கற்பித்தல் மேற்பார்வை என்பது ஒரு கலை



வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து டீம் வருகிறது என்றால், பாடசாலைகளில் ஒரு விதமான அச்ச உணர்வு எழுகிறது. ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பதட்டம் தொற்றிக் கொள்கிறது. ஏன் இப்படி?

அதிகாரத் தோரணையில் நடந்து கொள்ளல், ஆசிரியர்களது பாடக்குறிப்புகளை தூக்கி எறிதல், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களை அவமானப்படுத்துதல், அவர்களை நிற்க வைத்துக் கேள்வி கேட்டு அச்சுறுத்தல், அவர்களது குறைகளை பகிரங்கப்படுத்துதல், அவர்களது உணர்வுகளையும் மரியாதையையும் உதாசீனம் செய்தல், தமது தனிப்பட்ட கோப தாபங்களைத் தீர்த்துக் கொள்ளல்.

மேற்பார்வை என்ற பெயரில் நடைபெறும் இவ்வாறான செயல்கள் ஆசிரியர்களை மனஅழுத்தத்திற்குள் தள்ளுகின்றன. அவை ஆசிரியர்களின் தன்னம்பிக்கையைப் பெரிதும் பாதிக்கின்றன.

பாடசாலை ஆசிரியர்களது கற்பித்தலை மேற்பார்வை செய்ய வரும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் சிலரது இவ்வாறான தவறான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

பாடசாலைகளுக்கு கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் வருகை தருவது அவசியமான ஒன்று. அது கல்வித் தரத்தை மேம்படுத்துவதையும், ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சில உத்தியோகத்தர்கள் மேற்பார்வை எதற்காக என்ற அடிப்படை அறிவு கூட இன்றி முறைகேடாக நடந்து கொள்கின்றனர். கற்பித்தல் மேற்பார்வை தொடர்பான எண்ணக்கருக்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான அணுகுமுறைகளைக் கையாளுகின்றனர்.

வகுப்பறையில் நிற்கும் ஆசிரியர் ஒரு இயந்திரம் அல்ல; அவர் உணர்வுகளும் மரியாதையும் கொண்ட மனிதர். ஓர் ஆசிரியரை அவமானப்படுத்துவது எளிது. ஆனால், அவரை ஊக்கப்படுத்தி முன்னேற்றுவது தான் உண்மையான கல்வி தலைமைத்துவம்.

ஒரு கல்வி அதிகாரி நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவெனில், மேற்பார்வை என்பது தவறு தேடும் செயல் அல்ல. அது விருத்தியை ஏற்படுத்தும் ஒரு சிறந்த பணி. 

ஆசிரியரை மேற்பார்வை செய்வது என்பது, அவரை அச்சுறுத்துவதற்கான செயலாக இருக்கக் கூடாது. அவரை முன்னேற்றுவதற்கான சேவையாக இருக்க வேண்டும். வகுப்பறை என்பது எல்லா நாளும் ஒரே மாதிரியாக இருக்காது.

சில நாட்களில் மாணவர்கள் ஆர்வமாக இருப்பார்கள்; சில நாட்களில் சவாலாக இருப்பார்கள். இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் ஒரு சில நிமிட அவதானிப்பின் அடிப்படையில் ஓர் ஆசிரியரின் முழுத் திறமையையும் தீர்மானித்துவிட முடியாது.

ஒரு நல்ல மேற்பார்வையாளர் ஆசிரியரை பயப்பட வைக்க மாட்டார்; சிந்திக்க வைப்பார். அவர் தன்னை “அதிகாரி” என்று உணர்த்த மாட்டார். “வழிகாட்டி” என்று உணர்த்துவார்.

ஒரு குறை காணப்பட்டால் அதை தனிப்பட்ட முறையில் கலந்துரையாடலாம். “இதை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம்” என்று வழிகாட்டலாம். ஒரு சிறிய பாராட்டும் கூட ஆசிரியர்களின் உள்ளங்களில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

கல்வி உலகம் இன்று சிகிச்சை முறை மேற்பார்வை, ஆதரவு அடிப்படையிலான வழிகாட்டல், ஆசிரியர் வாண்மை விருத்தி போன்ற புதிய சிந்தனைகளின் பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படியான நிலையில் இன்னும் சில இடங்களில் அச்சத்தை உருவாக்கும் மேற்பார்வை நடைமுறைகள் தொடர்வது கவலைக்குரியது. ஓர் ஆசிரியரை மதிப்பது என்பது ஒருவரை மட்டும் மதிப்பது அல்ல. அவரால் உருவாக்கப்படும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் மதிப்பதாகும்.

