குத்பாவை சுருக்கி தொழுகையை நீட்டுதல்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "(ஜும்ஆ நாளன்று) தொழுகையை நீட்டி, குத்பாவை சுருக்குவதானது குறித்த இமாமின் பிக்ஹை குறித்துக்காட்டும் அடையாளமாகும், ஆதலால் தொழுகையை நீட்டித் தொழுங்கள், குத்பாவை சுருக்கிக்கொள்ளுங்கள்." (நூல்: முஸ்லிம்)

மற்றுமொரு அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பாவை சுருக்கி தொழுகையை நீட்டும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள் என்று அறிய முடிகிறது.

விடயம் இவ்வாறிருக்க, அரபு நாடுகளைப் பொறுத்தமட்டில் இந்த ஹதீஸ் அதிகமாக நடைமுறையிலுள்ளது, எனினும் இலங்கையில் இந்த ஹதீஸ் மறுபக்கமாக அமுலாக்கத்தில் சிக்கித் தவிக்கிறது.

எனது சிறிய வயது முதல் மத்ரஸாவில் கல்வி கற்ற காலத்திலும் இன்றும் இந்த ஹதீஸை சரியாக நடைமுறைப்படுத்துபவர் அஷ்ஷைக் ரியாஸ் முப்தி அவர்கள்.

ஒரு முக்கிய விடயத்தை குறுகிய நேரத்தில் மிகத் தெளிவாக முன் வைப்பதில் மிகவும் வல்வவர் இவர் எனில் மிகையாகாது. அழகிய தமிழ் மொழி நடை, ஆக்கபூர்வமான தலைப்பு, முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டும் முறை, ஒரு விடயத்தை தெளிவுபடுத்தும் திறமை, இனிமையான குரல், அடக்கமான பேச்சு போன்றவற்றில் தனித்துவத்துடன் விளங்கும் இவரது குத்பா சலிப்பில்லாமல் அனேகரை விருப்பத்துடன் கேட்கத் தூண்டுகிறது.

அதிகமானவற்றை குறுகிய நேரத்தில் கொடுப்பதை தவிர்த்து, ஆழமான முக்கிய விடயத்தை மக்களுக்கு சாதாரணமாக விளங்கும் தோரணையில் விளங்கப்படுத்தி உரிய கருப்பொருளை குத்பாவில் சமூகமளித்துள்ளவர்களது சிந்தனைக்கு கொண்டு செல்பவரே சிறந்த, வெற்றிகரமாக உபதேசியாவார்.

எமது இஸ்லாமிய அழைப்பாளர்கள் இயன்றளவு இந்த ஹதீஸை நடைமுறைப்படுத்த எத்தனிப்பார்கள் என ஆதரவு வைக்கிறோம்.

அஸ்(z)ஹான் ஹனீபா

கருத்துகள்