கவிதை எழுதிய என் தோழி - மீள்

அழகழகாய் கவிதைகள் எழுதுவாள் என் தோழி வர்ணனைகளும், வார்த்தைகளும் அதி அற்புதமாய் தண்டவாமாடும் அவள் கவிதைகளில்..

கவிதை பற்றிய எங்கள் எல்லா விவாதங்களிலும் அவளே வெல்வது வாடிக்கையாகிப்போன ஒன்று..

கவிதைகளால் புரட்சி செய்வேன் கவிதைகளால் உலகை ஆள்வேன் கவிதைதான் என் உயிர் மூச்சு கவிதையே என் உடல்,பொருள்,ஆவி என்றெல்லாம் சூளுரைப்பாள்..

அவளை பார்க்கும் போதெல்லாம் வெகுவாக பெருமைப்படுவேன்.. நாளை இவள் ஒரு பார் போற்றும் கவிஞராய் மிளிர்வாள் என்பதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு

திடீரென அவளுக்கு திருமணமான பின்பு அவளது தொடர்பை போலவே அவள் கவிதைகளும் ஒட்டுமொத்தமாய் நின்று போனது..

விசாரித்து பார்த்தேன்.. பொய்யாகிப்போன அவள் வாழ்க்கையில் நிம்மதி, சந்தோசம், அன்பு, கவிதை எல்லாமே இல்லாமலே போயிற்றாம்..

இப்போதெல்லாம் அவள் பழைய கவிதைகளுடன் பேசிக்கொள்கிறேன்.. பதில் சொல்ல தெரியாத கவிதைகள் மீண்டும் மீண்டும் என்னுடன் சூளுரைக்கின்றன “கவிதைகளால் வேள்விகள் செய்வேன் என்று” சில கவிதைகளைப் போலவே எத்தனை பொய்மை நிறைந்தது வாழ்க்கையும் ...?

நிந்தவூர் ஷிப்லி 

கருத்துகள்