துஆ என்பது அல்லாஹ் எமக்களித்த மாபெரும் ஆயுதமாகும். அந்தவகையில் இன்று எமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளின் போதும் துன்பங்களின் போதும் அல்லாஹ் எமக்களித்த இவ் துஆ எனும் நிஃமத்தின் ஊடாக அல்லாஹ்வை நாம் நெருங்க வேண்டும். "எனது அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் நான் நிச்சயமாக சமீபமாயுள்ளேன் எனக் கூறுவீராக" என்ற இறைவசனத்திற்கமைய எம் அற்ப தேவை முதல் அளப்பரிய தேவை வரை அனைத்து விடயங்களையும் அல்லாஹ் எமக்களித்த இவ் பிராத்தனை எனும் வாயிலின் ஊடாக அடைந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் தன்னிடம் கேட்பவரது கைகளை அல்லாஹ் வெறுங் கைகளாக அனுப்ப வெட்கமடைகின்றான். எனவே எம்மைப் படைத்து பரிபாலித்து போசித்து எமக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளையெல்லாம் ஏற்படுத்தித் தந்த அகிலங்களின் அரசன் எல்லாம் வல்ல அல்லாஹ் எம் தேவைகளை நிறைவேற்றித் தரவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் தயாராக இருக்க நாம்தான் கேட்பதற்குத் தயாரில்லை.
"நீங்கள் என்னை அழைத்துப் பிராத்தனை புரியுங்கள். நான் நிச்சயமாக உங்களு(டைய பிராத்தனை)க்கு பதிலளிள்பேன்......" என அல்லாஹ் கூற இன்று எம்மில் பெரும்பாலானோர் தம் பிரச்சினைகளுக்கான தீர்வை சமூக வலைத்தலங்களில் பதிவிடுவதன் ஊடாகவும் தமக்கு மிக நெருக்கமான சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதன் ஊடாகவுமே பெற்றுக் கொள்ள முனைகின்றனர்.
எனினும் இவற்றை விடுத்து உறுதியான ஈமானுடன் அல்லாஹ்விடம் எம் தேவைகளையும் பிரச்சினைகளையும் முறையிட்டால் அதற்கான தீர்வுகள் நாம் நினையாத புறத்திலிருந்து எமக்கு வரும் என்பதில் எள்ளளவும் ஐயமுமில்லை. காரணம் "அல்லாஹ் கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை.அல்லாஹ் தடுப்பதைக் கொடுப்பவர் எவருமில்லை"
அதிலும் குறிப்பாக எம் துஆக்கள் அங்கீகரிக்கப்பட நாம் உண்ணும் உணவுகளும் ஹலாலானதாக அமையப் பெற வேண்டியது மிக முக்கியமானதோர் அம்சமாகும். எனவே இவற்றைப் பேணி அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிராத்தனைகள் செய்து அவனது நெருக்கத்தைப் பெற்று ஈருலகிலும் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக!
கருத்துகள்
கருத்துரையிடுக