள் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அவ்வளவு ஆர்வமாக வரவேற்கும் ஆசிரியர்கள் தங்களின் பணியின் மகத்துவத்தை உணர்ந்து அவர்களின் பயணத்தின் முடிவு வரை மாணவர்களுடன் பயணிக்க வேண்டும். மாணவர்களை சிறந்த முறையில் அடையாளம் காணவேண்டும். அதற்கு அளவு கோளாக குறித்த மாணவர்களின் குடும்ப செல்வாக்கு (பணம், பட்டம், பதவி) அழகு, உறவுமுறை, புள்ளிகள் (Marks) என்பவற்றை எடுத்துக் கொள்ளாமல் அவர்களின் திறமைகளையும், ஆர்வத்தையும் மாத்திரமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் அனைவரையும் பாகுபாடு இல்லாமல் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். அவர்கள் உங்களுடன் (ஆசிரியர்கள்) கழிக்கின்ற பொழுதுகளில் ஒரு தாயாக தகப்பனாக நண்பர்களாக சகோதரர்களாக இருக்க வேண்டும். நேரத்திற்கு வருகிறேன் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்கின்றேன் என்று இல்லாம் அவர்களின் ஆளுமை விருத்தியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இன்று எங்களுடைய பாடசாலையின் புதிய மாணவர் அனுமதி என்று ஒரு குழுப் புகைப்படம் எடுத்து பத்திரிகைக்கு அனுப்புவதுடன் கடமை முடியவில்லை மாறாக மறுமையில் தங்களுக்கு கேட்க இருக்கும் கேள்விகளை நினைவிற் கொண்டு தங்களுக்காக பிரார்த்தனை செய்யக் கூடியவர்களாக அக் கதாநாயகர்களை உருவாக்க வேண்டும்.

புதிய மாணவர் அனுமதி விழாவில் மாணவர்களுக்கு மாலை அனுவிப்பார்களோ இல்லையோ இவர்களுக்கு கட்டாயம் அனுவிப்பார்கள். இவர்கள் யார் தெரியுமா? அரசியல் வாதிகள், பள்ளித்தலைவர்கள், சமூக நலன் விரும்பிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். இவர்கள் மாணவர்களின் முதல் நாள் விழாவிற்கு சமூகமளித்து விட்டுச் சென்றால் பாடசாலையின் அடுத்த பரிசளிப்பு விழா இல்லா விட்டால் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்குதான் சமூகமளிப்பார்கள்.

(என்ன நண்பா ஒரு மாதிரியாக முறைத்து பார்க்குறீங்க எல்லோரையும் சொல்லவில்லை. கூல் நண்பா விதிவிலக்கானவர்களும் உண்டு)

எல்லாம் முடிவடைந்த பின்னர் போட்டோவிட்கு போஸ் கொடுப்பதற்கு மாத்திரம் வருகை தராமல் அல்லது ஒரு மாணவனின் அல்லது மாணவியின் அடைவைக் கண்டதன் பின்னர் இவர்களின் உயர் கல்விக்கு நான் உதவி செய்கிறேன் அல்லது திருமண வரண்டுகளுடன் சமூகமளிக்காமல் கதாநாயகர்களின் இலக்கு நோக்கிய பயணத்தின் பங்காளர்களாக இருக்க வேண்டும்.

எத்தனையோ வறிய மாணவர்கள் இருக்கின்றார்கள் சிலர் தகப்பனை இழந்துள்ளார்கள். சிலருடைய தகப்பன்மார் நோய்வாய்ப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய கஷ்டத்தை வெளியே சொல்வதில்லை. அவர்களை அடையாளம் காணவேண்டும். அவர்களுக்கு முடியுமான உதவிகளை செய்ய வேண்டும். இப்படியான உதவிகளை செய்பவர்களைத் தானே நாங்கள் சமூக நலன் விரும்ளிகள் என்று சொல்கிறோம்.

என்னங்க நான் சொல்றது சரியா? தவறா? நீங்களே சொல்லுங்க. இப்படியான உதவிகளை செய்யுங்கள் அக்கதாநாயகர்களின் பிரார்த்தனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஓர் சமூகத்தின் வளர்ச்சியில் கல்வி பிரதான விடயமாக இருப்பதனால் அதனை கற்கும் மாணவர்களின் விடயத்தில் கவனம் செலுத்துவது எமது கடமையாக இருக்கின்றது. பெயருக்கும் புகழுக்குமாக அந்த செல்வங்களின் மனதை புண்படுத்தாமல் பாடசாலை முதல் நாளில் எவ்வாறு முகமலர்ந்து இருக்கின்றார்களோ அவ்வாறே அவர்களின் பயணத்தை இறுதிவரை முகமலரச் செய்வோம்.

கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு கற்பவனுக்கு உதவுவனாக இரு நான்காமவனாக இருந்து விடாதே

Fazlan Uwaiz

கருத்துகள்