சட உலகிற்கும் ஆன்மீக உலகிற்குமிடையிலான போராட்டத்தை முடுக்கி விட்டுள்ள ரமழான்.
மற்றுமொரு ரமழான் எம்மை வந்தடைந்துள்ளது. இது அருள் நிறைந்த நாட்களின் தொகுதி. ரமழானின் ஒவ்வொரு பொழுதும் பயனுள்ளவை. வளம் நிறைந்தவை. முதலில் நாம் அதனை முழு மனதுடன் ஆன்மீக தயார் நிலையுடன் மகிழ்வாக வரவேட்கின்றோம். அதன் பாக்கியங்களை பெற ஆசை வைக்கின்றோம்.
ரமழானின் பகல் காலங்களில் நோன்பிருந்து இராக்காலங்களில் இறைவனை நின்று வணங்குகின்றோம். தியாகமும் பொறுமையும் கடந்து இறைவனை மகிழ்வித்து நாமும் இன்பம் காண்கின்றோம். ரமழான் ஒரே நேரத்தில் வெளிப்படையாக எமது உடலையும் ஆன்மீக உணர்வையும் பக்குவப்படுத்தி விடுகிறது.
மனிதன் மறந்து போன ஆன்மிகம் சார் அம்சங்களை ஓர் இறைவிசுவாசி தொடராக ஒரு மாதம் அதன் மீது ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தி போசித்து மெருகூட்டும் நாட்களே இவை.
மனித கட்டமைப்பில் ஆன்மிகம் சார்ந்த பலமான ஒரு பகுதி உள்ளது. அதனை நாம் அதற்குரிய முறையில் போசித்து பயிற்றுவித்து வரும்போது அது பலமடையும். ஆரோக்கியமாக இருக்கும்.
பொதுவாக ரமழான் ஆன்மீக கட்டமைப்புக்கு தேவையான அதனை இன்னும் பலப்படுத்துவதற்கான போசணையை அதிகரிக்க ஒரு சந்தர்ப்பமாக இருந்தாலும் பெரும்பாலும் உடல் சார்ந்த பசிக்கான போசணைகள் தான் அதிகமாக நுகரப்படுகின்றன. ஆன்மீக பசிக்கான போசனை மிக்க அம்சங்கள் நுகரப்படுவது மிகவும் குறைவு.
இந்த ஆன்மா ஒரு விசித்திரமான உருவாக்கம். புதிர் நிறைந்த கட்டமைப்பு. அது நலவையும் கெடுதியையும் ஒரே நேரத்தில் விரும்பி விடுகிறது. மனித பகுத்தறிவும் சிந்தனையும் தான் நலவையும் அது சார்ந்த உலக மறுமை பயன்களையும் கெடுதியிலிருந்து அதன் தனிமனித சமூக உலக மறுமை தீங்குகளை விட்டும் வேறு பிரித்து அவனுக்கு வழங்க வேண்டும்.அந்த தெரிவும் சுதந்திரமும் நாட்டமும் இறைவன் மூலம் அவனுக்கு தாராளமாக வழங்கப்பட்டுள்ளது.
“ஆன்மாவின் மீது சத்தியமாக அவன் அதனை செம்மைப்படுத்தி சீராக்கினான். அதன் நலவையும் கெடுதியையும் அதற்கு உள்ளுனர்வூடாக கொடுத்தான்.” என்று இறைவன் இந்த உண்மையை தெளிவு படுத்துகிறான்.
இந்த அடிப்படை நியமங்களுக்கு அமைவாகவே அவனது வெற்றியும் தோல்வியும் ஏற்பட்டுவிடுகிறது. ”ஆன்மாவை பரிசுத்தமாக்கியவன் வெற்றி பெற்றிவிட்டான்.” என்பது இதுதான்.
