பெரும் தாபிஈ அறிஞர் சுஃப்யான் அஸ்-ஸௌரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அறிவிப்பதாவது:
ஒரு நாள் ஷாம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து கூறினார்:
“ஸஃவான் பின் ஸுலைம் அவர்கள் எங்கு இருக்கிறார் என்று எனக்கு வழிகாட்டுங்கள். ஏனெனில், அவரை சொர்க்கத்தில் நுழையும் நிலையில் நான் கனவில் கண்டேன்!”
இதைக் கேட்டவர்கள் ஆச்சரியமடைந்து கேட்டனர்:
“எந்த அமலின் காரணமாக அவருக்கு இவ்வளவு உயர்ந்த பாக்கியம் கிடைத்தது?”
அதற்கு அவர் சொன்னார்: “ஒரு ஏழை மனிதனுக்கு அணிய ஒரு சட்டையை அவர் அளித்ததினால்!”
பின்னர் இவ் விடயம் குறித்து ஸஃவான் பின் ஸுலைம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்டபோது,
அவர் பணிவுடன் கூறினார்:
“ஒரு குளிரால் நடுங்கிய இரவில், நான் மஸ்ஜிதிலிருந்து வெளியே வந்தேன். அப்போது, உடை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனை கண்டேன். அவனின் நிலை என் உள்ளத்தை உருக வைத்தது. உடனே, நான் அணிந்திருந்த என் சட்டையை கழற்றி, அவனுக்கு ஆடை அணிவித்து விட்டேன்.”
இந்த நிகழ்ச்சியை அபூ நுஐம் அல்-அஸ்பஹானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ‘ஹில்யதுல் அவ்லியா’ என்னும் நூலில் பதிவு செய்துள்ளார். (தொகுதி 3, பக்கம் 161)
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் நாம் சிறியதாக நினைக்கும் ஒரு நன்மையும் அல்லாஹ்விடம் சொர்க்கம் சேர்க்கும் காரணமாக மாறலாம். ஏழைகளைத் தேடி உதவுவது ஈமானின் இனிமையையும், இறைவனின் திருப்தியையும் பெற்றுத் தரும்,
எமது எந்த அமலை வைத்து இறைவனின் பொருத்தம் கிடைக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆகவே எப்போதும் உற்சாகமாக, நற்செயல்களை , மனத்தூய்மையுடன் செய்வோம்!
அப்துல் வாஜித் ஐய்யூப் (இன்ஆமீ)

கருத்துகள்
கருத்துரையிடுக