விசாரணையா? என்ன விசாரணை? யாருக்கு விசாரணை?
வாங்க பார்க்கலாம்...
தொழுகை அற்ற அதானுக்கும் (பிறப்பு) அதான் அற்ற தொழுகைக்கும் (இறப்பு) இடைப்பட்ட சொற்ப காலமே வாழ்க்கை.
இன்று நாம் பலரும் பலருக்காக பல விதங்களில் ஓடிக்கொண்டிருக்கிறோம். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக, பிள்ளைகள் படிப்பிற்காக, கணவன் மனைவிக்காக, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக, தலைவர்கள் மக்களுக்காக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாம் எவ்வளவு தூரம் ஓடினாலும் எவ்வளவு பம்பரமாட்டம் ஆடினாலும் இறைவனால் எழுதப்பட்ட நேரம் வந்ததும் ஆடாமல் அசையாமல் நிற்கத்தானே வேண்டும்.
அந்த நிலமை தான் இன்று உங்களுக்கும் எனக்கும் எம் சமூகத்திற்கும் நாட்டுக்கும் முழு உலகிற்குமே ஏற்பட்டுள்ளது. இன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த லொக்_டவுண் காலத்தில் காலவரையற்ற நாள் வரை எம் ஓட்டத்தை நிறுத்தித் தான் ஆக வேண்டும்.
அவசர வாழ்க்கையைச் சற்று நிறுத்துவோம்! அவசிய வாழ்க்கையின் பால் நுழைவோம்!
இப்போது கொஞ்சம் விசாரணை செய்து கொள்வோம் வாரீர்!!
இந்த நிமிடம் உனக்காக!
கண்களைக் கொஞ்சம் மூடிக் கொள்!
உன் மூச்சுக் காற்றை நீயே உணர்ந்து உனக்காய் சுவாசி!
சுவாசத்தைக் கொஞ்சம் ஆழமாய் விடு!
ஆழ்மன ஓலங்களில் இருந்து விடுபடு!
அமைதி கொள்!
நிம்மதியாக இயல்புநிலையில் இரு!
"நீங்கள் விசாரிக்கப்பட முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கணிப்பிட்டுப் பார்க்கப்பட முன்னர் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்"
என்ற உமர் (ரழி) அவர்களின் கூற்றை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்!
ஆம்! நாளை மறுமையில் அல்லாஹ் நாம் செய்த நல்லது; கெட்டது அனைத்தையும் பற்றி கேள்வி கேட்டு கூலி வழங்குவதற்கு முன்பு நம்மை நாமே சுயமாக "முஹாஸபதுந் நப்ஸ்" எனும் சுயவிசாரணை செய்து எமது வாழ்க்கையை எம்மைப் படைத்த இறையோனின் திருப்தி பெறும் வாழ்வாய் மாற்றிட முயல்வோம்.
உன்னை நீயே விசாரித்துக் கொள்! :
- தூக்கத்தில் இருந்து விழித்ததும் என் றப்பை நினைவு கூர்ந்தேனா?
தூக்கத்திலிருந்து விழிக்கும்போது :
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனே நம்மை மரணிக்கச் செய்த பிறகு உயிர் கொடுத்தான். அவனிடமே (அனைத்தும்) எழுப்பப்படும். (ஸஹீஹுல் புகாரி)-
நபி (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதக்கூடியவராக இருந்தார்கள்.
- இன்று நான் சஹருக்கு முன்னதாகவே எழுந்து எனக்காய் அடிவானிற்கு வந்து "என்னிடம் கேட்பதற்கு யாராவது இருக்கிறீர்களா? நான் கொடுக்க தயாராக உள்ளேன்!" என காத்திருந்த என்னிறைவனிடம் தஹஜ்ஜுத் நேரம் தொழுகையால் அவனிடம் பேசினேனா? பிரார்த்தித்தேனா?
கண்ணீர் மல்க அழுது புலம்பிடவும் எம் றப்பிடம் மண்டியிட்டு மனம் விட்டு பேசிடவும் இது தகுந்த தருணமல்லவா?
ஸஹரினை ஸுன்னத்தான முறையில் நிறைவேற்றினேனா?
யூத கிறிஸ்தவர்களின் நோன்பிற்கும் எமது நோன்பிற்குமான வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உணவு உட்கொள்வதாகும்.(அல்-ஹதீஸ்)
- ஐவேளைத் தொழுகைகளையும் உரிய நேரத்தில் தொழுதேனா?
நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரிய அமல் எது என வினவப்பட்ட போது "தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுதல்" என்றார்கள். (முத்தபக்குன் அலைகி)
- ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் திக்ர், அவ்ராத் ஓதினேனா?
- ஐவேளைத் தொழுகையினதும் முன் பின் ஸுன்னத்துக்களை தொழுதேனா?
"யார் தினமும் 12ரக்காத் ஸுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு சுவனத்தில் மாளிகை கட்டப்படுகிறது" (புஹாரி)-
ஸுபஹ் : முன் 2 ளுஹர் : முன்4 (2 + 2) பின் : 2 மஹ்ரிப் : பின் 2 இஷா : பின் 2
- காலை; மாலை துஆக்கள் ஓதினேனா?
நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். (அல்குர்ஆன் : 2:152)
- தக்வாவுடன் தொழுதேனா? அல்குர்ஆனை பொருள் விளங்கி ஓதினேனா?