இவ்வகையில், ஆசிரியர்களை மேற்பார்வை செய்யச் செல்லும் கல்வி உத்தியோகத்தர்கள் மேற்பார்வையின் போது தாம் செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை என்பது பற்றிய தெளிவான அறிவும் விளக்கமும் கொண்டிருக்க வேண்டும். 

செய்ய வேண்டியவை

  1. ஆசிரியரை மரியாதையுடனும் மனிதநேயத்துடனும் அணுகுதல்.
  2. வகுப்பறைச் சூழலை முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சித்தல்.
  3. ஆசிரியரின் பலங்களை முதலில் பாராட்டுதல்.
  4. குறைகளை தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுதல்.
  5. “இதை இன்னும் எப்படி மேம்படுத்தலாம்?” என்ற அணுகுமுறையில் வழிகாட்டுதல்.
  6. ஆசிரியரின் மனநிலையையும் வேலைப்பளுவையும் புரிந்து கொள்ள முயற்சித்தல்.
  7. மாணவர்களின் கற்றலை மையமாகக் கொண்டு அவதானித்தல்.
  8. ஆசிரியருக்கு தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை பயன்படுத்துதல்.
  9. பாடக்குறிப்புகள் மற்றும் கற்பித்தல் வளங்களை ஆக்கபூர்வமாக மதிப்பீடு செய்தல்.
  10. நல்ல கற்பித்தல் நடைமுறைகளை எடுத்துக்காட்டி பகிர்ந்து கொள்ளுதல்.
  11. ஆசிரியரை அச்சப்படுத்தாமல் சிந்திக்க வைக்கும் சினேகபூர்வமான கலந்துரையாடலை உருவாக்குதல்.
  12. மேற்பார்வையை “தர நிர்ணயம்” என்றில்லாமல், ஆசிரியர் வாண்மை விருத்தி என்ற நோக்கில் மேற்கொள்ளுதல்.

செய்யக் கூடாதவை

  1. மாணவர்கள் முன்னிலையில் வைத்து ஆசிரியரை அவமானப்படுத்தக் கூடாது.
  2. அதிகாரத் தோரணையில் பேசுதல் அல்லது நடந்து கொள்தல் கூடாது.
  3. ஆசிரியரின் கற்பித்தலை கேலி அல்லது ஏளனமாக விமர்சித்தல் கூடாது.
  4. ஒரு சில நிமிட அவதானிப்பின் அடிப்படையில் முழுத் தீர்ப்பளித்தல் கூடாது.
  5. ஆசிரியரின் தனிப்பட்ட சூழ்நிலைகளையும் வகுப்பறைச் சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் மதிப்பிடுதல் கூடாது.
  6. அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கும் விதத்தில் மேற்பார்வைப் பணியை நடத்தக் கூடாது.
  7. மற்ற ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு தரக்குறைவாகப் பேசக் கூடாது.
  8. பொதுமக்கள் அல்லது மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது.
  9. பாடக்குறிப்புகளை அலட்சியமாக தூக்கி எறிதல் அல்லது அவமதித்தல் கூடாது.
  10. “நான் அதிகாரி” என்ற மனநிலையுடன் அணுகக் கூடாது.
  11. ஆசிரியரின் கருத்துகளையும் விளக்கங்களையும் கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது.
  12. மேற்பார்வையை தண்டனையாகவோ பயமுறுத்தும் செயலாகவோ மாற்றக் கூடாது.
மேற்பார்வை செய்ய வரும் ஒவ்வொரு அதிகாரியும் ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். “நான் இன்று ஓர் ஆசிரியரின் மனஉறுதியை உயர்த்திவிட்டுச் செல்கிறேனா? அல்லது அதை உடைத்துவிட்டுச் செல்கிறேனா?”

ஏனெனில், மரியாதை பெறும் ஆசிரியரே மரியாதையுள்ள தலைமுறையை உருவாக்க முடியும்.

தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளரான எமக்கு கற்பித்தலை மேற்பார்வை செய்வதும் வினைத்திறனான கற்பித்தலுக்கு வழிகாட்டுவதுமே பிரதான பணி. 

எம்.யூ.எம்.ஸபீர் விரிவுரையாளர் தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி



கருத்துகள்