மாத்தறை மாவட்ட முஸ்லிம்களே! இலங்கை அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால் கடந்த 76 ஆண்டுகளாக பிரபுக்களினதும், ஊழல் மோசடியாளர்களினதும், இனவாதிகளினதும் கைகளிலே இலங்கையின் ஆட்சி அதிகாரம் காணப்பட்டது. அதன் பிரதிபலனாக இலங்கைக்கே என்று காணப்பட்ட மத இன ரீதியான பன்முகத்தன்மையுடன் கூடிய கலை கலாசார வாழ்க்கை முறை, நீதி நேர்மை, நியாயம், அரசியல் பொருளாதரம் என பல துறைகளில் நாட்டில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
இதற்கு எதிரான போராட்டம் நாட்டின் மீது இனவாதத்தை கடந்து நேசம் கொண்ட இலங்கையர்களிடமிருந்து 2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் ஆரம்பமானது. அதன் இரண்டாம் கட்டமானது கடந்த ஜனாதிபதி தேர்தலில் சகோதரர் அனுர குமார திஸநாயக்கவின் வெற்றியுடன் முடிவடைந்துள்ளது.
அந்த ஜனநாயக போராட்டத்தை முழுமையாக வெற்றியடையச் செய்வதற்கான வாய்ப்பை ஜனாதிபதி அனுர குமாரா திஸாநாயக்க அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்து பாராளுமன்ற தேர்தல் ஊடாக உருவாக்கியுள்ளார். எனவே அன்று சுதந்திர தேசத்தை உருவாக்க முஸ்லிம்கள் போராட்ட களத்தில் இருந்து போராடியது போன்று இன்று ஊழல் மோசடியற்ற நாட்டை உருவாக்க பாராளுமன்றத்திற்கு பொருத்தமான முஸ்லிம் வேட்பாளர்களை அனுப்ப வாக்குச் சாவடியில் பொருத்தமான கட்சி மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்து தமது கடமையை சரியாக நிறைவேற்றும் பாரிய பொறுப்புடன் உள்ளோம்.
இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் கீரியும் பாம்புமாக அமையலாம் அல்லது நகமும் சதையுமாக அமையலாம். அது இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறும் கட்சியை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது இரண்டு தேர்தலிலும் ஓரே கட்சி வெற்றி பெற்றால் நகமும் சதையும் போல இணைபிரியாது நாம் எதிர்பார்க்கும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யலாம். ஆனால் இரண்டு தேர்தலிலும் எதிர் எதிர் கட்சிகள் வெற்றி பெற்றால் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளும் கீரியும் பாம்பும் போல பிரச்சினைகளுடன்தான் காணப்படும். அதுதான் கடந்த 2014, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் எதிர் எதிர் கட்சிகள் வெற்றி பெற்றதால் பொது மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நம்மால் அன்று அடைய முடியவில்லை.
எனவே ஊழல் மோசடி மற்றும் குடும்ப பரம்பரை ஆட்சி முறைக்கு எதிராக நாம் ஆரம்பித்துள்ள ஜனநாயக போராட்டத்தில் பூரண வெற்றியடைய வேண்டும் எனில் நகமும் சதையும் போல பாராளுமன்ற தேர்தலில் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கும் விதத்தில் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்க வேண்டும்.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்களே! இலங்கை பல்லின மத கலாசாரங்களை உடைய நாடு என்ற வகையில் மாத்தறை மாவட்டத்தின் ஊடாக பாராளுமன்றம் அனுப்பும் உறுப்பினர்களிலும் இன மத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். இது அரசியல் இனவாதமல்ல மாறாக அரசியல் பிரதிநிதித்துவம். வானவில்லின் அழகிற்கு அதன் எழு நிறங்களும் பங்களிப்பு செய்வது போல தேசிய மக்கள் சக்தியின் வெற்றியிலும் இலங்கையின் அனைத்து இன மத பிரதிநிதிகளினதும் பங்களிப்பு அவசியமாகும்.
அவ்வகையில் இவ் இன மத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியானது பொதுவாக அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அவ்வகையில் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களையும் இளைஞர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பொறியியலாளர் சகோதரர் அர்கம் இல்யாஸ் அவர்களை வேட்பாளராக களமிறக்கியுள்ளனர்.
அர்கம் இல்யாஸ் அவர்கள் முஸ்லிம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்தாலும் அவர்தான் மாத்தறை மாவட்ட இளைஞர்கள் சார்பாகவும் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள ஒரே ஒரு வேட்பாளராகும்.
இவருக்கு வாக்களிப்பதனூடாக எதிர்வரும் காலத்தில் நல்ல நோக்கத்துடன் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடவுள்ள முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் தமது சமூகம் வாக்களித்து கை கொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். ஏனெனில் கடந்த காலங்களிலும் பல கட்சிகள் மாத்தறை மாவட்டம் சார்பாக முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
ஆனால் அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் கறி வேப்பிலையாக பயன்படுத்தி அதாவது பெரும்பான்மை பிரதான வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் சமூகத்தின் தம் கட்சிசார்பான வாக்குகளை சேகரித்து கொடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டனர். என்பதை தேர்தல் வராலாற்றை ஆராய்ந்தால் அறிந்து கொள்ள முடியும்.
மாத்தறை மாவட்ட வெலிகம, மாத்தறை, கந்தறை, திக்குவெல்ல, மீ எல்ல, கிரிந்த, போர்வை, ஹொரகொட, தெனியாய பிரதேசங்களை சேர்ந்த முஸ்லிம் வாக்காளர்களே ! கடந்த கால கட்சி பேதங்களை மறந்து மாத்தறை மாவட்டத்தின் முஸ்லிம்கள் உட்பட அனைத்து இன மத இளைஞர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் வேட்பாளராக களமிறங்கியுள்ள பொறியியலாளர் சகோதரர் அர்கம் இல்யாஸ் அவர்களுக்கு வாக்களித்து எமது பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக