பிந்தாமல் பிதுங்காமல் பின்னிரவில் பிடரி உயர்த்திப் பிரார்த்தனை செய்!
விதியது தலை விதி யாம் பிறப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகள் முன்னரே அழகாய் கற்சிதமாய் எழுதப்பட்டு விட்டது ஏகோன் இறைவனால்!
மறைக்கவும் முடியா மறக்கவும் முடியா மாற்றவும் முடியா பேருண்மையிது!
தலை விதியே தலை எழுத்தென தலை குனிந்து வாழாதே! விதியை மதி! விதியை மாற்று! விண்ணகம் வரை வியாபித்துச் சேரும் பிரார்த்தனை மூலம்!
பிரார்த்தனை தவிர வேறெந்த சக்தியும் சக்தியற்றதே விதியை மாற்றிட!
முக்கி முனகிக் கொண்டிருக்கும் முளு முஸ்லிம் உம்மத்திற்கும் பிரார்த்தனை செய்!
ஏங்கி ஏங்கி ஏக்கங்களே உருவாகிப் போன ஏழைகளுக்கும் பிரார்த்தனை செய்!!
அழுது அழுது அநாதரவற்றுப் போன அநாதைகளுக்கும் பிரார்த்தனை செய்!
விக்கி விம்மி வெந்து போன விதவைகளுக்கும் பிரார்த்தனை செய்!
இஸ்லாம் துறந்து இன்பம் காணும் இளைஞர் யுவதிகளுக்கும் பிரார்த்தனை செய்!
முதிர்ந்து உதிர்ந்து முத்திப் போன முதிர் கன்னிகளுக்கும் பிரார்த்தனை செய்!
நொந்து நொடிந்து நொறுங்கிப் போன நோயாளிகளுக்கும் பிரார்த்தனை செய்!
விழி வளியே வலி வழிய தலையணைகளைத் துயர் துடைப்பானாய் கொண்டு இராத்திரிகளைக் கடத்திடும் மன வேதனையில் மக்கிக் கொண்டிருக்கும் மாந்தர்களுக்கும் பிரார்த்தனை செய்!
தளர்ந்து நடுங்கி தள்ளாடி நடன நடை போடும் முதியோருக்கும் பிரார்த்தனை செய்!!
பேனா உயர்த்தப்பட்டாலும் ஏடுகள் காய்ந்து விட்டாலும் விதியினை மாற்றலாம் பிரார்த்தனை செய்!!
"துஆவைக் கொண்டே தவிர கழாவை மாற்ற முடியாது! (ஆதாரம்: திர்மிதி) "
கருத்துகள்
கருத்துரையிடுக