எனக்குள்ளே பல தேடலை உருவாக்கியவன். செல்லப்பிள்ளையாய் வீடு முழுதும் சுற்றியவன். Twitty என பெயரில் அன்பாய் அனைவரையும் வென்றவன். எனக்கு முதல் குழந்தையாய் உறவாடியவன். இப்படியே இவன் புகழ் பாட பிறந்தவன்.
வீட்டில் செல்லப்பிராணியாய் நான் இதுவரை எதுவும் வளர்த்ததில்லை, முதல் தடவையாக இவன் தான் என் இதயத்தை தொட்டவன், காரணம் என் தனிமையை போக்கினான், எனக்குள் இருக்கும் ஆத்மாவை எழுப்பினான், என்னை அவனுக்காக இயங்க வைத்தான், அவன் விருப்பு, வெறுப்பை அறிந்து செயற்பட வைத்தான், எனது கண்காணிப்பில் அவனை இருக்க வைத்தான், அவன் பின்னாலே சுற்ற வைத்தான், இரவும்,பகலும் அவன் பெயரை உச்சரிக்க வைத்தான், அவன் பசிக்கும் நேரம் அறிந்து பசி போக்க வைத்தான், என்னையே அவனுக்காக மாற்ற வைத்தான்.
ஆனால் என்னை விட்டு பிரிந்து செல்வதற்கு விதியும் முடிவு செய்தது, அவன் மரணம் பக்கத்து வீட்டு பூனையால் என்பதும் ஜீரணிக்க முடியாதநிலை, இருப்பினும் அவன் நினைவுகள் அவன் தாவி திரிந்த மரம், மதில் மீட்டிகொண்டே இருக்கிறது, நான் சந்தித்த முதல் இழப்பு என் தாயின் அம்மாவின்(உம்மம்மா) மரணத்திற்கு பின் இவன் இழப்பு மீண்டும் அனுபவித்தேன்.
அப்போது தான் நான் வாழ்வின் பல அர்த்தங்களையும் யதார்த்தங்களையும் உணர்ந்து கொண்டேன். எந்த உயிரின் மரணத்தையும் யாரும் அறிந்திராத இரகசிய சாவி இறைவனிடம் மாத்திரம் உண்டு, அவன் நாடினால் அணுவும் அசையாது.
Twitty தன் தாயை தேடி செல்ல முடியாத சிறு குழந்தையாக இருந்த அதை காப்பாற்றி அவன் சுதந்திரமாக விட்டு விட முன் அவன் உயிரும் பறிபோய்விட்டது, தாம் எவ்வளவு நேசித்த யாராக இருந்தாலும் இறைவன் விதித்த நேரம் வரைதான் எல்லாம், யாரும் நினைத்து பார்க்காத பிரிவுகளையும் முகம் கொடுக்க நாம் அனைவரும் சந்தித்தாக வேண்டும் அல்லது சந்திக்க நாம் காரணமாக இருக்க வேண்டும். நம்மை விட்டு பிரிந்த அத்தனை உறவுகளுடன் நாம் சென்று விடுவதில்லை. இருப்பினும் வலிகளையும், பிரிவுகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்.
இன்று twitty.... நாளை நானோ, யாரோ... இருக்கும் வரை அன்பும், பாதுகாப்பும் நம் உறவுகளுக்கு கொடுப்போம். பிரிவின் பின் இனிய நினைவுகளை நெஞ்சில் சுமக்கமேனும் மீதம் இருக்கும்.
Hifrafarooque
கருத்துகள்
கருத்துரையிடுக