ரமழானை நோக்கி…

விவசாயிகளுக்கு அறுவடைக் காலம் மகிழ்ச்சியைத்தரும் ஒரு சீசன். இது போன்றே அனைத்து வியாபாரத்திற்கும் லாபங்களை வாரி வழங்கும் ஒரு சீசன் உண்டு. அந்தக் காலங்களில் இரவு, பகல் பாராமல் எப்படி நாம் உழைத்து உலக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்கிறோமோ அதைப் போலவே மறுமையில் நாம் நிம்மதியாக இருப்பதற்காக தான் படைத்த பன்னிரண்டு மாதங்களில் இரவு, பகல் 24 மணி நேரமும் நல்ல அமல்களில் ஈடுபடும் ஒரு சீசனாக ரமழானை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான்.

எனவே நாம் வெகு விரைவில் இப் புனிதமிக்க ரமழான் மாதத்தை அடைய இருக்கிறோம். அந்த மாதத்தை அடைவதற்கு முன் அதன் சிறப்பையும் கண்ணியத்தையும், நம் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு நடப்பது அவசியம்.

அல்லாஹ் ரமழான் மாதத்தை சிறப்பு மிக்க மாதமாக ஆக்கியிருக்கிறான் காரணம் நமக்கு நேர்வழி காட்டும் சங்கைமிக்க திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமழான் மாதம் திகழ்கிறது.

அல்லாஹுத்தஆலா தெளிவுபடுத்துகிறான்: இறை நம்பிக்கையாளர்களே.. உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களை பின்பற்றிய)வர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதை போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும் (அல்குர்ஆன் 2:183)

ஹிஜ்ரி இரண்டாம் வருடம் ஷபான் மாதம் மேற்கூறப்பட்ட இறை வசனத்தின் மூலமாக அல்லாஹ் முஸ்லிம்களின் மீது நோன்பை கடமையாக்கினான்.

எனவே இப்புனித மிகு மாதத்தில் நோன்பு நோற்று இறை வழிபாட்டில் ஈடுபட்டு அருள் மறை குர்ஆனை ஓதி, இரவுக்காலத்தில் நின்று வணங்கி, இறைவனிடம் கையேந்தி இறையஞ்சிடும் பொழுது அடியாரின் பாவங்கள் கரிக்கப்படுகின்றன.

இப்புனித ரமழான் மாதத்தை அடைவதன் மூலம் அல்லாஹ் பல சிறப்பம்சங்களை வைத்துள்ளான்.

இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:

  1. இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது.
  2. ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
  3. ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில் தான் உள்ளது. எனவே குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது.
  4. நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக மணமுடையது.
  5. இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.

மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்.

இதற்கமைய இஸ்லாமிய கடமையில் மூன்றாவது கட்டளையான நோன்பின் மூலம் எண்ணற்ற நன்மைகளை மனித சமுதாயம் பெறுவதுடன் சொர்க்கத்தின் உயர்ந்த பதவிகளையும், எல்லாவற்றையும் விட அல்லாஹ்வின் சந்திப்பையும், பொருத்தத்தையும் முஃமினான அடியான் பெற்றுக் கொள்கிறான். எனவே நாம் அனைவரும் நோன்பை பேணுதலாக வைத்து, ரமழானில் நல் அமல் செய்து, அந்த பாக்கியங்களை பெற முயற்சிப்போம். இன்ஷா அல்லாஹ்.

KLM. Akram Sammanthurai SEUSL.
yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

கருத்துகள்