சில நேரம் குருடனாகவும் சில பொழுது ஊமையாகவும் இடைக்கிடை கொஞ்சம் செவிடனாகவும் பாத்திரம் ஏற்க நீ தயாரெனில் வாழ்தல் உனக்கு சாத்தியமே...
இராப்பொழுதுகள் கனத்திட கன்னம் பழுத்திட அழுது வெதும்பிக் கழிந்தாலும் விடியற்காலை உந்தன் செவ்வதனமதில் ஒற்றை ரோஜாவாய் இதழோரப் புன்னகை பூக்குமெனில் வாழ்தல் உனக்கு சாத்தியமே...
நாழிகைகளின் நையாண்டிகளுக்கும் நபர்களின் நசுக்குதல்களுக்கும் நடுவில் நீ தலை கவிழாது நடந்திடுதல் இயலுமையெனில் வாழ்தல் உனக்கு சாத்தியமே...
சங்கடங்கள் சல்லடை செய்யும் போது சாயாத மனமும் றணங்கள் றணகளப்படுத்தும் போது நனையாத இமைகளும் குள்ளர் கூட்டம் குட்டும் போது குனியாத தலையும் உனதெனில் வாழ்தல் உனக்கு சாத்தியமே...
கருத்துகள்
கருத்துரையிடுக