இந்த மனித ஆன்மாவுக்கு பராக்கிரம பலம் உள்ளது. அதனிடம் எல்லா போராட்ட உணர்வும் உள்ளது. அதே போன்று மனித வாழ்வின் செழுமைக்கும் செழிப்புக்கும் வளத்துக்கும் இறைவன் மனிதனை சூழவும் சடத்துவ உலகையும் படைத்து வசப்படுத்திக்கொடுத்துள்ளான். மனிதனை மதிமயக்கி தன்பால் ஈர்த்துக்கொள்ளும் அசாதாரண ஆற்றலை அலங்கார விசையை அல்லாஹ் சட உலகிற்கும் வழங்கியுள்ளான். அதனிடமும் வலிமையான பலமும் கவர்ச்சியான ஈர்ப்பு விசையும் அதிகமாகவே உள்ளன.
சந்திரனின் விசைக்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் இடையில் நிகழும் ஈர்ப்பு வலுசமநிலை போராட்டத்தில் வற்றுப்பெருக்கு நிகழ்வதால் அதனை எதிர்கொள்ள கடல் பெருமழை போல பேரிரைச்சலுடன் குமுறி கொந்தளித்து மேலுவது போல இந்த ஆன்மீக உலகின் ஈர்ப்புக்கும் சட உலகின் ஈர்ப்புக்கும் இடையில் உக்கிரமான போர் எப்போதும் நிகழும். இந்த போராட்டம் மறுமை வரை நிகழும்.
சட உலகின் தரப்பு சார்ந்து அதன் யுத்த தளபதியாக மனித குல பகிரங்க விரோதி சைத்தான் உள்ளான். ஆன்மீக உலக தரப்பு போராட்டத்தின் தளபதி தனி மனிதனும் அவனது ஆன்மாவும் தான்.
சட உலகிற்கு என்று பிரத்தியேக இயல்புகள் வலிமைகள் உள்ளன. ஆன்மீக உலகிலும் அதிவிசேட இயல்புகளை ஆற்றலை மனித ஆன்மாவினுள் இறைவன் புதைத்து வைத்துள்ளான். சட உலகின் ஈர்ப்பு வெளிப்படையானது. ஆன்மீக உலகின் இயல்பு மறைமுகமானது. மர்மமானது.
மிக எளிமையாக கூறினால் இரண்டு தட்டுள்ள தராசு போன்றது. பொருட்கள் வைத்துள்ள தட்டு பருமனில் தோற்றத்தில் அளவில் விகாரமாக இருந்தாலும் மறுதட்டில் இடப்படும் படிகள் தோற்றத்தில் சிறியன. வேறுபட்ட நிறைகளை கொண்டவை. ஆனாலும் ஒரு தட்டு நிறை கூடும் போது அது தாழ்ந்து மறு தட்டு உயர்ந்து விடும். சமநிலை இழக்கும். ஆன்மீகமும் சட உலகும் சமநிலையில் செல்வது கூட ஆபத்தில்லை என்று வைத்தாலும் சட உலகின் நிறை மிகைப்பது ஆன்மாவின் வீழ்சிக்க் காரணமாக அமையும்.
ஆன்மீக உலகின் எடை கூடி சட உலகின் எடை குறைவதால் ஆன்மீக உலகினது செறிவும் தாக்கமும் வலிமையாகும். அது சட உலகை மிகைக்கும்.
அன்றாட வாழ்வில் இந்த போராட்டத்தில் பயிற்சியும் அதற்கு உகந்த சூழலும் இல்லாமையால் சட உலகு மனிதனை மதிமயக்கி பெரும்பாலும் வென்று விடுகிறது. மனிதன் சட உலகின் அடிமையாகி தோல்வி அடைகின்றான்.
ஆனால் ரமழானின் நாட்களை பொறுத்தளவில் சட உலகின் கவர்ச்சியை, ஈர்ப்பை, இழுவிசையை இறைவன் கட்டுப்படுத்தி அதற்கு கடிவாளமிட்டு ஆன்மீக சூழலை, ஆன்மீக உலகின் பாலான ஈர்ப்பை, இழுவிசையை அதிகரித்து அதற்கான பிரத்தியேக ஏற்பாட்டை தனது புறத்திலிருந்து செய்கின்றான்.
