யா அல்லாஹ்! என் உம்மாவ இந்த நிலமையில விட்டுட்டு புருஷன் கூட போயி வாழ நான் ஒன்னும் கல்லு மனசு கொண்டவளில்லயே, இப்பொழுதைக்கு என் உம்மா தான் எனக்கு முக்கியம் அல்லாஹ். நான் ஆசப்பட்ட வாழ்க்க எனக்கு வாய்க்கல்ல, என் உம்மா ஆசப்பட்ட புருஷனும் இனி கிடைக்குமோ தெரியல்ல. எதுவா இருந்தாலும் என் சந்தோஷம் முடிஞ்சி போயிட்டுன்னு மட்டும் எனக்கு புரியுது. இதுக்கு மேல என்ன ஆவினாலும் நான் என் உம்மா கூடவே இருந்து கொள்றன். என்ன பொருந்திக்கோ அல்லாஹ்!
கண்ணீர் வழிந்தோட இறைவனை பொறுப்புச்சாட்டி, கணவன் தரப்பை ஏறிட்டும் பார்க்காமல் தாயை நாடி காலெடுத்து வைத்தாள் சர்மி.
கெட் லோஸ்ட்... இனி நான் உனக்கு புருஷனே இல்ல
வெளியில் நின்று சர்மியின் நடப்புக்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிலால் மனைவியின் மொபைலுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிவிட்டு வந்த வழியே புறப்பட்டான். இங்கு உள்ளம் நிறைய வலிகளை சுமந்து கொண்டவளாய் வீறிட்டுப் பாய்ந்தோடிய கண்ணீர் துளிகளை தன் கைகளால் துடைத்துக் கொண்டு தாயின் அருகாமை சென்றாள் சர்மி.
"உம்மா" ஈன்றவளின் தலையை வருடி கண்ணீர் விட, மெதுவாய் கண்திறந்து பார்த்த தாய் ராபியா பக்கத்தே மகள் நின்றிருக்க கண்டு குலுங்கி அழுதாள்.
"புள்ள சர்மி"
"உம்மா.. ஏன்ட உம்மா... அழவேணாம் உம்மா. இந்த நிலையில நீங்க அழக்கூடாது. உங்க புள்ளய மன்னிச்சிக் கோங்கமா..."
"நீ எதுவும் செய்யல்ல சர்மி. உன்மேல எந்தத் தப்பும் இல்ல. நான் தான் அளவுக்கு அதிகமா ஆசப்பட்டு உன் வாழ்க்கைய நாசம் பண்ணிட்டன்."
"ஐயோ உம்மா அப்பிடி எதுவும் இல்ல. நீங்க இப்போ ஒன்னும் பேச வேணாம்.. நான் நல்லா தான் இருக்கன்மா..."
"ஐயோ புள்ள..!"
"உம்மா.. பிளீஸ் நீங்க அழ வேணாம். நீங்க அழக்கூடாதுமா.. அழ வேணாம்.. அழாதிங்கமா"
கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடிய தாயின் கண்ணீர் துளிகளுக்கு அணைக்கட்டு போட முயற்சித்துக் கொண்டிருந்தாள் சர்மி. இந்தக் குடும்பவாழ்கையில் இப்படியோர் விதி விளையாட இரண்டு நாட்கள் கடந்து வீட்டுக்கு கூட்டி வரப்பட்டாள் தாய் ராபியா.. உம்மாவை ஓய்வில் இருக்கச் செய்து வீட்டுக்காரியங்களை கவனித்துக் கொண்டிருந்த சர்மியை வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்த ராபியா,
"புள்ள"
"ஆஹ்..! என்னம்மா?"
"இல்ல நானும் வந்ததுல இருந்து பாக்குறன். பிலால் எங்கம்மா? அவர் வர இல்லயா? தப்பு இந்த உம்மா தானே? உன்ன விட்டுக் கொடுக்காம கூட்டிபோய் முடிச்ச உன் புருஷன்கு வர சொல்லுமா. நான் அவர் கூட எந்த கோவமும் இல்ல புள்ள"
தாயின் பேச்சுக்கு இலேசாக நகைத்தவள், பதிலேதும் சொல்லாமல் தன் காரியங்களில் கண்ணாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.
"சர்மி.."
"என்னம்மா?"
"ஏன்டி ஒன்னும் பேசாம நிக்குற?"
"அதுவந்து ஒன்னும் இல்லம்மா, நான் பிலால்கிட்ட சொல்லுறன்." தாயின் இந்நிலையில் பிலால் குறித்தான உண்மைகளை சொல்ல விரும்பாவிட்டாலும்,
"தன் தாய் சொன்னபடி பிலாலிடம் மன்னிப்புக் கேட்டு பேசினால் ஒருவேளை தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டானா?" ஏதோவோர் நப்பாசை தூண்டியது சர்மியை.
"எல்லாம் நல்லபடி நடக்கும்.. என் பிலால் நிச்சயமா என்ன மன்னிச்சி ஏத்துக்கொள்வாரு.." என்ற மீள்நினைப்பிலே வாடியிருந்த இதழ்கள் மலர, தன் மொபைலை எடுத்து கணவனின் இலக்கங்களை அழுத்தினாள் சர்மி.
கதை தொடரும்… Aathifa Ashraf
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக