அதிரவைத்து கொண்டிருக்கும் கொரோனா!

உன் வருகையை நாம் கனவிலும் கூட எதிர்ப்பார்க்கவில்லை. ஆனாலும் உன் வருகை கனவாகவே இருக்க கூடாதா - என மனம் ஏங்குகிறது.

நீ இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிக்க எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட சதியா? இல்லை - இறைநாட்ட விதியா? புரியவில்லை எமக்கு.

உனது வருகை எமது வீட்டுக் கதவுகளை மூட வைத்தது இப்படி இருக்கையில் எங்கனம் வரவேற்போம் உன்னை?

பதில் கூறு! உன்னால் எமது அன்றாட வாழ்வில் பல சிக்கல்கள்! பல நெருக்கடிகள்! பல பிரச்சினைகள்!

என்றாலும் உன்னை குறை கூற மனம் வரவில்லை எமக்கு - ஏன் தெரியுமா?

நீ எமக்கு மரண பயத்தை மட்டும் அல்ல மறுமை நினைவையும் இதயத்தில் ஆழமாக புகுத்தி விட்டாய்! மக்களிடையே சமத்துவத்தை உணர்த்தி விட்டாய்!

இதுவரை அல்குர்ஆனை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் அதை எடுத்து ஓதும் நிலையை அமைத்தாய்!

சுத்தத்தை அனுபவ ரீதியாக கற்றுத் தந்தாய்!

முகத்திரைக்கு முத்திரை பதித்து விமர்சித்தவர்கள் அதை இன்று ஆதரிக்கும் தருணத்தை தந்தாய்!

உலக மாயையில் மதியிழந்து இருந்தோரின் மயக்கத்தை தெளியச் செய்தாய்!

இனி எப்படி உன்னை தூற்ற முடியும்? பதில் கூறு!

சில நேரம் நீ எமது ஈமானை சோதிக்க வந்த ஆசிரியனா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

நீ வந்த நோக்கங்களை அடைந்து விட்டாய் - ஆனால் ஏன் இன்னும் நீ எம்மை விட்டு செல்லவில்லை?

இன்னும் எத்தனை காலம் தான் நீ எம்மை திணறடிக்க போகிறாய்? போதும் இனியாவது எம்மை விட்டு விடு!

மறுமைக்காக எமது வாழ்வை அர்ப்பணித்து வாழ வழி விடு!

Noor Shahidha. Badulla.

கருத்துகள்