சுவனத்தை திறந்து அதன் பால் அழைப்பதும் அதற்கான நிகரற்ற சன்மான்கள் குறித்து விளம்பரம் செய்வதும் நரகின் வாயில்களை இழுத்து மூடி அதன் பால் அழைப்பு விடுக்கும் ஷைத்தானிய குரலை நசுக்கி அவனையும் விலங்கிட்டு விடுகின்றான். நரகின் பாலான ஈடுபாட்டை தணிக்குமாறு வானவர் மூலம் இறைவன் எச்சிரிக்கை ஒலி விடுக்கின்றான்.
மனிதன் தனது பகுத்தறிவை உபயோகித்து சிந்தனையை ஒழுங்கமைத்து இந்த அரிய வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சட உலகை மிகைக்கும் கடுமையான பயிற்சியில் சோர்வின்றி தளர்வின்றி ஈடுபட்டால் போராட்டத்தில் வற்றி வாகை சூடலாம்.
அவனுக்கு ஹிதாயத்தும் அதனை அடைவதற்கான தக்வாவும் இலகுவாக கிடைத்துவிடும். இதில் அவன் அசட்டை செய்தால் அருமையான வாய்ப்பை, சாதகமான நிலைமையை அசட்டை செய்து அலட்சியமாக இருந்தால் அவன் எல்லா வாய்ப்புகளையும் இழந்து ஈடேற்றம் பெறாமல் தவிப்பான். மட்டுமல்ல இறைவனால் தண்டிக்கவும் படுவான்.
”ரமழானை அடைந்தும் மன்னிப்பு பெறாதவன் நாசமாக்கட்டும்” எனும் ஜிப்ரீலின் பிரார்த்தனையின் தாத்பரியம் இதுதான்.
அருள்மனம் வீசும் இந்த ஆன்மீக பொழுதுகளில் ஈடுபட்டு அதன்பால் ஆசையும் ஆர்வமும் ஈர்ப்பும் கொண்டு அமல்களில் ஈடுபடும் ஆன்மா நிச்சயம் பலமடையும். இனி வரும் நாட்களில் சட உலகை எதிர்கொள்ளும் பலத்தை பெற்றுக்கொள்ளும்.
இதற்கு மாற்றமாக இந்நாட்களிலும் வீடிக்கை விளையாட்டு வீணான பொழுது போக்கு என்று தன்னை ஈடுபடுத்தி சட உலகில் மீண்டும் மீண்டும் மயங்கி அதன்பால் மையல்கொண்டால் சட உலகு அவனை மிகைத்து விடும். அவனால் ஆன்மீக உலகில் சஞ்சரிக்க முடியாதபடி ஆக்கிவிடும்.
இந்த இடத்தில் பசியுடனும் தாகத்துடனும் இருப்பதோ இரவில் இயந்திரம் போல வணங்குவதோ ஆன்மீக போராட்டமாகாது. ”எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பில் பசித்திருத்தலும் தாகிதிருத்தலும் தவிர வேறு எதுவும் இல்லை” “எத்தனையோ வணக்கவாளிகள் அவர்கள் வளைந்து நெளிந்தது தவிர வேறு எதுவும் இல்லை” போன்ற நபிவாக்குகளும் “யார் புறம் பேசுவதை விட்டும் அதன் பாலான செயல்களில் ஈடுபதை விட்டும் தன்னை விடுவித்துக்கொள்ளவில்லையோ அவரது நோன்பில் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை” எனும் நபிமொழியும் மேற்படி ஆன்மீக போராட்டம் வலுவுடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
சைத்தானியத்தை எதிர்த்து சட உலகை எதிர்த்து போராடி ரமழானின் ஈடேற்றங்க்களை அடைவோம். விமோசனம் பெறுவோம்.
Ash. M.M.A.BISTHAMY
கருத்துகள்
கருத்துரையிடுக