- மரணம், மறுமை பற்றி சிந்தித்தேனா?
- நரகத்தை விட்டு தூரமாக்கிவிடும் படியும் சுவர்க்கத்திறுகுள் நுழைவித்துவிடும் படியும் அல்லாஹ்விடம் மண்றாடினேனா?
- இன்றைய எனது உணவு, உடை, பொருளாதாரம் ஹலாலாக அமைந்ததா?
- பெற்றோர்களுடன் நல்ல முறையில் நடந்துகொண்டேனா? அவர்களுக்கு உபகாரம் செய்தேனா?
- அயலவர்களைச் சுகம் விசாரித்தேனா? அவர்களுக்கு தேவையான உதவிகள் ஏதும் செய்தேனா?
"யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் தனது அயலவரை கண்ணியப்படுத்தட்டும்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி)
- நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை குறைந்தது ஒன்றையாவது வாசிக்க முயற்சி செய்தேனா?
- எனது நண்பர்களுடன் நல்ல முன்மாதிரியான முறையில் நடந்து கொண்டேனா? தீய நண்பர்களை விட்டும் விலகிக் கொண்டேனா?
- அதிக சிரிப்பையும் வீண் கேளிக்கைகளையும் தவிர்ந்து கொண்டேனா?
- பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) செய்தேனா? தெளபா செய்தேனா? அதிகம் அதிகம் துஆ செய்துகொண்டேனா?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் தினமும் 70 க்கும் அதிகமான தடவைகள் பாவமன்னிப்பு கோருகிறேன். (ஸஹீஹ் புகாரி)
நாம்???
•• அஸ்தஃபிருல்லாஹ் •• அஸ்தஃபிருல்லாஹ வஅதூபு இலைஹி
- என் உள்ளம் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நிலைத்திருக்க துஆ செய்தேனா??
اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
அல்லாஹ்வே... உன்னை நினைவு கூருவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்! (ஸுனன் அபூதாவூது)
துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடிய தருணங்கள் பார்த்து பிரார்த்தனைகள் செய்தேனா?
•• ஸுஜுது •• அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில் •• மழை பொழியும் போது •• பிரையாணத்தில் •• நோன்புடன்
- கோபம், பொறாமை, கர்வம், மமதை, முகஸ்துதி, பொய் போன்ற கொடிய பண்புகளில் இருந்து என் உள்ளத்தை பாதுகாத்துக் கொண்டேனா?
- பொறுமை, பணிவு, தன்னடக்கம் போன்ற அழகிய பண்புகளை என்னுள் இணைத்துக் கொண்டேனா?
பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் ரஹ்மத்தும் நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்குர்ஆன் : 2:157)
- அல்லாஹ்வுக்காக சிறிதளவேனும் ஸதகா செய்தேனா?
- பிறரைப் பார்த்து மனதார புன்னகைத்தேனா?
- யாராவது ஒருவரின் புன்னகைக்கேனும் நான் காரணமாக இருந்தேனா?
- நலவுகள் என்னை அடைந்ததும்/ கேள்விப்பட்டதும் "அல்ஹம்துலில்லாஹ்_ அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று நன்றி செலுத்தினேனா?
- கெடுதிகள் என்னை அடைந்ததும்/ கேள்விப்பட்டதும் பொறுமையுடன் "இன்னாலிலலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் " கூறினேனா?
- என்னைவிட வயதில் கூடியவர்களுக்கு மரியாதையும், வயதில் குறைந்தவர்களுக்கு அன்பும் செயுதேனா?
"பெரியவர்களுக்கு மரியாதை செய்யாதவனும் சிறியவர்களுக்கு அன்பு காட்டாதவனும் என்னைச் சார்ந்தவர்களல்லர்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி)
- நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் மகோன்னதமான பணியில் பங்குகொண்டேனா?
"எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)" (அல்குர்ஆன் : 41:33)
- இன்று எத்தனை தடவைகள் ஸுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என துதிசெய்ய என் நாவைகள் உயர்ந்தன?
- இன்று சந்தர்ப்ப துஆக்கள் ஓதிக்கொண்டேனா?
- அறிவால், அழகால், பொருளாதாரத்தால் என்னை விட உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்களை காணும்போது பொறாமையோ பெருமையோ இன்றி எனதான நிஃமத்துக்கு என்னிறைவனை புகழ்ந்தேனா?
பேனா உயர்த்தப்பட்டு விட்டது! ஏடு காய்ந்து விட்டது! விசாரணையின் முடிவு என்ன? நன்மைத் தராசு கனத்து தீமைத் தராசு மெல்லியதானதா? அல்லது தீமைத் தராசு கனத்து நன்மைத் தராசு மெல்லியதானதா?
இந்த நிலையில் அல்லாஹ்வை சந்திக்க நீ தகுதியா? இந்த நிலையில் அல்லாஹ் உன்னை பார்க்க விரும்புவானா? வெறுப்பானா?
கண்கள் திறந்திடு ஆழமாய் சிந்தித்திடு எம்மைப் பற்றி நாமே சிந்தித்திட லொக்_டவுண் எமக்களித்த அழகிய நாட்கள் இவை!
கருத்துகள்
கருத்துரையிடுக